ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் மதாந்தம் சம்பவிக்கின்றன. சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘சதுர்த்தி விரதம்’ என்று கொள்வர்.
அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘நாக சதுர்த்தி’ என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘விநாயக சதுர்த்தி’ என்றும் கைக்கொள்கின்றனர். மாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியை ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பர்.
விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை ‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’ என்கின்றனர். இருந்தும் ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை ‘சங்கடஹர விநாயக சதுர்த்தி’ என்று வழங்குவர்.
ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் ‘விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது. சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான ‘தேவி’ விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள் என்றும், அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும் கூறுவர்.