பிரதோஷ விரதம் இருக்க விரும்புகிறவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஒன்றில் வரும், சனிக்கிழமை பிரதோஷ நாளாக பார்த்து இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் நீராடி காலைக் கடன்களை முடிக்க வேண்டும்.
சிவன் கோவிலில் சுவாமிக்கு முன் உள்ள நந்திக்கு அருகம்புல் மாலை சாத்தி, சிவப்பு அரிசி நைவேத்தியம் செய்ய வேண்டும். நெய்விளக்கு வைத்து வழிபடுவது நல்லது. முதலில் சிவபெருமானையும், ரிஷப (நந்தி) தேவரையும் வணங்க வேண்டும். பின்னர் இடமாக (பிரதட்சணமாக) சென்று சண்டிகேசுவரரை வணங்கி விட்டு சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் சிவன் நந்தியை தரிசிக்க வேண்டும்.
வழக்கம் போல் ஆலயத்தை வலமாக சுற்றிவரும்போது, நந்திதேவரிடம் வந்து நின்றபடி அவருடைய கொம்புகளுக்கு நடுவே சிவலிங்கத்துக்கு தீபாராதனை காட்டுவதை கண்டுவழிபட வேண்டும். இதுமாதிரி 3 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.
பின்னர் ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி வலம் வரும்போது, உடன்சென்று பிரதட்சணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும்.
விபூதியை நெற்றியில் அணிந்து கொண்டு, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்தப்பட்ட புனிதநீரை அருந்த வேண்டும். வீட்டுக்குச்சென்று யாராவது ஏழைக்கு அன்னதானம் வழங்குவதும் நன்மை அளிக்கும்.