நரசிம்மரை பூஜித்து வழிபடுவது மிகவும் சுலபம். அனைவருக்கும் அவர் எளிதானவர். முற்பிறவித் தவறுகளின் பலனாக ஏற்படும் மிகக் கொடிய துன்பத்தையும் ஒரு நொடியில் போக்கி அருளக்கூடிய ஆற்றல் நரசிம்மரைக் கிரக தோஷப் பரிகாரமாக எவரும் வழிபடலாம். அதற்கு உடனடியாக பலனும் காண முடியும்.
தினமும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் படத்தை வைத்து, நெய் தீபம் ஏற்றிக் குறைந்தது 12 முறையாவது வலம் வந்து வணங்க வேண்டும். வணங்கிய பிறகு வெல்லத்தினால் செய்த பானகம் நைவேத்தியம் வேண்டும்.
48 நாள்களாவது பூஜித்து வர வேண்டும். மாலை நேரத்தில் செய்வது விசேஷப் பலன் தரும். ஏனெனில் அவர் நரசிங்கமாக அவதரித்தது மாலை நேரத்தில்தான்.
ஆனால் ஒன்று, ஸ்ரீலட்சுமி நரசிம்மர் மட்டுமின்றி, தெய்வத்தின் எந்த உருவையும், தோஷப் பரிகாரமாகப் பூஜித்து வரும் காலத்தில், அசைவ உணவைத் தவிர்ப்பதும், நீராடி, நியமத்துடனும், தூய்மையான உள்ளத்துடனும் நம்பிக்கை, பக்தியுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஸ்ரீநரசிம்மரை விரதம் இருந்து பிரதோஷத்தன்று வழிபடுவது சிறப்பாகும். அன்று மாலை லட்சுமி நரசிம்மர் போட்டோவை வீட்டில் வைத்து சந்தனம், துளசியால் அலங்கரித்து பானகம் வைத்து வழிபடவும்.
ஸ்ரீலட்சுமி நரசிம்மரை விரதம் இருந்து சுவாதி நட்சத்திரத்தன்றும், செவ்வாய்க்கிழமையிலும், பிரதோஷ நாளன்றும் வழிபடலாம். நரசிம்மர் துதியை தினமும் சொல்லி தியானித்துவர ஏவல், பில்லி சூனியம், காரிய தடை, கடன் தொல்லை இவைகள் நீங்கி சுகம் பெறலாம்.
திருமண தடை உள்ளவர்கள் பிரதோஷ தினத்தன்று விரதம் இருந்து பானகம் வைத்து நரசிம்மரை வழிபட்டு வர வேண்டும். நரசிம்மர் அருளால் விரைவில் தடை நீங்கி நல்லபடியாக திருமணம் நடைபெறும்.