கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவார விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம் பெறும் பேறு பெற்றான். சோமவார விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சந்தோஷம் கூடும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை.
சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் விரதங்களுள் சோமவார விரதம் முக்கியமானது. சந்திரனுக்குரிய நாளான திங்கள்கிழமையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது.
க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம்பெற்று சிறப்பு பெற்றான். அவனுக்குச் சிவபெருமான் அருள்புரிந்ததுடன், அவனை தனது முடிமேல் சூடிக்கொண்டு ‘சந்திரசேகரர்’ என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்துச்சோமவாரங்கள் (திங்கள் கிழமைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன.இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம்.