சுந்தரகாண்டம் பகுதி-6
சுரசா! வாயுபுத்திரன் ஆஞ்சநேயன் ஆகாயவழியில் வருகிறான். அவனுக்கு சற்றுநேரம் இடைஞ்சல் கொடு. நீ வைக்கும் தேர்வில், அவன் தப்பிப் பிழைக்கிறானா பார்ப்போம், என்றனர்.மனிதனுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கு கூட சோதனையைக் கொடுப்பதில் கடவுளுக்கு எப்போதுமே ஆனந்தம். அந்த சோதனையைக் கண்டு பயந்தோடுபவன் கடவுளின் அன்புக்கு பாத்திரமாகமாட்டான். சோதனையை எதிர்ப்பவனை ஓரளவு விரும்புவான். ஆனால், அந்த சோதனையை ஆனந்தமாக ஏற்று அனுபவிப்பவனுக்காக தன்னையே கொடுத்து விடுவான். சுந்தரகாண்டம் ஒரு ஆனந்த காண்டம். மரணத்தின் விளிம்பிற்குச் சென்று விட்ட சீதாதேவியின் மனதில் நம்பிக்கை கீற்றையும், ஆனந்ததத்தையும் உருவாக்கிய காண்டம். அங்கே (இலங்கை) அவள் ராவணனைக் கண்டு சற்றும் நடுங்காமல், அவனை எதிர்த்துப் பேசுவதில் ஆனந்தம் கண்டாள். இங்கே, ஆஞ்சநேயர் சுரஸையுடன் என்ன விளையாட்டு விளையாடப் போகிறார் என்பதை ஆனந்தமாக அனுபவிப்போமோ!சுரஸை ஆஞ்சநேயரை வழிமறித்தாள். கோரைப்பற்களும், கொடிய உருவமும் கொண்ட பூதகி வடிவில் அவர் முன் நின்றாள்.ஏ மாருதி! என் பெயர் சுரஸை. நீ எனக்கு இரையாக வேண்டும் என்பது தேவர்களின் கட்டளை. நீயாக என் வாய்க்குள் போய் விடுகிறாயா? இல்லை, நானே உன்னைக் கசக்கிப் பிழிந்து விழுங்கி விடட்டுமா? ஆஞ்சநேயர் அவளுக்கு மரியாதை கொடுத்தார்.யாராவது நம்மிடம் வம்புக்கு வருகிறார்கள் என வைத்துக் கொள்வோம். நாமும் வரிந்து கட்டிக் கொண்டு போனால், சண்டை தீவிரமாகி விடும். அடிதடியில் போய் முடியும். வம்புக்காரர்களிடம் பொறுமை காட்ட வேண்டும். இன்முகம் காட்ட வேண்டும். அதே நேரம் அவர்களிடம் இருந்து புத்திசாலித்தனமாக நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும்.ஆஞ்சநேயர் நினைத்தால் சுரஸையை ஒரே அடியில் சாய்த்து விடுவார். ஆனால், அவள் பெண். பெண்களுக்கு அருள்பாலிப்பதில் ஆஞ்சநேயனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை. அந்த மகாலட்சுமியின் அம்சமான சீதாவையே அவன் காப்பாற்றியிருக்கிறான் என்றால், சாதாரண மானிடப்பிறவிகளான நாம் அவனைச் சரணடைந்தால் கேட்கவும் வேண்டுமோ! பூதகியாயினும், தன்னையே கொல்ல வந்தவளாயினும் ஆஞ்சநேயர் அவளைக் கையெடுத்து வணங்கினார்.தாயே! தசரத புத்திரரான ராமபிரான், தன் சகோதரன் லட்சுமணனோடும், மனைவி ஜானகியோடும் தண்டகாரண்யத்தில் இருந்தபோது, ராவணன் என்ற அசுரன் அவளை எடுத்துச் சென்று விட்டான். அவள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஸ்ரீராமன் என்னிடம் ஒப்படைத் துள்ளார். அவருடைய ராஜ்யமே உலகெங்கும் நடக்கிறது. அவ்வகையில், அவருக்கு உதவ வேண்டியது உன் கடமை. அது மட்டுமல்ல! ஒருவர் ஒரு பணியை நம்மை நம்பி ஒப்படைக்கும் போது, அதை முழுமையாக முடித்துத் தர வேண்டியதும் கடமை தானே! நம்பியவர்களை நட்டாற்றில் விட்டால், அது பெரிய பாவமல்லவா? அத்தகைய பாவத்துக்கு என்னை ஆளாக்கி விடாதே! உனக்கு இரையாவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. ஏனெனில், ஒருவரின் பசியைத் தீர்த்து வைக்க வேண்டியது இன்னொருவரின் கடமை. ஆனால், சீதையைப் பற்றி கணநேரத்தில் அறிந்து, ராமபிரானிடம் தகவல் சொல்லிவிட்டு, உன்னிடம் வந்து இரையாகிறேன், என்றார் மிகுந்த பணிவுடன். சுரஸை மறுத்தாள்.ஆஞ்சநேயா! எனக்கு பிரம்மா ஒரு வரம் தந்திருக்கிறார். என்னைத் தாண்டிச் செல்பவர்கள் யாராயினும் என் வாயில் புகுந்து வெளியேறிச் செல்ல வேண்டும். அதன்படி நீ நடந்து கொள், என்றாள். ஆஞ்சநேயர் சம்மதித்தார். தன் குறுகிய உருவத்தை பெரிதாக்கினார். அவள் அதையும் விட அதிகமாக வாயை அகலப்படுத்தினாள். ஆஞ்சநேயர் உள்ளே நுழையும் போதே தன் உருவத்தை மேலும் நீட்டித்தார். இப்படியாக இருவரும் மாறி மாறி அளவைக் கூட்ட ஆஞ்சநேயர் திடீரென தன் அளவை மிகமிகச் சுருக்கி கட்டை விரல் அளவுக்கு மாறி, அவள் காது வழியே வெளிப்பட்டார். தட்சப்பிரஜாபதியின் புத்திரியான சுரஸையே! உன்னை மீண்டும் வணங்குகிறேன். பிரம்மாவிடம் நீ பெற்ற வரத்துக்கு பாதகமின்றி நடந்து உன்னிடமிருந்து வெளிப்பட்டேன். நீ என்னை வாழ்த்தி வழியனுப்பு, என்றார்.சுரஸை தன் சுயரூபமான தேவமங்கை வடிவம் காட்டி, ஆஞ்சநேயனே! நீ மாபெரும் வீரன். நீ செல்லும் காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன், என ஆசிர்வதித்து வழியனுப்பி வைத்தாள். வீட்டில் குழந்தைகளிடம் பூதம் வருகிறது, பேய் வருகிறது, பிசாசு வருகிறது என்றெல்லாம் நாம் பயமுறுத்தக்கூடாது. அவை வந்தாலும், நாம் எதிர்த்து நிற்க வேண்டுமெனக் கற்றுத்தர வேண்டும். ஆஞ்சநேயர் சுரஸையிடம் தப்பித்துச் சென்ற இந்த வரலாறைக் குழந்தைகளுக்கு எளிய முறையில் கற்றுக் கொடுத்தால் அவர்களின் ஆற்றல் மட்டுமின்றி, கல்வியறிவும் விருத்தியடையும்.சுந்தரகாண்டம் எந்த நோயையும் தீர்க்கும் மாமருந்து. எந்த கிரக தோஷத்தையும் அது நீக்கி விடும். குழந்தைகளுக்கு தைரியத்தையும், கல்வி நலனையும் தரும். திருமணமாகாத கன்னிகள் இந்த அத்தியாயங்களைச் சேர்த்து வைத்து நாளுக்கு ஒன்று வீதம் படித்தால், ஸ்ரீராமன் போல் நல்ல மணவாளன் அமைவார்.இந்த பகுதியில், ஆஞ்சநேயர் சுரஸையிடம், தசரத புத்திரன் ராமனின் மனைவியை ராவணன் கடத்திச் சென்றதாகச் சொல்கிறார். ராமன் என்றாலே பிரபலம் என்றாலும், தசரதர் பெயரையும் ஏன் சொன்னார் தெரியுமா? தசரதர் ராமனையும் விஞ்சிய வீரர். தன் நாட்டில் சனி பார்வையால் பஞ்சம் வர இருந்த நேரத்தில் அவர் விண்ணுலகுக்கே தேரில் சென்று சனீஸ்வரனை எதிர்க்கச் சென்ற கடமை வீரர். கடமையின் காவலர்களாக அரசுப்பொறுப்பில் உள்ளவர்கள் இருக்க வேண்டும் என்பதை சுந்தரகாண்டம் காட்டுகிறது.தசரதர் என்பதே காரணப்பெயர் தான். அவரது நிஜப்பெயர் தர்மராஜா. விண்ணுலகம், பாதாளம் உள்ளிட்ட பத்து திசைகளில் ரதம் செலுத்தும் வல்லமை பெற்ற மாவீரர் தசரதர். அதனால் தான் அவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது. அதுவே நிலைத்தும் விட்டது. அப்படிப்பட்ட மாவீரரின் மருமகளைத் தேடி தொடர்ந்து பறந்தார் ஆஞ்சநேயர்.
*”ஆஞ்சநேயருக்காக கம்பர் பாடிய பாடல்:*
*இராமாயணம் பாடத் தொடங்கிய கம்பர்,
கடவுள் வாழ்த்துப் பகுதியில் ஆஞ்சநேயருக்காவும் ஒரு பாடல் பாடியுள்ளார்.
*ஆஞ்சநேயர்:*
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்குகண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவர் எம்மை அளித்துக் காப்பான்..
*இதன் பொருள்:*
ஐம்பூதங்களுள் ஒன்றாகிய காற்றுக்கு மைந்தனாகிய அனுமன்,
ஐம்பூதங்களுள் ஒன்றாகிய நீர்ப்பரப்பாகிய கடலைத்தாண்டி,
ஐம்பூதங்களுள் ஒன்றாகிய ஆகாயத்தையே வழியாகக்கொண்டு இலங்கையை அடைந்து,
ஐம்பூதங்களுள் ஒன்றாகிய நிலமகள் பெற்றெடுத்த சீதையைக்கண்டு,
அயலார் ஊரில் ஐம்பூதங்களுள் ஒன்றாகிய தீயை வைத்தான்.
இதன் மூலம் ஆஞ்சநேயர் ஐம்பூதங்களையும் தமக்குள் கட்டுப்படுத்தியவர் என்பது தெளிவாகிறது..
*ௐ ஸ்ரீ ஆஞ்சநேயாய நமஹ.!*