பல பெற்றோருக்கு தங்களின் குழந்தைகள் கல்வியில் பின்தங்குதல் கவலையை ஏற்படுத்தும். அத்தகைய குறையை நீக்க அற்புதமான விரதத்தை அறிந்து கொள்ளலாம்.
ஆவணி மாதம் திருவோண நட்சத்திரம் ஹயக்ரீவரின் அவதார நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திர தினத்தன்று காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் உங்கள் வீட்டு பூஜையறையில் சிறிய அளவு ஹயக்ரீவர் விக்கிரகம் அல்லது படத்திற்கு ஏலக்காய் மாலை சாற்றி, வாசனை மலர்களை சமர்ப்பித்து, சுத்தமான பசும் பாலை கொதிக்க வைத்து, அதில் சர்க்கரையைப் போட்டு கலந்து, இளம் சூடான பதத்தில் ஹயக்ரீவர் படம் அல்லது விக்ரகத்திற்கு நைவேத்தியமாக வைத்து ஹயக்ரீவ மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள், துதிகள் போன்றவற்றை பாடி ஹயக்ரீவரை வழிபட வேண்டும். பூஜை முடிந்ததும் நைவேத்தியம் வைக்கப்பட்ட பாலை சிறிது எடுத்து உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் பிரசாதமாக அருந்த கொடுக்க வேண்டும்.
இந்த வழிபாட்டை 108 தினங்களுக்கு காலையில் செய்ய வேண்டும். இத்தகைய வழிபாடு செய்யும் காலத்தில் உடல், மனம், ஆன்மா ஆகிய திரிகரண சுத்தி காக்கப்படவேண்டும். புலால் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மது, சிகரெட் போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்தக் கூடாது.
திட சித்தத்துடன் மேற்கண்ட முறையில் 108 நாட்கள் ஹயக்ரீவருக்கு விரதமிருந்து பூஜை செய்பவர்களுக்கு ஹயக்ரீவரின் அருளாசிகள் கிடைத்து அவர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை அடையும். குழந்தைகளுக்கு இருக்கும் மந்தமான புத்தி நீங்கி கல்வி கலைகளில் மிகச் சிறப்பான சாதனைகளை செய்வார்கள்.