திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் வரலாற்று சிறப்பு மற்றும் கலை நயம் வாய்ந்த சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசர்களான அச்சுததேவராயர், ராமதேவராயர் ஆகியோரால் கோவில் முழுவதும் கற்களால் கட்டப்பட்டது. முற்காலத்தில் இவ்வூர் “தாலவனம்“, “தாலபுரி” என்று அழைக்கப்பட்டது. தாலபுரி என்றால் பனைமர கிராமம் என்று பொருள். இவ்வூரில் பனைமரங்கள் நிறைந்து இருப்பதை காணலாம். அருள்மிகு சவுந்தரராஜ பெருமாள் கோயில் மதுரை அழகர்கோயில் போல் பெருமைமிக்கது. வைணவ கோவிலாக இருந்தாலும், இந்த கோவிலில் வில்வ மரம் தல விருட்சமாக உள்ளது.
சவுந்தரவல்லி தாயார் சன்னதி
சவுந்தரராஜ பெருமாள் கோயிலின் பிரகாரத்தில் தென்புறத்தில் சவுந்தரவல்லி தாயார் சன்னதி அமைந்துள்ளது. மகாலெட்சுமியே சவுந்தரவல்லித் தாயாராக நான்கு கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழிரு கரங்கள் அபய, வரத முத்திரைகளுடன் காட்சியளிக்கிறார். செல்வங்களுக் கெல்லாம் அதிபதியான ஸ்ரீ மஹாலெட்சுமி மனதார வேண்டுபவர்களுக்கு அருளும், பொருளும் தந்தருள்வார்.
கருவறையின் முன், மஹாலெட்சுமியின் அஷ்ட சக்திகளில் இரண்டான சங்கநிதி, பதும நிதி தங்கள் பத்தினிகளுடன் காட்சியளிக்கின்றனர். குபேரனின் இரு பக்கத்திலும் இவர்கள் எப்போதும் வீற்றிருப்பார்கள். வலது புறம் சங்கநிதி தனது இடது கையில் வலம்புரி சங்கும், வலது கை வர முத்திரையுடன், தன் பத்தினியுடன் அருள்புரிகிறார். இடதுபுறம் பதுமநிதி, தன் வலதுகையில் பத்மத்துடனும் (தாமரை) இடது கை வரமுத்திரையுடனும் தன் பத்தினியுடன் அருள்பாலிக்கிறார். இது போன்ற அமைப்பு வேறெங்கும் இல்லை என்பது தனிச்சிறப்பாகும்.
கள்ளழகரே சவுந்தரராஜராக…
விஜயநகர பேரரசு வம்சத்தில் வந்த அச்சுத தேவராயர் என்பவரால் 16 ஆம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டதாக கோயில் வரலாறு கூறுகிறது. இக்கோயிலின் பிரதான தெய்வமான பெருமாள் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் என்கிற பெயரிலும், லட்சுமிதேவி சவுந்தரவல்லி தாயார் என்கிற பெயரிலும் வணங்கப்படுகிறார்கள். மாண்டூகம் என்றால் வடமொழியில் தவளை என்று பொருள்.கோயிலின் தல புராணங்கள் படி தவளையாக மாறும் படியான சாபத்தை பெற்ற மாண்டூக முனிவர் தனது தவளை வடிவம் நீங்கி, மீண்டும் பழைய நிலையை பெறுவதற்கு இந்த தாடிக்கொம்பு தலத்திற்கு வந்து தவம் இயற்றினார்.
அப்போது தாலாசுரன் என்கிற அரக்கன் மாமுனிவரை மிகவும் துன்புறுத்தி வந்தான். இதனால் வருந்திய முனிவர் தனது துன்பத்தை போக்குமாறு திருமாலை நினைத்து வேண்டினார். – மாண்டூக முனிவரின் வேண்டுதலை ஏற்ற பெருமாள் மதுரை கள்ளழகர் வடிவில் வந்து அசுரனை வதம் செய்து முனிவரின் சாபத்தை போக்கி அருளினார். தனது துன்பத்தைப் போக்கிய பெருமாள் இத்தலத்திலேயே தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் புரியுமாறு முனிவர் வேண்டினார். அதை ஏற்று அவ்வாறே திருமால் சவுந்தரராஜ பெருமாள் என்கிற பெயரில் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்.
பிரார்த்தனை தலம்
சித்ரா பவுர்ணமிவிழா ஐந்து நாட்கள் நடைபெறும். ஆடிப்பெருவிழா பத்துநாட்கள், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி உற்சவம், கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தில் லட்சதீபம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி என்ற சிறப்பு விழாக்கள் ந டைபெறுகிறது. தவிர பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி போன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சுவாமிகளுக்கும் வெவ்வேறு வழிபாட்டு பூஜைகளும் நடைபெறுகிறது.
இங்குள்ள ரதி-, மன்மதனை ஐந்து வியாழக்கிழமைகளில் பூஜித்து வந்தால் திருமணத்தடை நீங்கும். வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல்நாட்களில் காலை 9 மணியளவில் விஷ்ணுபதி புண்ணியகால பூஜை நடைபெறும். பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணங்களை செய்ய இயலாதவர்கள் இதில் கலந்து கொள்வதின் மூலம் அக்குறை நீங்கும். தொழில் அபிவிருத்தி போன்றவற்றிற்காக சுரைக்காயில் தீபம் ஏற்றப்படுவது மற்றுமொரு வழிபாட்டு சிறப்பு.
வேண்டுதல்கள் நிறைவேறுவதால் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். சவுந்தரராஜ பெருமாள் சில குடும்பங்களுக்கு குலதெய்வமாகவும் மாறியுள்ளார்.
அன்னதான திட்டம்
தினசரி குறைந்தபட்சம் 100 பக்தர்கள் உணவருந்தும் வகையில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தினமும் மதியம் 12.15 மணியளவில் அன்னதானம் வழங்கப்படுகிநது.
கோவிலில் ரூபாய் 20 ஆயிரம் (ரூ .20,000) வைப்பதற்காக ஆர்வமுள்ளவர்கள், ஒரு நாளுக்கு அன்னதானம் வட்டி தொகையை ஒரு வருடத்திற்கு ஒரு முறை வழங்கப்படும். மேலும் ஒரு நாள் அன்னதானம் ரூ. 2000 வழங்கப்படும் – நன்கொடை வழங்க தயாராக உள்ளவர்கள் கோவிலில் நிறைவேற்று அலுவலரை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இணையத்தில் தாடிக்கொம்பு கோவில்
தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமா கோவில் இணைய தளம் http://thadicombusoundarajaperumal.org/ என்ற பெயரில் இணையத்தில் உள்லது. இதில் கோவில் ஸ்தல வரலாறு, பூஜைகள் விவரம், விழாக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
அண்ணா மண்டபம்
கிழக்கு முகம் கொண்ட சந்நதி. இருபுறமும் சங்கநிதி – பதுமநிதி உள்ளன. தொடர்ந்து அர்த்த மண்டபம் அல்லது ‘அண்ணா மண்டபம்’. கிருஷ்ணதேவராயரின் நினைவாக அச்சுததேவராயர் இந்த மண்டபத்தை முழுமைப்படுத்தியதால், மரியாதையுடன் ‘அண்ணா’ மண்டபம் என்று அழைக்கப்படலாயிற்று. இரு அரசர்கள், அவர்களின் பத்தினிமார்களின் சிலைகள் உள்ளன. கிருஷ்ணதேவராயரின் தலையில் கொண்டை வடிவம் உள்ளது; அச்சுததேவராயர் தலையில் கொண்டை இல்லை.
இந்த அரசர்களுக்கு முன்னால் இருக்கும் தூண்களில் பெரிய திருவடி மற்றும் சிறிய திருவடி (இடம் மாறிய நிலையில்) கைகள் கூப்பிய வண்ணமிருக்கிறார்கள். பின்னர் வரும் அரசர்கள் – அவர்களின் இரு பத்தினிமார்களைத் தொடர்ந்து பாவை விளக்கு நாச்சியார்களும், அதன்பின் துவாரபாலகர்களும் காட்சி தருகிறார்கள். ‘இதிலென்ன அதிசயம்?’ என்று கேட்கலாம். தாயார் சந்நதி முன்னால் இருக்கும் மண்டபங்களில் வடிக்கப்பட்டிருக்கும் சிலைகள் அனைத்தும் கூரையைத் தாங்கும் தூண்கள் அல்ல. சிற்பக்கலையின் உன்னத நிலையை எடுத்துக்காட்டும் தனித்தனி சிற்பங்கள்!
அழகு தெய்வம் ஆண்டாள் சன்னதி
சவுந்தரராஜபெருமாள் கோவில் பிரகாரத்தில் வடமேற்கில் ஸ்ரீஆண்டாள் சன்னதி உள்ளது. ஆண்டாள் மூலவர், உற்சவர் என்ற நிலையில் காட்சியளிக்கிறார். இச்சன்னதிக்கு தனி விமானம் உண்டு. பெரியாள்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய இரு பிரபந்தங்களை பாடியுள்ளார்.
சூடிக்கொடுத்த நாச்சியார், கோதை என்று அழைக்கப்படும் ஆண்டாள் மீது மிகுந்த பக்திகொண்ட விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் வைணவ தலங்களில் ஆண்டாள் சன்னதியை ஏற்படுத்தியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆண்டாளின் உற்சவர் சிலை ஒவ்வொரு வியாழக்கிழமையும் அரங்க மண்டபத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் முக்கிய இடம்பெறுகிறது. ஆண்டாள் சன்னதியின் வெளிப்புர சுவர்களில் தசாவதார சிற்பங்கள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. 20 கல்தூண்களை கொண்ட பெரும் மண்டபம் மூலவருக்கு எதிரே விசாலமாக உள்ளது.
வடக்கு வீடு….
மதுரைக்கு அருகே உள்ள 2 திருமாலிருஞ்சோலை என்ற திவ்யதேசத்தோடு தாடிக்கொம்பு தலத்திற்குத் தொடர்புள்ளதை தென்னிந்திய கோயில் சாசனம். ‘திருமாலிருஞ்சோலை அழகருக்கு வடக்கு வீடான புறமலை தாடிக்கொம்பு’ என்று குறிப்பிட்டுள்ளது. இதுபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள காட்டழகர் கோயில், திருமாலிருஞ்சோலை அழகரின் தெற்கு வீடாகக் கருதப்படுகிறது.
அதனாலேயே இந்த மூன்று தலங்களிலும் சித்திரை உற்சவத்தில் ‘அழகர் ஆற்றில் இறங்குவதில்’ ஒற்றுமை இருப்பதைக் காணலாம். இதற்கு அடிப்படை புராண ஒற்றுமை இருப்பதே காரணமாக இருக்கலாம்.
ரதி,மன்மதன் பூஜை நடைபெறும் நேரம்
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருமண தடை நீக்கும் ரதி, மன்மதன் பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பூஜை ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 7.30, 9.30, 11.30, மாலை 6 மணி ஆகிய நேரங்களில் நடைபெறுகிறது.
பூஜை நேரம்
கோவிலில் நடை திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
விழாக்களும் பூஜைகளும்
அருள்மிகு சவுந்தரராஜபெருமாள் கோவிலின் பூஜை முறைகள் ஆகம விதிகளின்படியும், தென்கலைச் சம்பிரதாயங்கள் படியும் நடைபெறுகின்றன. கலெக்டர் ஜார்ஜ் வின்ச், ஓர் அறிக்கையில், இக்கோவிலில் ஜூன் டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்படும் விழாக்கள் மிகச் சிறப்பாக நடந்ததென்று குறிப்பிட்டுள்ளார். மேலும், விழாக்களின்போது, உற்சவர் தேரில் பவனி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அன்றைய காலத்தில் மதுரை சித்திரை விழாவைப் போன்று இத்திருக்கோவிலும் சித்திரா பவுர்ணமி விழாவும், ஆடிப் பெருவிழாவும் நடைபெற்றதாக பட்டாச்சாரியர்கள் கூறுகின்றனர்.
தற்காலத்தில் சித்ரா பவுர்ணமி விழா 5 நாட்கள் நடைபெறுகிறது. உற்சவர் பெருமாள் தேரில் திண்டுக்கல் நகரை பவனி வருவார். பவுர்ணமி நாளன்று சவுந்தரராஜப்பெருமாள் குடகனாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஆடிப்பெருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. உற்சவர் வாகனங்களில் வீதி உலாவாக அழைத்து வரப்படுகிறார். ஆடி மாதம் சுக்கில பட்சம்( வளர்பிறை) சதுர்த்தி திதி செவ்வாய்க்கிழமை பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் அவதாரம் செய்தார். ஆடிப்பூர நாளில் பெருமாள்& ஆண்டாளுக்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதத்தில் நவராத்திரி உற்சவம் 9 நாட்களுக்கு நடைபெறுகிறது. தாயார் சன்னதியில் கொலு விழா நடைபெறும். மகாசிரவரோண நிகழ்ச்சியும், லட்சார்ச்சனையும் நடைபெறும்.
கார்த்திகை மண்டபத்தில் ரோகிணி நட்சத்திரம் லட்ச தீப வழிபாடு மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி மிக முக்கியமான விழாவாகும். சொர்க்கவாசல் சிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சிறப்பு பூஜைகள்
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் சிறப்பு பூஜைகளைப் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ சவுந்தரராஜப்பெருமாள் திருவோண நட்சத்திர பூஜை, ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் அமாவாசை பூஜை. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி சுவாதி நட்சத்திர பூஜை, ஸ்ரீ வேணுகோபால சுவாமி ரோகிணி நட்சத்திர பூஜை, ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் தேய்பிறை அஷ்டமி பூஜையும், பிரதி ஞாயிறு மாலை 5 மணியளவில் ராகுகால பூஜையும் நடைபெறும்.