பிச்சாலியில் இப்போதும் ஸ்ரீ அப்பண்ணாசார்யரின் வாரீசுகள் வசித்து, மந்த்ராலய சேவை செய்கிறார்கள். அப்பண்ணா தமது கையாலேயே உணவு சமைத்து ஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்வார். ஸ்வாமிகளுடன் தர்க்க சாஸ்திரங்களை அலசுவார். தம் பக்கத்தில் அவர் எப்போதும் இருக்கவேண்டும் என ஸ்வாமிகளே எண்ணினார் என்றால் அவரது பெருமை எத்தகையது? ஆனால் ஒரு முக்கியமான முடிவு எடுக்கும் தருணத்தில் ஸ்வாமிகள் ஏன் அவரை சஞ்சாரத்துக்கு வெளியே அனுப்பவேண்டும்?
இதைத்தான் விதியின் விளையாட்டு என்பது.
இந்த விதிதான் நமக்கு இந்த ஸ்தோத்ரத்தைக் கொடுத்தது!!
ஸ்வாமிகள் திடீரென திவான் வெங்கண்ணாவைக் கூப்பிட்டு தாம் பிருந்தவன ப்ரவேசம் செய்ய நாள் குறித்துவிட்டதாக முடிவைச் சொல்லி அதிர்ச்சி ஏற்படுத்தினார். அவருக்கு வெளியே சென்றிருக்கும் அப்பண்ணவைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. அப்பண்ணவுக்கும் ஸ்ரீராயரின் பிருந்தாவன ப்ரவேசம் பற்றிய தகவல் வந்து சேர்ந்தது.
அன்று ஆகஸ்ட் 8. 1761 வெள்ளிக்கிழமை. மதியம்.
.பிச்சாலியையும், மந்த்ராலயத்தையும் துங்கபத்ரா நதி பிரித்தது. இக்கரையில்.மந்த்ராலயத்தில் ஸ்ரீ ராயர் கல் மூடாத பிருந்தவனத்தில் அமர்ந்து ஜபமாலை உருட்டத் தொடங்கினார். தன் விரல்கள் உருட்டுவதை நிறுத்திவிட்டால், கல் வைத்து, மூடிவிட திவான் வெங்கண்ணாவிடம் சொல்லிவிட்டார்.
எனக்கு நவபிருந்தவனம் அமைந்திருக்கும் இடம்தான் இப்போது நினைவுக்கு வருகிறது. ஆனேகுந்தியிலிருந்து படகில் போகவேண்டும். நவபிருந்தாவனத்தில் நடுநாயகமாக நமது ஸ்ரீ வியாசராஜர் அமர்ந்திருக்கிறார். ஸ்ரீ ராகவேந்தரர் தம் முற்பிறவிகளில் பக்த பிரகலாதனாகவும், ஸ்ரீ வியசராஜராகவும் விளங்கியவர்.
துங்கபத்ரா நதியின் இக்கரையில் அப்பண்ணா நிற்கிறார். கட்டாயம் படகுகள் இருந்திருக்கும். ஆனால் தம்து குருவின் தரிசனத்தைக் கடைசியாகப் பார்த்துவிடும் எண்ணமே மேலோங்குகிறது. வேறு எண்ணமே இல்லை..
இக்கரையில் அப்பண்ணா செய்வதறியாது திகைத்தது ஒரு கணம்தான். பிச்சாலியில் துங்கபத்ரா ஓவென்ற இரைச்சலுடன் அதிபிரவாகமாய் ஓடுகிறது.. கண்களில் மகானுடன் பழகிய, விவாதித்த நாட்கள் வந்துபோகின்றன. இப்படி ஒரு முடிவைத் தன்னிடம் கூட கூறவில்லையே. அவரைப் பிரியும் துக்கம். எப்பேர்பட்ட கலியுக மகான்! அவருடைய ஸ்தூல உடலை எப்படியாவது தரிசித்துவிடவேண்டுமெனும் வேட்கை. அக்கரையை அடைய “ஸ்ரீ ராகவேந்தரா நீயே துணை” என்று ஆற்றில் இறங்கிவிட்டார்
இப்போதும் அவர் ஆற்றில் இறங்கிய இடத்தைக் காட்டுகிறார்கள்.
“ஸ்ரீ பூர்ணபோத குருதீர்த்த பயோப்திபாரா….’ என்று அவர் ஸ்தோத்ரம் சொல்லி ஆரம்பிக்க , நதி அவருக்கு வழிவிடுகிறது
ஸ்ரீ பூர்ணபோதர் யார்? சட்சாத் ஸ்ரீ ஆனந்த்தீர்த்தர்தான். அவர் யார்? தமது சிந்தாந்தமான த்வைதத்திற்கு உடுப்பியில் மடத்தை நிறுவினார். மகாபாரத்த்திற்கு முதலில் வியாக்கினம் எழுதியவர். ஸ்ரீ ஹனுமான், பீமன் ஆகிய அவதாரங்களாக இருந்தவர். ஹனுமனை “லபதே” என்று பிரார்த்தித்தால் பிள்ளை வரம், செல்வ வளம், வித்யை, புகழ் எல்லாம் கொடுப்பார் என்கிறார் ஸ்ரீ வியாசராஜர் தமது ஸ்லோகத்தில்.
கல்ஸா அருகில் துங்கபத்ராவில் பல டன்கள் எடையுள்ள பெரிய பாறாங்கல்லை (6.1* 3.6* 10.98 length, breadth and height respectively in metres )அடைத்து வெள்ளம் வராமல் தடுத்த நமது ஸ்ரீ ஆனந்த்தீர்த்தரின் பலத்தை என்னவென்று சொல்வது? இதை “பீமகல்லு” என்கிறார்கள். அம்புதீர்த்த்த்தில் இக்கல்லை இன்றும் காணலாம்.
அவருடைய நூல்கள் சம்சாரசாகரத்தை நீந்திக் கடக்க உதவும் வழிகாட்டிகள் அன்றோ? அவற்றிற்கு வியாக்யானம் எழுதிய மத்வகுரு யதிராத் ஸ்ரீ ராகவேந்தர்ர் நமக்கெல்லாம் எத்தனை பெரிய வழிகாட்டி.
அப்பண்ணாவுக்கு இந்த நதி ஒரு வாழ்க்கைச் சமுத்திரமாகத் தெரிகிறது. ஸ்ரீமத்வரின் சிஷ்யர் நம்மைக் கடைதேர்த்துவார் என்று நினைத்தபடி ஸ்தோத்திரத்தை தானாக(Extempore) சொல்லியபடி ஒடுகிறார். அவருக்கு ஆறு பிரிந்து கூடுகிறது. ஆஹா!!
ஸ்ரீ ராகவேந்தரரை ஒருவர் மனப்பூர்வமாக நினைத்தால் எப்படி உதவுகிறார். கையில் ஜபமாலை உருட்டினாலும் அப்பண்ணாவின் ப்ரேயர் அவர் காதில் விழுகிறது. தமது நண்பர் அல்லவா அவர்?
இல்லையென்றால் கடைசி வரிப்பாடலை அவர் முடித்து வைத்திருப்பாரா?
ஓர் ஆங்கிலக் கவிஞன் “ப்ரேயர் என்பது மனிதனையும் சொர்க்கத்தையும் இணைக்கும் தங்கச் சங்கிலி” என்கிறான்.