ஒவ்வாமை மற்றும் இதர காரணங்களினால் தீராத தோல் நோயினால் சிலர் அவதிப்படுவதுண்டு. என்ன பரிகாரம் செய்தாலும் என்ன மருத்துவம் பார்த்தாலும் குணமாகாது. சிலருக்கு மறைவாகவும், சிலருக்கு முகம் மற்றும் கைகால்களிலும் பிறர் பார்வையில் நன்கு தெரியும்படியும் இருக்கும். இவர்கள் நான்கு பேருடன் கலந்து பேசவோ, அல்லது பொது இடங்களுக்கு செல்லவோ மிகவும் சங்கடப்படுவார்கள். பாதிப்பு தரும் எரிச்சல் ஒருபுறம், சங்கடம், அவமானம் மறுபுறம் என வேதனையில் தவிப்பார்கள்.
அத்தகையோருக்கு வரப்பிரசாதமாய் ஒரு திருக்கோவிலும் பரிகாரமும் இருக்கிறது.
*நவக்கிரகங்களையே பீடித்த தோல் நோய்!*
முன் ஒரு காலத்தில் காலமா முனிவர் என்பவர், விதியின் பயனாய் தனக்கு ‘தொழு நோய்’ வரப்போவதை அறிந்து, நவக்கிரகங்களை குறித்து தவமிருந்து பிரார்த்தனை செய்தார். நவக்கிரகங்கள் அவர் முன் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்க, தனக்கு வரவிருக்கும் தொழுநோய் வராமலிருக்க அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனால் மகிழ்ந்த நவக்கிரகங்களும் அவரின் தொழுநோய் நீங்க அருளினர்.
ஆனால் விதியின் பயனாய் ஏற்படுவதை குறைக்கவோ, வராமல் தடுக்கவோ நவக்கிரகங்களுக்கு அதிகாரம் கிடையாது என்றுகூறி, இறைவன் கோபம் கொண்டு, அம்முனிவருக்கு வரவிருந்த ‘தொழுநோய் உங்களுக்கு வரக் கடவது’ என்று சாபம் கொடுத்தார்.
*தெய்வவாக்கு மூலம் வெளிப்பட்ட பரிகாரம்*
சாபத்தின் விளைவாக ‘தொழுநோயால் பீடிக்கப்பட்ட நவகிரகங்கள், சிவபெருமானை வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். உடன் வானில் ‘அசரீரி’ தோன்றி நீங்கள் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள மங்கள ஷேத்திரம் அடைந்து அருகில் இருக்கும் வெள்ளை எருக்க வனத்தில் தங்கி, ஸ்ரீ பிராண நாதரை குறித்து தவமிருந்து கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிறு உச்சிக் கால வேளையில் பிராணநாதருக்கு வெள்ளை எருக்கன் இலையில் தயிர் அன்னம் வைத்து நிவேதனம் செய்து சன்னதியில் புசித்தால் நோய் நீங்கும்” என அசரீரி கூறியது.
நவக்கிரகங்கள் அவ்வாறே வழிபட ஸ்ரீ பிராண நாதர் அருளால் நோய் நீங்கி சாபம் நீங்கியது. நவக்கிரகங்கள் ஸ்ரீ பிராண நாதரை பிரார்த்தனை செய்தார்கள். அவரும் அவர்கள் முன் தோன்றி நீங்கள் தவமிருந்த இடத்தில் தங்கி வரும் பக்தர்களுக்கு ‘அனுக்கிரகம் செய்க’ என்று உத்தரவிட்டார். அது கேட்ட நவகிரகங்கள் மகிழ்ச்சி அடைந்து , எங்களுக்கு ஏற்பட்ட நோயையும், சாபத்தையும் நீக்கி அருளியபடி , உங்களை வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கும், எங்களால் ஏற்படும் தோஷத்தையும் நிவர்த்தி செய்து அருள வேண்டும் என்று நவகிரகங்கள் கேட்டுக்கொள்ள, ஈசனும் ”அவ்வாறே ஆகட்டும்” என அருளினார்.
ஸ்ரீ பிராண நாதரை தரிசித்த பின் நவக்கிரகங்களை தரிசித்தால் பூரண பலன் உண்டு என புராணம் கூறுகிறது. (நவக்கிரகங்கள் தவமிருந்த இடமே ‘சூரியனார் கோவில்’ என்று விளங்குகிறது. இன்றும் சூரியனார் கோவில் சென்றால் அனைத்து கிரகங்களின் சன்னதியையும் காணலாம்.)
தீராத தோல்நோயினால் அவதிப்படும் அன்பர்கள் சூரியனார் கோவிலுக்கு அருகே அமைந்துள்ள திருமங்கலக்குடி என்னும் இந்த தலத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து, அவருக்கு நிவேதனம் செய்யப்பட்ட தயிர் சாதத்தை எருக்க இலையில் வைத்து சாப்பிடவேண்டும். அப்படி சாப்பிட்டால் அவர்கள் தோல்நோய் குணமடைந்துவிடும். (எருக்க இலையை ஆலயத்தில் உள்ள விருட்சத்திலிருந்து எடுத்து அவர்களே தருவார்கள். யாரும் நீங்களாகவே பறித்து எடுத்துச் செல்ல வேண்டாம்.அது சிவகுற்றம்)
எருக்கஞ்செடி
பரிகாரத்தை செய்ய விரும்புகிறவர்கள்…
எருக்க இலை பரிகாரத்தை செய்ய விரும்புகிறவர்கள் 10 மணிக்குள் திருமங்கலக்குடி கோவிலில் இருக்கவேண்டும். அதற்கு தனி டோக்கன் உண்டு. எத்தனை டோக்கன் வாங்கப்பட்டிருக்கிறதோ அத்தனை இலைகளை தான் நிவேதனம் செய்வார்கள். எனவே 10 மணிக்குள் கோவிலுக்கு சென்று அதற்குரிய சீட்டை வாங்கி (ஒரு சீட்டு ரூ.3/- தான்) கோவிலில் சமர்பிக்கவேண்டும். பகல் 12 மணிக்கு மேல், சூரியன் மறையத் துவங்கியதும், சுவாமிக்கு எருக்க இலையில் சூடான தயிர் சாதம் நிவேதனம் செய்யப்படும்.
சரும பாதிப்புக்குள்ளானவர்கள் சுவாமிக்கு தங்கள் பெயர், ராசி, நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்து நிவேதனம் செய்யப்பட்ட தயிரன்னத்தை சாப்பிட்டு பெற்று சன்னதிக்கு வெளியே செல்லாமல் சுவாமியை பார்த்துக்கொண்டே சாப்பிடவேண்டும்.
11 வாரம் இது போல செய்யவேண்டும் என்பது ஐதீகம். 11 வாரம் செல்ல முடியாதவர்கள் முதல் வாரமும், கடைசி வாரமும் வந்திருந்து இந்த பரிகாரத்தை செய்யவேண்டும். 11 வாரத்துக்கு நீங்கள் கோவிலில் பணம் கட்டிவிட்டால், அவர்கள் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து பிரசாதத்தை தபாலில் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
இறைவன் : ‘பிராணனைக் கொடுத்த’ ஸ்ரீ பிராண நாதேஸ்வரர்
இறைவி : ‘மாங்கல்யம் கொடுத்த’ ஸ்ரீ மங்களாம்பிகை
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது இந்த தலம். (இந்த தலத்தில் அனைத்துமே மங்களம் தான். மங்கள விநாயகர், மங்கள விமானம், மங்களாம்பிகை, மங்கள தீர்த்தம், மங்கலக்குடி இப்படி… எனவே ‘பஞ்சமங்கள ஷேத்திரம்’ என்று சிறப்பு பெற்று விளங்குகிறது.)
இந்த கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானதாகும்.
*முகவரி
மங்களாம்பிகை சமேத பிராணநாதேஸ்வரர் திருக்கோவில், திருமங்கலக்குடி – 612102
*எப்படி செல்லலாம் ?*
கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆடுதுறை சென்று, அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் திருமங்கலக்குடியை அடையலாம். ஆடுதுறையிலிருந்து ஷேர் ஆட்டோ வசதி உண்டு. இதன் அருகில் தான் சூரியனார் கோவில் ஒரு கி.மீ தொலைவில் உள்ளது.