ஈசனின் இடப்பக்கம் உறையும் அன்னை பராசக்தியின் வடிவங்களில் ‘கௌரி ரூபம்’ தனித்துவமான சிறப்புகொண்டது. தவ வடிவம் கொண்ட சக்தியே, ‘கௌரி’ எனப்படுகிறாள். 108 கௌரி வடிவங்களில் 16 வடிவங்கள் மிகச் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. சோடஷ கௌரிகள் என்று வணங்கப்படும் இந்த ஸ்ரீகௌரியின் வடிவங்களை வழிபடுவதன் மூலமாக நாம் அத்தனை பலன்களையும் ஒரு சேர பெற முடியும். அந்த வகையில் எந்த கௌரியை வழிபட்டால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.
கவுரி தேவியை 108 வடிவங்களில் ஞானியர் போற்றி வழிபட்டனர். அதில் முக்கியமான 16(சோடஷ) வகை கவுரி வடிவங்களை பார்ப்போம்…
ஞான கவுரி…
ஒருமுறை சிவத்தைவிட சக்தியே உயர்ந்ததென்ற கர்வம் பார்வதிதேவிக்கு தோன்றியது. இதனை உணர்ந்த சிவன் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் உலகில் பல குழப்பங்கள் நேர்ந்தது. இதைக்கண்டதும் அன்னையின் கர்வம் காணாமல் போனது. உலகம் இயங்க சக்தி மட்டும் போதாது என்பதை உணர்ந்து இறைவனுக்கு பணிந்தாள். இதையடுத்து தன்னுடைய உடலில் சரிபாதியாக சேர்த்து அறிவின் அரசியாக்கியதால் அவளுக்கு ஞான கவுரி என பேர் வந்தது. இவளை பிரம்மன் கார்த்திகை மாத வளர்பிறையில் வன்னி மரத்தின் அடியில் வைத்து வழிபட்டான். அந்நாள் ‘ஞான பஞ்சமி’ கவுரி பஞ்சமி என அழைக்கப்படுது. இவளுடன் ஞான வினாயகரும் வீற்றிருப்பார். இவள் மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும், கல்வியையும் அளிக்கிறாள்.
அமிர்த கவுரி….
உயிர்களின் ஆயுளை நீட்டிக்க வல்லது அமிர்தம். அது தேவலோகத்திலிருக்கும் இந்திரன் வசம் உள்ளது. மிருத்யுஞ்ஜயரான சிவப்பெருமானின் தேவியாக இருப்பதால் இவளுக்கு அமிர்த கவுரி எனப்பேர் உண்டானது. இவளுக்குரிய நாள் ஆடி மாத பௌர்ணமி ஆகும். ஜல ராசியான கடக மாதத்தில் இவளை வழிப்படுவதால் ஆயுள் விருத்தியாகும். வம்சம் செழிக்கும். திருக்கடையூர் அபிராமி இவளின் அம்சம்.
சுமித்ரா கவுரி…..
உலக உயிர்களுக்கு உற்ற சினேகிதி இவள்.* உலக உயிர்களின் தோழியாகத் திகழும் அம்பிகையை, ‘அன்பாயி சினேகவல்லி’ என்று போற்றுகின்றன புராணங்கள். திருவாடானையில் அருளும் அம்பிகைக்கு சினேகவல்லி என்று பெயர். இவளையே வடமொழியில் ‘சுமித்ரா கவுரி’ என்கிறார்கள். இந்த கவுரியை விரதமிருந்து வழிபட்டால் நல்ல விதமான நட்பும், சுற்றமும் வாய்க்கும்.
சம்பத் கவுரி..
வீடு, தனம், தான்யம், பசு, ஆடு, வயல்..எனப்படும் சொத்துக்களை சம்பத்துகள் என சொல்வர். ஒரு வீட்டில் இருக்கும் ஆடு, மாடுகளை கணக்கில்கொண்டு பெரியாளாய் நினைச்சதெல்லாம் ஒருகாலம். இன்னிக்கு கார், மொபைல், நகை மாதிரி அன்று கால்நடைகள் மனிதனின் அந்தஸ்தை உயர்த்தி காட்டும். அத்தகைய உயர்ந்த சம்பத்துகளை அளிக்கவல்லவள் இவள். இவள் பசுவுடன் காட்சி அளிப்பாள்.கவுரிதேவியே பசுவாக உருவெடுத்து சிவனை வழிப்பட்ட கதை பல உண்டு. காசி அன்னப்பூரணி இவளது அம்சம். பங்குனி வளர்பிறை திருதியை தினத்தில் இவளை வழிபட்டால் வீட்டில் தனம், தான்யம் உட்பட அனைத்து செல்வங்களும் குறைவில்லாமல் இருக்கும்.
யோக கவுரி…
யோக வித்தைகளின் தலைவி இவள். சித்தர்களுக்கெல்லாம் தலைவனான சிவனுடன் இணைந்து யோகேஸ்வரியாக காசியில் வீற்றிருக்கிறாள். இறைவனும், இறைவியும் வீற்றிருக்கும் இந்த இடத்திற்கு யோகேஸ்வரி பீடம் என அழைக்கப்படுது. சித்தர்களுக்கு யோகங்களை அள்ளி வழங்குவதால் இவளுக்கு யோகாம்பிகைன்னும் பெயருண்டு.
வஜ்ர ச்ருங்கல கவுரி….
உறுதியான, ஆரோக்கியமான உடலே மூலதனம். அத்தகைய உடலை உயிர்களுக்கு அளிப்பவள் இவள். ச்ருங்கலம் என்பதற்கு சங்கிலி என அர்த்தம். அமுத கலசம், கத்தி, சக்கரத்துடன் நீண்ட சங்கிலியை தாங்கி காட்சி தருவாள். நோய்கள் அண்டாமலும், முக்தியையும் அளிப்பது இவளது பணி.
சாம்ராஜ்ய கவுரி…
அன்பும், வீரமும் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு தலைமை பண்பு தானாய் வந்து சேரும். அத்தகைய தலைமை பண்பை அள்ளி தருபவள் இவள். ராஜராஜேஸ்வரி எனவும் இவளை அழைப்பர். மதுரை மீனாட்சி இவளது அம்சம்.
த்ரைலோக்ய மோஹன கவுரி…
ஆசை என்னும் மாய வலையில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசை. மனுசனாய் பொறந்த எல்லாருக்கும் ஆசை இருந்தே தீரும். ஆசை தப்பில்ல. அது நியாயமான ஆசையாய் இருக்கும்வரைக்கும்… மாய வலையில் சிக்கி சீரழிபவர்களை கரை சேர்ப்பவள் இவள். இவளை வழிபட்டால், உற்சாகமும், தெய்வீக களையும் அந்து சேரும். காசியில் நந்தகூபரேஸ்வரர் ஆலயத்தில் த்ரைலோக்ய மோஹன கவுரி அருள் புரிகிறாள்.
சுயம் கவுரி….
சிலருக்கு இன்னார்தான் வாழ்க்கை துணையா வரனும்ன்னு ஒரு ஆசை இருக்கும். மனசுக்குள் அவங்ககூட குடும்பமே நடத்துவாங்க. அப்படி ஆசை இருப்பவங்க இவளை நினைத்து வழிப்பட்டால் நினைத்தது நிறைவேறும். சிவபெருமானை, மணமகனாக மனதில் நினைத்தபடி நடந்து செல்லும் கோலத்தில் காட்சி அளிப்பவள். திருமணத் தடையை நீக்குபவள். இவளுக்கு சாவித்திரி கவுரி எனவும் பெயர். சத்தியவான், சாவித்திரி கதை தெரியும்தானே?! அந்த சாவித்திரி இவளை வணங்கிதான் கணவன் உயிரை மீட்டெடுத்தாள்.
சத்யவீர கவுரி….
நாக்கு பிழறலாம்.. வாக்கு பிழறக்கூடாதுன்னு சொல்வாங்க. இந்த காலத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள் ஒரு சிலரே! எல்லோராலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது. எந்த சூழ்நிலையிலும் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் ஆற்றலை அளிப்பவள் இந்த சத்யவீர கவுரி’.இவளை ஆடி மாத வளர்பிறை திரயோதசி நாளில் வழிபடலாம். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் ன்னு சொல்வாங்க.
கஜ கவுரி….
யானை முகம் கொண்ட வினாயகரை தன் மடியில் அமர்த்தியபடி காட்சி அளிப்பதால் இப்பெயர் உண்டானது. இந்த அன்னையை ஆடி மாத பௌர்ணமி திதியில் வழிபாடு செய்து வழிப்பட்டால் குழந்தை பக்கியம் உண்டாகும். வம்சம் விருத்தியாகும்.
வரதான கவுரி…
கோடி கோடியாய் சொத்திருந்தாலும் அடுத்தவருக்கும் கொடுக்க பலருக்கு மனதிருக்காது. அடுத்த வேளை சோறுக்கு உத்தரவாதமில்லாத நிலையிலும் தனக்கு கிடைத்த உணவை சிலர் பகிர்ந்துப்பாங்க. அத்தகைய கொடை உள்ளம் கொண்டவர்கள் உள்ளத்தில் வாழ்பவள் இவள். கேட்ட வரத்தை அள்ளி, அள்ளி வழங்குவதால் இவளுக்கு வரதான கவுரின்னு பேர்.
சொர்ண கவுரி….
ஒரு பிரளயத்தின் முடிவில் அலைகடலின் நடுவே சொர்ணலிங்கம் ஒன்று தேவர்களுக்கு கிடைத்தது. அதை வைத்து அவர்கள் பூஜித்துவர, பொன்மயமாக ஈசனும், பார்வதிய்ம் வெளிப்பட்டனர். அதனால் இவளை சொர்ண வல்லி என போற்றினர். ஆவணி மாத வளர்பிறை திருதியை திதியில் வழிப்பட்டால் வறுமை நீங்கி, குலதெய்வத்தின் அருள் கிட்டும்.
விஸ்வபுஜா மகா கவுரி…
தீவினை பலன்களை, நல்வினை பலன்களாய் மாற்றுபவள். அனைத்து உயிர்களுக்கும் இன்பம் அளிப்பவள். தூய எண்ணங்களை மனதில் வளர செய்பவள். ஆசைகளை பூர்த்தி செய்வதால் பூர்த்தி கவுரி என்றும் பெயர். சித்திரை மாத வளர்பிறை திருதியை திதியில் இவளை வழிபடுவது நல்ல பலனை தரும்.
கேதார கௌரி விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி திதியில் ஆரம்பித்து, தீபாவளி அமாவாசை அன்று முடிக்க வேண்டும். அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க ஆசுதோஷியாகிய சிவன் மிக விரைவாகவே வரம் கொடுத்து விடுவார் என்பது நம் ஐதீகம். சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒண்ணு.
இந்நாளில் விரதமிருப்பவர்கள், வீட்டை சுத்தம் செய்து, தலை குளித்து நாள் முழுக்க எச்சில்கூட விழுங்காமல் உபவாசமிருந்து, அரிசி, வெல்லத்தினால் செய்த அதிரசம், 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கிழங்கு, நோன்புக்கயிறு, அதிரசம், பழுத்த செவ்வரளி இலை, செவ்வரளி மொட்டு வைத்து கோவிலுக்கு சென்று அர்த்தநாரீஸ்வரரை வணங்கி, வீட்டில் வடை, கொழுக்கட்டை, சுய்யம், சாப்பாடு என படையல் போட்டு ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து, அர்த்தநாரீஸ்வரராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை, முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் ஏந்தினானை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும்.
நோன்பின் முடிவில் நோன்புக்கயிறை அனைவரும் கட்டிக்கனும். பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் கட்டிக்கனும். நோன்பு சட்டியில் வைத்த பலகாரங்களை அந்த வீட்டினரே சாப்பிடனும். நோன்புக்கயிறை எக்காரணம் கொண்டும் தொலைத்துவிடக்கூடாது., மூன்று அல்லது ஐந்து நாட்கள் கழித்து நோன்பில் வைத்து சாப்பிட்ட பலகாரம், கயிறு, வெற்றிலை, பாக்கு, பூக்கள்ன்னு எஞ்சியவகளை ஆற்றில் விட்டு விட்டுனும். ஒருவேளை இந்த பழக்கம் இல்லாதவங்க, நோன்பு எடுக்க ஆசைப்பட்டா, அவங்க கைக்கு இந்த நோன்பு கயிறு கிடைச்சா, அதை ஒரு செம்புல நெல் நிரப்பி, மஞ்சத்துணியால கட்டி தீட்டு படாம பரண்மேல் வச்சிடுவாங்க. மறுவருசம் அதை திறந்து பார்க்கும்போது நெல்லின் அளவு வளர்ந்திருந்தா அவங்க நோன்பு எடுக்கலாம்ன்னு எங்க ஊர் பக்கம் சொல்வாங்க.