“காசியைவிட வீசம் அதிகம்” என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவத்தலமாக புகழ்ந்து கூறப்படும் திருத்தலம் #ஸ்ரீவாஞ்சியம் ஆகும்.
இத்தலத்தில் #திருமால் சிவனை வழிபட்டு இலட்சுமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை.
திருமகள், இயமன், பிரமன், இந்திரன், பராசரர், அத்திரி முதலியோர் வழிபட்ட தலம்.
இத்தலத்தில் இறப்பவர்க்கு எமவாதனை இல்லை என்பவையும் தொன்நம்பிக்கைகளாகும்.
இங்கு எமனுக்குத் தனிக்கோயிலுள்ளது.
இத்தலத்தில் எம வாகனத்தில் சிவபெருமான் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஊர்வலம் செல்கிறார்.
யமன், பைரவர் இருவருக்கும் அதிகாரமில்லாத தலம் என்றும் காசியை விடவும் நூறு மடங்கு உயர்ந்த தலமாகவும் முனிவர்களால் கூறப்பட்டுள்ளது.
காசிக்கு நிகராக ஆறு திருத்தலங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் இத்தலமும் ஒன்று.
கிரகண சமயங்களில் மற்ற அனைத்து கோயில்களும் நடையடைக்கப்படுவது வழக்கம். ஆனால் வாஞ்சியம் திருக்கோயிலில் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து இறைவனாருக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடத்தப்படுகின்றது.
இயமன் தான் உயிரை எடுக்கும் பணியைச் செய்வதால் மற்றவர்களால் வெறுக்கப்படுவதையும், தமது பணி காரணமாக தமக்கு ஏற்பட்டுள்ள தோஷத்தால் மனஅமைதி இழந்து தவிப்பதையும் திருவாரூர் தியாகராஜரிடம் சென்று முறையிட்டார். அவர் திருவாஞ்சியம் சென்று வழிபடச் சொல்ல, அதன்படி இயமனும் திருவாஞ்சியத்தில் தவம் இருந்தார். தவத்திற்கிறங்கி வந்த சிவபெருமானிடம் தமது குறைகளைக் கூற, அவரும் அருளி, இத்தலத்து க்ஷேத்திர பாலகனாக இயமனை நியமித்தார். மேலும் ஏதேனும் புண்ணியம் செய்தோர் மட்டுமே திருவாஞ்சியத்திற்கு வரும்படி பார்த்துக்கொள்ளச் சொல்லியும், இங்கு வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு மறுபிறப்பு இல்லாமையையும், அமைதியான இறுதிக்காலத்தையும் தரச் சொல்லியும் உத்தரவிட்டார். இத்தலத்தில் இயமனை வழிபட்ட பின்னரே, சிவபெருமான் தரிசனம் செய்தல் மரபு.
மயிலாடுதுறையிலிருந்து 25கி.மீ தொலைவில் உள்ள நன்னிலத்திலிருந்து எட்டு கி.மீ தொலைவில் உள்ளது.
திருவாரூர்-குடவாசல் சாலையிலும் வரலாம்.