சுமார் 2500 ஆண்டுகளுக்குமேல் பழமையான கோவிலாக இக்கோவில் இருக்கிறது. இக்கோவிலின் பிரதான தெய்வமான திருமாலின் அவதாரமான நரசிம்ம மூர்த்தி காட்டழகிய சிங்கர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் தலவிருட்சமாக வன்னி மரம் இருக்கிறது. ராமானுஜரின் சீடரும், ஸ்ரீரங்கத்தில் பிறந்தவருமான பிள்ளை லோகாச்சாரியார் இக்கோவிலில் ஸ்ரீவசநவபூஷணம் முதலிய பதினெட்டு கிரந்தங்களை இயற்றியுள்ளார்.
தல புராணங்களின் படி முற்காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இப்பகுதிக்கருகே வசித்த மக்கள் காட்டு யானைகளின் தொல்லையால் அவதிப்பட்டனர். யானைகளை அடித்து விரட்டுவது இயலாத காரியம், அதே நேரத்தில் அந்த யானைகளை கொல்வதோ மிகவும் பாவமான செயல். இப்படி இரண்டு விடயங்களையும் சிந்தித்து குழம்பிய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இப்பகுதியில் இந்த நரசிம்மர் கோவில் அமைத்தனர். அதன் பிறகு இப்பகுதியில் காட்டு யானைகளின் தொந்தரவு குறைந்தது. காட்டை திருத்தி கோவில் அமைக்கப்பட்ட நரசிம்மர் என்பதால் இவருக்கு காட்டழகிய சிங்கர் என்கிற பெயர் ஏற்பட்டது.
கோவில் சிறப்புக்கள்
பொதுவாக கிழக்கு திசை பார்த்தவாறு இருக்கும் பெருமாள் இங்கு மேற்கு திசை பார்த்தவாறு காட்சி தருகிறார். கர்ப கிரகத்தில் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர் தனது இடது தொடையில் லட்சுமி தேவியை அமர வைத்திருக்கும் நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பக்தர்களை காக்கும் அபயஹஸ்த முத்திரையை வலது கையில் நரசிம்மர் கொண்டிருக்கிறார். விஜயதசமி தினத்தன்று ஸ்ரீரங்கம் பெருமாள் இங்குள்ள பெரிய மண்டபத்தில் எழுந்தருளி காலை முதல் மாலை வரை அருள்பாலிக்கிறார். பிறகு குதிரை வாகனத்தில் புறப்பட்டு, வீதியில் இருக்கும் தல விருட்சம் வன்னி மரத்தில் அம்பெய்தி தெற்கு வாசல் வழியாக மூலஸ்தானத்திற்கு செல்கிறார்.
இக்கோவில் ஒரு பிராத்தனை தலமாக விளங்குகிறது. பெருமாளின் ஜென்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திர தினத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. பக்தர்கள் விரும்பும் நட்சத்திர தினங்களிலும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இந்த நாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு, தீராத நோய்கள் தீருவது மற்றும் இன்ன பிற விரும்பிய வரங்களை பெருமாள் அருள்வதாக கூறுகிறார்கள் பக்தர்கள்.
பிரதோஷ நாளில் இந்த நரசிம்மருக்கு செய்யப்படும் பூஜையில் கலந்து கொண்டு வழிபடும் குழந்தை பாக்கியமில்லாத தம்பதிகளுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று உறுதியாக கூறுகிறார்கள். வைகாசி நரசிம்ம ஜெயந்தி, ஆனி சுவாதி நட்சத்திரம், ஆடி ஜேஷ்டாபிஷேகம், பங்குனி யுகாதி ஆகிய நான்கு நாட்களின் போது ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து தைலக்காப்பு, திருப்பணியாரங்கள் இக்கோவிலுக்கு அனுப்பப்படுகிறது.
கோவில் நடை திறப்பு
காலை 6.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
கோவில் முகவரி
அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோவில்
ஸ்ரீரங்கம்
திருச்சிராப்பள்ளி – 620006.