நெல்லை சந்திப்பு தாமிரபரணி நதிக்கரையோரம் உள்ள மணிமூர்த்தீஸ்வரத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீமூர்த்தி விநாயகர் என்ற உச்சிஷ்ட கணபதி. விநாயகருக்கு என தனி கோயிலாக கொண்டு அருளும் இங்கு மட்டுமே ராஜகோபுரம் உள்ளது. இதனால் ஆசியாவிலேயே ராஜகோபுரம் கொண்ட தனி விநாயகர் ஆலயம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. ராஜகோபுரத்தில் மட்டும் 108 விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ள இக்கோயிலில் நாயக்கர்கள், பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலங்களில் சிறப்பான வழிபாடுகள் நடந்ததாக வரலாறுகள் உள்ளன.
இடையில் சரியாக பராமரிக்கப்படாமல் இருந்த இந்த ஆலயம் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு உபயதாரர்கள் அறநிலையத்துறையுடன் இணைந்து மீண்டும் சீரமைத்து ராஜகோபுரத்தை புதுப்பித்துள்ளனர். புதிய கொடிமரமும் அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு இக்கோயிலில் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பம்சமாக 8ம் திருநாளான வருகிற 9ம் தேதி வெள்ளிக்கிழமை ஆயிரத்து 8 தேங்காய்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மூர்த்தி விநாயகர் தனது இடப்பக்க மடியில் ஸ்ரீநீலவாணியை அமர்த்தியபடி அருளுகிறார். ஸ்ரீநீலவாணி என்பது லட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய தேவியரை உள்ளடக்கிய தெய்வமாக கருதப்படுகிறது.
ஆனந்த நிலையில் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் பல்வேறு பலன்களை பெறமுடிகிறது. குறிப்பாக இவருக்கு தேங்காய் மாலை அணிவிப்பது விசேஷமாக உள்ளது. திருமணம் வேண்டி வருபவர்களுக்கு தடைகள் அகன்று விரைவில் திருமணம் கைகூடுகிறது. இதற்காக தேன் கலந்த மாதுளை மாலை மற்றும் தேங்காய் மாலை அணிவித்து வழிபடுகின்றனர். சபரிமலை சீசன் காலங்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். இக்கோயிலில் உள்ள பைரவர் சன்னதியில் உள்ள தீர்த்த கட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் 3 நாட்கள் சூரிய ஒளி நேராக விநாயகர் சன்னதியில் படுவது கூடுதல் சிறப்பம்சமாகும் என கோயில் பட்டர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
பிரகாரத்தில் 16 வகையான விநாயகர்
உச்சிஷ்ட கணபதி கோயிலின் உள் பிரகாரத்தில் விநாயகர் 16 வடிவங்களுடன் தனிச்சிறப்புகளுடன் அருளுகிறார். குஷி கணபதி (நோய் அகல), ஹரித்ர கணபதி (காரியத்தடை, வியாதி நீங்க), ஸ்வர்ண கணபதி (தங்கம் அடைய), விஜய கணபதி (வெற்றி அடைய), அர்க கணபதி (நவக்ரக தோஷம் நீங்க), குருகணபதி (குருவருள் பெற), சந்தான லட்சுமி கணபதி (நன்மகவு அடைய), ஹேரம்ப கணபதி (அமைதிபெற), சக்தி கணபதி (செயல் வெற்றிபெற), சங்கடஹர கணபதி (தடங்கல் நீங்க), துர்கா கணபதி (துன்பம் நீங்க), ருணஹரண கணபதி (கடன் தொல்லை தீர), ஸ்ரீவல்லப கணபதி காயத்ரீ (காரிய சித்தி, கணவன் மனைவி அன்பு பெருக), சித்தி கணபதி (முயற்சிகள் வெற்றிபெற), வீர கணபதி (தைரியம் அடைய), சர்வ சக்தி கணபதி (உடற் பலம் பெற) ஆகிய கணபதி சன்னதிகள் உள்ளன.