துவாபர யுகம் முடிந்து, கலியுகம் தொடங்க இருந்த காலகட்டம் அது. கலியுகத்தில் நடைபெற இருக்கும் தீமைகள், துன்பங்களை முன்கூட்டியே அறிந்த முனிவர்களும், ஞானிகளும், அதன் வீரியங்கள் ஓரளவேனும் குறைய வழி தேடினர். அவர்கள் முன்பாகத் தோன்றிய நாரதர், “அனைவரும் பல புண்ணிய தலங்களுக்கு பிரிந்து சென்று, இறைவனை நினைத்து தவம் செய்வோம்” என்றார். அதன்படி ஒவ்வொருவரும் ஒரு புண்ணிய தலத்தைத் தேடிச் சென்றனர்.
நாரதரும், சுக முனிவரும் புண்ணிய தலத்தைத் தேடி தென்னிந்திய பகுதிக்கு வந்தனர். ஓரிடத்தில் மூன்று மலைகளைத் தொடராகக் கொண்ட பகுதி அவர்கள் கண்ணில் பட்டது. அந்த இடத்தில் தவம் செய்யும்படி சுக முனிவரைப் பணித்தார், நாரதர். அவரது வாக்குப்படி அந்த இடத்திலேயே, தர்ப்பை புல் கொண்டு ஆசனம் அமைத்து, அதன்மேல் அமர்ந்து நாராயணரை நினைத்து கடுமையான தவத்தை மேற்கொண்டார், சுக முனிவர்.
தவத்தின் பயனாக பத்மாவதி தாயார் உடனாய ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோலத்தில், சுக முனிவருக்கு திருமால் காட்சி அளித்தார். அவரை வணங்கிய சுக முனிவர், “இத்தலம் வந்து வழிபடுபவர்களுக்கு, கலியுகத்தில் ஏற்படும் தீய எண்ணங்களில் இருந்து விடுதலை அளிக்க வேண்டும். அதோடு இங்குள்ள மலையை வணங்குபவர்களுக்கும், நற்கதியை வழங்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்.
இந்த ஆலய மூலவரின் பெயர் ‘சுக ஸ்ரீனிவாசப் பெருமாள்’ என்பதாகும். தாயாரின் திருநாமம், ‘சுக பத்மாவதி தாயார்’. இந்த ஆலயத்தில் தல விருட்சமாக தர்ப்பை உள்ளது. இங்குள்ள தீர்த்தம், ‘சுக தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள சுவாமியும், தாயாரும் சிரித்த முகத்துடன் காட்சி தருகிறார்கள். எனவே இவர்களை வணங்கினால் வாழ்வில் ஆனந்தம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இங்குள்ள மலை மீது சுக முனிவர் தவம் இயற்றியதால், இதற்கு ‘சுக மலை’ என்று பெயர். இந்த மலை மீது அரிதான கல்லால் ஆன தீபம் இருக்கிறது. இந்த கல் தீபத்தை நாரதர் ஏற்றி வைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்திற்குச் செல்பவர்கள், இன்றும் இந்த கல் தீபத்தை தரிசிக்க முடியும். இந்த மலையில் சுக முனிவர் தவம் செய்த இடம் சிறப்பானதாக கருதப்படுகிறது.
ஆலயத்தைத் சுற்றி வரும் போது, நின்ற திருக்கோலத்தில் கோதண்டராமர், இந்த ஆலயம் தோன்ற காரணமான சுக முனிவர், குழந்தை வடிவ கண்ணன் காட்சி தருகின்றனர். மேலும் நரசிம்மரின் நர்த்தன திருக்கோலம், கிருஷ்ணரின் காலிங்க நர்த்தனம் மற்றும் கோபியர்களுடன் வேணுகோபாலன் நடனம்புரியும் சிற்பங்களும் சிறப்பு மிக்கவையாக உள்ளன. ஆலயத்தின் தென்பகுதியில் கல்லால் ஆன புற்று உள்ளது.
அமைவிடம்
செய்யாறு- வந்தவாசி சாலையில் எச்சூர் கிராமம் உள்ளது. இங்கிருந்து 3 கிலோமீட்டர் சென்றால் திருப்பதி தாங்கல் என்ற ஊரில் இந்த ஆலயம் இருக்கிறது.