நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி, களா மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்ததால், அது திருக்களந்தை என்று அழைக்கப்பட்டது. அந்தக் களக்காடு திருத்தலத்தில், அன்னை கோமதியுடன் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு சத்தியவாகீஸ்வரர்.
தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட இந்த ஆலயம் கி.பி. 12ம் நூற்றாண்டில், வீரமார்த்தாண்டவர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் ‘சோரகாடவி’ என்றும் அழைக்கப்படுகிறது.
சீதையின் பிரிவால் வருந்திய ராமன், ஒரு புன்னை மரத்தின் நிழலில் குடிகொண்டிருந்த சிவபெருமானை வழிபட, ‘சீதையை மீட்டு வர யாம் துணையிருப்போம்’ என்று சத்தியவாக்கு அருளினார் ஈசன். பின்னர், சீதையை மீட்டுக் கொண்டு ராமன் இத்தலத்துக்கு வந்து, இங்குள்ள இறைவனுக்கு ‘சத்தியவாகீசப் பெருமான்’ எனத் திருநாமம் சூட்டி வணங்கிச் சென்றார் என்பது தல வரலாறு.
ஒரு போரின்போது, தேவர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்ட பிறகே, ஈசன் துணையுடன் அசுரர்களைப் போரில் வென்றதாகவும் சொல்லப்படுகிறது. இங்குள்ள தீர்த்தத்துக்கு ‘சத்திய தீர்த்தம்’ என்று பெயர்.
பக்தர்களால் பெரியகோயில் என அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர், ஸ்ரீகோமதி, ஸ்ரீ நவநீதகிருஷ்ணர், ஸ்ரீதிரிபுரசுந்தரி, ஸ்ரீ துர்கை, ஸ்ரீமுருகன், ஸ்ரீகாசிவிசுவநாதரச்ர் ஸ்ரீ விசாலாட்சி ஆகியோருடன் சனீஸ்வரர், பைரவர், சந்தன நடராஜர், ஆடல்வல்லான், கஜலட்சுமி, விநாயகர், ஆஞ்சநேயர், சரஸ்வதி, ஐயப்பன் ஆகிய தெய்வங்களையும் தரிசிக்கலாம்.
சிற்பங்களும், இசைத் தூண்களும்…
சிற்ப அழகுடன் கூடிய மண்டபங்களும், அவற்றில் மணி மண்டபத்தில் உள்ள இசைத் தூண்களும் இந்தத் திருக்கோயிலின் தனிச் சிறப்பம்சங்கள் ஆகும்! இந்த இசைத் தூண்களைத் தட்டினால், ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொருவிதமான ஒலி எழுவதைக் கேட்கலாம்.
கோயில் வெளிப் பிராகாரத் தில் அந்நாளில் பயன்படுத்தப் பட்ட தானியக் கூடம் ஒன்று இன்றைக்கும் வரலாற்றுச் சின்னமாகக் காட்சியளிக்கிறது.இத்திருத்தலத்தில் மகாபாரதக் காட்சிகளை விளக்கும் வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை மூலிகை வண்ணக் கலவைகளால் தீட்டப்பட்டவை ஆகும். இத்தகைய வண்ண ஓவியங்கள், தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஓவியங்களை நிகர்த்தவை என்று கூறப்படுகிறது. கோயிலின் முன் வாயிலில், இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்த வீரமார்த்தாண்டவர்மனுடன், சுந்தரரும் சேரமான் பெருமானும் உள்ளனர்.
அற்புதம்…
தொன்மையான இக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச், செப்டம்பர் மாதங்களில் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களிலும், கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கத் திருமேனி மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுகின்றன.
சுரங்கப் பாதை…
இக்கோயிலில் சுரங்கப் பாதை ஒன்று உள்ளது. இந்தப் பாதை திருப்புடைமருதூர் கோயிலுக்கும், களக்காடு ‘நினைத்ததை முடித்த விநாயகர்’ கோயிலுக்கும் செல்வதாகக் கூறப்படுகிறது. இந்தச் சுரங்கப் பாதையில் ரகசிய அறை ஒன்றும் உள்ளது. இந்த அறைக்குக் காற்றும், வெளிச்சமும் நன்றாக வருகிறது. ஆனால் அவை எங்கிருந்து வருகின்றன என்பது இன்றும் மர்மமாகவே உள்ளது. பண்டைய கட்டடக் கலையின் உன்னதத்துக்கு எடுத்துக்காட்டாக இதைக் கூறலாம்.
புன்னை மரம் தலவிருட்சமாகவும், பச்சையாறு தீர்த்தமாகவும் அமையப் பெற்றிருக்கும் இந்தக் கோயிலுக்கு, மகாசிவராத்திரி, மாசிமகம் முதலான புண்ணிய தினங்களில் வந்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.