வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும். இது செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் விசேஷம்.
வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வதால் கிடைக்கப் பெறும்.
சங்கடஹர சதுர்த்தி – புராணத் தகவல்கள் :
1. முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.
2. சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு(பெயர் அறிய முடியவில்லை) எடுத்துரைத்தார் என்று ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது.
3. ஸ்ரீகிருஷ்ணர் நான்காம் பிறையை கண்டதால் அவருக்கு அபவாதம் ஏற்பட்டது. எனவே அவர் இந்த விரதத்தை மேற்கொண்டு கணேசனை பூஜித்து அதிலிருந்து மீளப் பெற்றார் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.
4. வனவாசத்தின் போது, கண்ணபிரான் இவ்விரதத்தைப் பற்றி பஞ்ச பாண்டவர்களிடம் எடுத்துரைத்ததாகவும், அதன்படி இதனை அனுஷ்டித்து யுதிஷ்டிரர் நாட்டை மீண்டும் அடைந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
5. இந்த நாளில் தான், விநாயகப் பெருமானின் அருளைப் பெற்று, சந்திரன் சாப விமோசனம் அடைந்தான். எனவே இந்நாளில் சந்திரன் பிரதானமாகிறான்.
6. தமயந்தி நளனை அடைந்தது இந்த விரதத்தின் மகிமையால் தான் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.
7. இந்த விரதத்தை முதன் முதலில் அங்காரகன் (செவ்வாய்) கடைபிடித்து நவகிரக பதவி அடைந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. எனவே தான் செவ்வாய்க்கிழமை வரும் விரதம் விசேஷமாக கருதப்படுகிறது.
8. மேலும், இந்திரன், இராவணன் போன்றோர் இந்த விரதத்தின் மூலம் பலன் அடைந்திருக்கின்றனர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.