சிவபெருமானின் 64 வடிவங்களில், ‘சதாசிவம்’ என்ற வடிவமும் ஒன்று. 5 முகங்களுடன் காட்சியளிக்கும் இவரை, 5 தொழில்களை நிகழ்த்துபவராக புராணங்கள் சித்தரிக்கின்றன. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய அந்த ஐந்து தொழில்களையும் அவர் செய்வதாக சொல்லப்படுகிறது. சதாசிவனின் மனைவியாக இருப்பவளின் பெயர், மனோன்மணி ஆகும். இந்த சதாசிவமானவர், 5 முகங்களையும், 10 திருக்கரங்களையும், 15 கண்களையும் கொண்டவர். இவர் தனது வலது பக்க கரங்களில் சூலம், மழு, கட்வாங்கம், வஜ்ரம் மற்றும் அபயஹஸ்த முத்திரையோடும், இடது பக்க கரங்களில் நாகம், மதுலிங்கப்பழம், நிலோற்பலம், உடுக்கை, மணி மாலை ஆகியவற்றை தாங்கியும் காட்சியளிப்பார்.
இந்த வகையிலான சதாசிவ சிலை, அலகாபாத் அருகில் உள்ள பிடா என்ற இடத்தில் கிடைத்துள்ளது. இந்த விக்கிரகமானது 2-ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பஞ்சமுக சதாசிவத்தை ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் தரிசிக்கலாம்.
நோபாளத்தில், ஏராளமான சதாசிவ விக்கிரகங்களை தரிசிக்க முடியும்.
மத்திய பிரதேசம் நதிசிவானா கரையில் உள்ள மன்டாகாவூர் என்ற இடத்திற்குச் சென்றால், அஷ்டமுக பசுபதி நாதரை தரிசனம் செய்யலாம். இங்கு கீழே நான்கு, அதற்கு மேலே நான்கு என்ற ரீதியில் லிங்கத்தின் மீது சிவனின் முகங்கள் அமைந்திருக்கும்.
வியட்நாம், கம்போடியா, போர்னியோ மற்றும் ஆப்கானிஸ்தானத்திலும், சதாசிவ மூர்த்தியை தரிசனம் செய்யலாம்.
சதாசிவ லிங்கம் போன்றே, ஸ்படிக லிங்கமும் அபூர்வமான ஒன்று. ஜம்முவில் உள்ள ரன்பிரேஷ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்படிக லிங்கம் மிகப்பெரியதாகும்.
உத்தரகாண்ட் மாநிலம் டெக்ராடூன் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபார்கேஷ்வரர் கோவிலில், இரண்டு ஸ்படிக லிங்கங்கள் அருகருகே வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் முக்கிய ஸ்தலமான ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. இதற்கு அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை சிறப்பு தரிசனம் உண்டு. அந்த நேரத்தில் ஸ்படிக லிங்கத்தை தரிசிக்க ஏராளமான கூட்டம் அலைமோதும்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் ஸ்படிக லிங்கம் இருக்கிறது. இதனை ‘உடையவர்’ என்று அழைப்பார்கள்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள பொற்சபையிலும், ஸ்படிக லிங்கம் இருக்கிறது. இந்த லிங்கத்தையே நடராஜராக பாவித்து அபிஷேகம் செய்வார்கள்.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் ஆகிய தலங்களிலும் ஸ்படிக லிங்கங்கள் இருக்கின்றன.