*காலபைரேஸ்வரர் கோவில் வரலாற்றைப் பற்றிப் பார்ப்போம்.*
*கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்காக 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாண்டியா மாவட்டம் பெல்லூர் நகரில் உள்ள ஆதிசுன்சனகிரியில், கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் காலபைரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.*
*காலபைரவர் என்றவுடன் நமக்கெல்லாம் உடனடியாக ஞாபகத்திற்கு வருவது, பைரவரின் வாகனமாக இருக்கும் நாய்தான். பைரவரை தேய்பிறை அஷ்டமியில் அதிகாலையில் நீராடி விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வணங்கினால், ஆரோக்கியமான வாழ்க்கை, செல்வ வளம் கிடைக்கும் என்பது ஐதீகம்.*
*பைரவர், வீரபத்திரர், ஷேத்ரபாலர் ஆகிய மூவரும் சிவபெருமானுடைய மற்ற வடிவங்கள். தீயவர்களை அழித்தபோது பைரவராகவும், தட்சனின் யாகத்தை அழித்தபோது வீரபத்திரராகவும், கோவில்களைக் காக்கும் நிலையில் ஷேத்ரபாலராகவும் போற்றப்படுகிறார். புராண அடிப்படையில் இதற்கு பல விஷயங்களைச் சொல்லலாம்.*
*எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னிடம் வந்தவர்களுக்கு அருள்பாலிப்பதால் இவருக்குப் ‘பைரவர்’ என்று பெயர். வில்வம், செம்பருத்தி தவிர்த்த மற்ற மலர்களை பைரவருக்கு பயன்படுத்தலாம். சம்பா சாதம், உளுத்தம் பருப்பு கலந்த தயிர்சாதம், அப்பம், மிளகுவடை ஆகியவை இவருக்குரிய நைவேத்தியம்.*
*வட இந்தியாவில் உள்ள காசியில், சனீஸ்வரனுக்குக் குருவாக இருக்கும் காலபைரவரைத்தான் முக்கிய கடவுளாக தரிசிக்கிறார்கள். காசி தவிர மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் இருக்கும் மற்றொரு காலபைரவரையும் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.*
*காலபைரேஸ்வரர், ஸ்தம்பம்பிகா தேவி*
*கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்காக 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாண்டியா மாவட்டம் பெல்லூர் நகரில் உள்ள ஆதிசுன்சனகிரியில், கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் காலபைரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் இது. 1993-ம் ஆண்டு கோவில் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டு, 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.*
*ஆதி ருத்ரராகிய சிவன், ஆதிசுன்சனகிரி மலைக்கு தவம் செய்வதற்காக வந்தபோது, அங்கிருந்த சித்த யோகிக்கு கோவில் அமைந்திருக்கும் இடத்தைக் கொடுத்து “இங்கு அமையப்பெறும் கோவிலில் பஞ்சலிங்க வடிவில் காட்சித் தருவேன்” என்று அருளினார். யோகி அந்த இடத்தில் சித்த சிம்மாசனத்தையும், மடத்தையும், கோவிலையும் அமைத்ததாக கூறப்படுகிறது.*
*இந்த காலபைரேஸ்வரர் ஆலயத்தில், கங்காதரேஸ்வரர், மல்லேஸ்வரர், சோமேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்திரமவுலீஸ்வரர் என ஐந்து அவதாரங்களைக் கொண்டு பஞ்ச லிங்கமாக சிவபெருமான் காட்சியளிக்கிறார். இந்த ஆலயத்தில் பழமை வாய்ந்த பிந்து சரோவரா புஷ்கரணியும் உள்ளது. இந்த புஷ்கரணியில், குழந்தையில்லாத தம்பதியினர் காலபைரவரை பரிபூரணமாக நினைத்து புனித நீராடினால் குழந்தையின்மை நீங்கி விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.*
*கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள காலபைரேஸ்வரர் கோவில், நான்கு பெரிய கோபுரங்களை கொண்டதாக உள்ளது. கோவில் உள்பிரகாரத்தில் 172 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் 4½ அடி உயரத்தில் 64 வகையான காலபைரவர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோவிலில் நடுவே காலபைரவரும், வடமேற்காக ஸ்தம்பம்பிகா தேவியும் அருள்புரிகின்றனா். தென்மேற்கில் நாகலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார். கணபதி, சுப்ரமணி ஆகியோரை சேர்த்து 5 தெய்வங்கள் இங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.*
*சுயம்புவாக எழுந்த ஸ்தம்பம்பிகா தேவியை பிரார்த்தனை செய்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு வருடமும் தை மாதம் 1-ந் தேதி மகர சங்கராந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு அம்மாவாசை மற்றும் மாத சிவராத்திரி அன்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை காலபைரேஸ்வரருக்கு தெப்போற்சவமும், கங்காதரேஸ்வரசாமிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. வருடாந்திர தெப்போற்சவம் நடத்துவதற்கு இரண்டு புது ஏரிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.*
*ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைஅன்று ஸ்தம்பம்பிகா தேவிக்கும், சங்கடஹர சதுர்த்தியன்று கணபதிக்கும் சிறப்பு அலங்காரமும் பூஜையும், ஒவ்வொரு அம்மாவாசையன்று துர்க்கா ஹோம பூஜையும் நடைபெறுகிறது.*
*ஆகவே வாய்ப்பு கிடைக்கும் போது இக்கோவிலை தரிசனம் செய்து பிறந்த பிறவியின் பயனை பெறவும்…*
*ஓம் நமசிவாய*
*அவனருளால் அவன்தாள் வணங்குவோம்!*
*பகிர்தல் ஒரு மிகச் சிறந்த பண்பாடு மட்டுமல்ல வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்*