வாழ்க்கை நிறைவு பெற உடல் சுத்தத்துடன் மனத்தூய்மையும் அவசியமாகிறது. ஆன்மிகம் அதற்கான வழிகளை நமக்கு காட்டுகிறது. நம் மனம் தூய்மையடைய பல மந்திரங்களை நாம் செபித்தாலும் வேதங்களின் மூலமான காயத்ரி மந்திரம் மிக சிறப்பு வாய்ந்ததாகிறது.
காயத்ரி மந்திரம் ஓதுவதால் நம் ஆத்மா அமைதி பெறுகிறது. ‘மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்’ என்று கிருஷ்ண பரமாத்மா கூறியதாக கீதை விளம்புகிறது. விஷ்ணு பகவான் உலகை சிருஷ்டித்த போது அவர் முகத்திலிருந்து முதலில் தோன்றியவள் காயத்ரி என்கிறது புராணம்.
மகரிஷி விசுவாமித்திரரின் தவத்தால் மகிழ்ந்த காயத்ரி தேவி அவருக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்ததாகவும், அவரே அதை உலக நன்மை கருதி நமக்கு அருளியதாகவும் ராமருக்கு இந்த மந்திரத்தை விஸ்வாமித்திரர் உபதேசம் செய்ததால் அதை பாராயணம் செய்தே ராவணனை வெற்றி கொண்டதாகவும் புராணங்கள் கூறுகிறது.
காப்பாற்றுபவள் என வர்ணிக்கும் காயத்ரி தேவியின் மந்திரத்தை தாளம் தப்பாமல் தினம் மனதில் தியானிப்பவர்கள் பயமென்பதே இல்லாமல் தேவியால் காப்பாற்றப்படுவார்கள். மேலும் நம் வீடு மட்டுமின்றி நாடு சுபீட்சம் பெறவும் கொடிய நோய்கள் அகலவும் காயத்ரி மந்திரம் உதவும்.
சிறப்புமிக்க காயத்ரி தேவி லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி எனும் ஐந்து முகங்களால் நம்மைக் காக்கிறாள். ஒரு முகம் பவளம் போல் சிவப்பாகவும், ஒரு முகம் முத்துப் போல் வெண்மையாகவும், ஒரு முகம் ஆகாயம் போல் நீலநிறமாகவும், ஒரு முகம் சந்திரனின் பிரகாசத்தையும், ஒரு முகம் சூரியனின் பொன்னிறத்தையும் கொண்டு அருள்புரிகின்றாள் அன்னை காயத்ரி தேவி.
காயத்ரி தேவி பிரம்ம லோகத்தில் காயத்ரியாகவும், சிவலோகத்தில் கவுரி எனும் பார்வதியாகவும், விஷ்ணு லோகத்தில் ஸ்ரீமகாலட்சுமியாகவும் விளங்குவதாக காயத்ரி ஸ்லோகம் கூறுகிறது. காலையில் சரஸ்வதி வடிவில் பிரம்ம சொருபிணியாகவும், நண்பகலில் சாம்பவி வடிவில் ருத்ர சொருபிணியாகவும், மாலையில் வைஷ்ணவி எனும் விஷ்ணு சொருபிணியாக வர்ணிக்கப்படுகிறாள்.
காலையில் கள்ளம் கபடமற்ற குழந்தையாகவும், மதியத்தில் பண்பு மிக்க நடுத்தர வயதினராகவும், மாலையில் அறிவும் அனுபவமும் மிக்க வயது முதிர்ந்த பெண்ணாகவும் காயத்ரி தேவி இருப்பதாக கூறுகிறது சாஸ்திரம்.
முக்காலமும் உணரவைக்கும் ஐந்தொழில்களையும் நிகழ்த்தி நம்மை மனப்பிணி மற்றும் உடற்பிணியில் இருந்து காக்கும் எளிய வழியாகத் திகழ்கிறது வேதத்தின் தலைவியான காயத்ரி தேவியின் மந்திரம்.