புதுவை மாநிலம் காரைக்கால் அடுத்துள்ள சனீஸ்வரர் பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிப்பட்டால்7 ½ ரையும் விலகி 8 ஆகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
‘நன்றிதமு சனிகவச நாள்தோறும்
அன்பினொடு நவின்று போற்றில்
வென்றிதரும் விறல் உதவும் புகழ் அளிக்கும்
பெருவாழ்வு மேவ நல்கும்
கன்றுபவத் துயரொழிக்கும் வினை ஒழிக்கும்
பணி ஒழிக்கும் கவலி போக்கும்
அன்றியும் உள் நினைந்தவெல்லாம் அங்கை நெல்லி
யம்கனியாம் அவனி யோர்க்கே”
(சனி கவசத்திலிருந்து சில வரிகள்)
‘நவம்” என்றால் ஒன்பது. கிரகங்கள் என்பது கோள்களைக் குறிக்கும், ஒன்பது கிரகங்களாகிய, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), சுக்கிரன், ராகு, கேது மற்றும் சனி ஆகியவற்றின் சுழற்சியின்போது இயற்கையிலும் மாறுதல் நடைபெறுகிறது.
அதேபோன்று, மனிதர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிப்பதைக் காணலாம் என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது இந்திய ஜோதிடர்கள் கணித்துக் கூறி உள்ளனர்.
கோள்கள் இடம் விட்டு இடம் மாறும் சமயம், மனிதர்களுக்கும் அவர்கள் பிறந்த நேரத்தின்படி, அவர்களது ஜன்ம நட்சத்திரத்தின் பலன்களை துல்லியமாக கணிக்க முடியும். அடுத்த சுழற்சியின்பொழுது, அதற்கேற்றபடி ஏற்ற இறக்கங்களை காண முடியும் என்கின்றனர்.
உரிய பரிகாரம் செய்ய தாக்கத்தின் உக்கிரம் குறைந்து தாங்கிக் கொள்ள சூழ்நிலை உண்டாவதை அறியலாம். தொழில்களிலும், பணியாற்றும் இடத்திலும், கல்வி பயிற்சியிலும் மாற்றம் ஏற்படும்.
நவக்கிரகங்களுக்கு உரிய தலங்கள் பல இருந்தாலும் பிரசித்தி பெற்றவையாக திருநள்ளாறு இவைகளில் அநேக கோவில்கள் கும்பகோணம் சுற்று வட்டாரத்தில் இருப்பது மிகவும் சிறப்பானதாகும். அவைகளை வரிசைப்படுத்தி உள்ளோம்.
1. ஆலங்குடி குரு – (வியாழன்)
2. திங்கர் – சந்திரன்
3. திருநாகேஸ்வரம் – ராகு
4. சூரியனார் கோவில் – சூரியன்
5. கஞ்சனூர் – சுக்கிரன்
6. வைத்தீஸ்வரன் கோவில்- செவ்வாய்
7. திருவெண்காடு – புதன்
8. கீழ்பெரும்பள்ளம் – கேது
9. திருநள்ளாறு – சனி
இப்பொது அருள்மிகு தர்ப்பனேஸ்வரர் திருக்கோவில், திருநள்ளாறு, சனீஸ்வரரை பற்றி தெரிந்து கொள்வோமா?
இது சிவ தலமாக இருந்தாலும், சனி பகவானே மிகவும் பிரசித்தி பெற்றவராக உள்ளார். இந்த கோவிலின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இந்த தலம் வந்து வழிபட்டவர்களில் திருமால், பிரம்மா, இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர் உள்ளனர்.
இந்த தலத்தில் இருக்கும் விநாயகபெருமான் சொர்ணவிநாயகர் என்ற நாமத்துடன் விளங்குகிறார். இந்த கோவில் சுமார் 1900 வருடம் பழமை வாய்ந்தது.
சூரியனுடைய மனைவியின் பெயர் உஷா. அவர் சூரியனின் வெப்பம் தாளாது, அவளது நிழலில் ஒரு பெண்ணை உருவாக்கி அதற்கு சாயா தேவி என்ற பெயருடன் இருந்துவந்தார். இது அறியாமல் அவருடன் சூரியன் உறவாடி பிறந்தவர்தான் சனிபகவான்.
குழந்தை பிறந்த பின்பு இதை அறிந்த சூரியன் இருவரையும் வெறுத்தார். சனி பகவான் இதன் பின்பு காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டு, கிரகங்களின் வழி வந்தால், நவகிரகத்திற்கு சென்று அடைந்தார்.
திருநள்ளாற்று தர்ப்பனேஸ்வரர், அன்னை பிராணேஸ்வரியும், இங்கு அமர்ந்து அருள் பாலிக்கின்றனர். திருமாலுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி இந்த தலத்து தர்ப்பனேஸ்வரரையும் அன்னையும் வழிபட மன்மதனை குழந்தையாகப் பெற்றார்.
திருநள்ளாறு செல்பவர்கள் கோவிலுக்குள் நுழையும் பொழுது, வாசல் படியை தொட்டு வணங்கிச்செல்கின்றனர். இந்த இடத்தில் சனீஸ்வரன் தங்கி இருப்பதாக ஐதீகம்.
நளன் தனது இன்னல்கள் தீர தர்ப்பனேஸ்வரரை தஞ்சம் அடைய இக்கோவிலில் நுழைந்த சமயம், அவரைத் தொடர்ந்து வந்த சனி பகவான், சிவபெருமான் தன் மீது கோபம் கொள்வாரோ என்று பயந்து, வாசல் படியிலேயே இருந்து விட்டதாக கூறுகின்றனர்.
ஆனால், சிவபெருமான், சனி பகவானின் பாரபட்சம் இல்லாத சேவையைப்பாராட்டி, அவருக்கு ஈஸ்வர பட்டம் தந்து தன் கோவிலின், நுழைவாயிலேயே இடம் கொடுத்து தங்க வைத்தார்.
இந்த தலத்து வரலாற்றை அறிந்தால், புராண காலத்திலேயே காதலுக்கு கொடுக்கப்பட்ட மாரியாதை தெரிகிறது. நிடத நாட்டு மன்னன் நளன். சேதி நாட்டு இளவரசி தமயந்தி. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி மணம் புரிந்து கொண்டனர்.
ஆனால் தேவர்கள் தமயந்தியை மணம் புரிய விரும்பினர். ஆகவே இந்த திருமணத்திற்கு பிறகு, நளன் மீது பொறாமையும் கோபமும், கொண்டு சனிபகவானை இதற்கு உதவி புரிய வேண்டினர்.
ஆனால் சனி பகவான், இவர்களது தூய்மையான அன்பை அறிந்து, நளனின் உண்மையான அன்பை அவர்களுக்கு உணர்த்த 71/2 ஆண்டுகளாக பல தொல்லைகள் கொடுத்தும், மனம் தளராத உறுதியுடன் தர்ப்பனேஸ்வரரை வந்து அடைந்து சாப விமோசனம் பெற்றார்.
இதை தேவர்கள் அறிந்து கொள்ளவே கலங்காத உள்ளம் கொண்ட நளனின் பொறுமையையும் தூய காதலையும் வெளிப்படுத்தச் செய்தார்.
சனீஸ்வரரை வணங்கி வழிபட, சில முறைகளை பின்பற்றி வருகின்றனர். அதுவே பரிகாரம் தேடுவதில் நல்ல பலன் கிட்டும் என்கின்றனர்.
அதிகாலை 5 மணிக்கு நள தீர்த்தத்தில் நீராடி, கரையில் உள்ள நள விநாயகர் மற்றும் பைரவரை வழிபட்டு பின்னர் கோவிலில் உள்ள கங்காதீர்த்துக்குளத்தை வணங்க வேண்டும். அதன் பின்னர், ராஜகோபுரத்தை முழுவதுமாக பார்த்து வணங்க வேண்டும். சனீஸ்வரரின் இருப்பிடமான படிக்கட்டை வணங்க வேண்டும்.
முதல் பிரகாரத்தில் நள சரித்திரத்தை பார்த்து வணங்கவும், காளத்தி நாதரை வணங்க வேண்டும். அடுத்து கருவறையில் உள்ள மூலவர் அருள்மிகு தர்பனேஸ்வரரை தரிசிக்க வேண்டும்.
அதன்பின்னர் தியாகவிடங்கர் சன்னதிக்க சென்று பக்தி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் மரகதலிங்கதையும் அர்த்தநரரீஸ்வரரையும் துர்க்கை, சண்டிகேஸ்வரர், தரிசித்து வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும்.
அங்குள்ள தெய்வங்களுக்கு வழிபாடு செய்து பின்பு, கட்டைக் கோபுரத்துள் அருள்பாலிக்கம், அன்னை பிராணேஸ்வரியை வணங்கி அதன் பின்னர் தான் சனீஸ்வரரிடம் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும். சிலர் முதலிலேயே சனீஸ்வரர் சன்னதிக்க சென்று விடுகின்றனர்.
இது சரியான வழிபாட்டு முறை அல்ல என்றும், சனிதோஷ நிவர்த்தி கிட்டாது என்றும் கூறுகின்றனர்.
இங்கு நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தக்குளங்கள் இருக்கின்றன. சனித்தொல்லை தீர, நள தீர்த்ததிலும், முந்திய சாபங்களுக்கு விமோசம் பெற பிரம்ம தீர்த்ததிலும், கல்வி மேன்மை பெற, சரஸ்வதி தீர்த்தத்திலும், நீராடி ஈசனை வழிபட பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.
சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி பாடும்திறமை பெறுவாராம். இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்கள், மகாசிவராத்திரி, மார்கழி திருவிழா, ஐப்பசி அன்னாபிஷேகம், பிரதோஷம், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு, சனிப்பெயர்ச்சி ஆகியவை ஆகும்.
சனிப்பெயர்ச்சியின் போது தங்க வாகனத்தில், தங்க கவசம் அணிந்து சனீஸ்வரர் வருவது மிகவும் ரம்மியமான காட்சி ஆகும். சனிபகவானைக்கண்டாலே பின் வாங்கும் நிலைமையில், இங்கு அவரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதும், தமிழ்நாட்டு மக்களுக்கு இணையாக கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் இங்கு பலர் வருகை தருகின்றனர்.
சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன் என்றும் அதற்கு அடுத்து சனிகிரகம் என்றும், வான் மண்டல அறிவியல் தகவல் வெளிப்படுத்துகிறது. சனீஸ்வாருக்கு பிடித்த தானியம் எள், ராசி மகரம், கும்பம், நிறம் கருப்பு, மலர் கருங்குவளை, திசை மேற்கு ஆகும்.
மூலவர் சுயம்பு மூர்த்தியாக தர்ப்பையில் இருந்து வெளி வந்தவராக உள்ளார்.
இப்பொழுதும் லிங்கத்தின் மீது தர்ப்பை முளைத்த தழும்பைக் காணலாம். இங்கு நந்தியும் பலி பீடமும், சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று விலகி இருப்பதை இந்த தலத்தில் மட்டுமே காணமுடிகிறது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடல் பெற்றதலம் இது.
*நடை திறப்பு* காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும்.