அருணகிரி நாதர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடி பரவசப்பட்ட இடம் இந்த வயலூர். அருணகிரிநாதர் மட்டுமல்ல, ஞானவரோதயர் என்ற அடியாருக்கு அருள் புரிந்த திருத்தலம்.
வயலூர் முருகனை வழிபட்டு இறவாப்புகழை பெற்றார் அருணகிரிநாதர் என்ற ஒன்று போதும் இந்த தலத்தின் பெருமைக்கு சான்று. பழனி, திருச்செந்தூருக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இந்த கோயிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தலாம். ஆனால், வயலூரானுக்கு வைத்த வேண்டுதலை வேறு கோயிலில் செலுத்த முடியாது அசலோடு வசூலித்துவிடுவான் இந்த வடிவேலன் என்பது இந்த ஊர் மக்களின் சொல்லாக இருக்கிறது.
கடன்தொல்லையோ, பிள்ளைகளுக்கான வேண்டுதல்களோ, திருமண பரிகாரங்களோ எதுவானாலும் வந்தவர்களின் மனம் குளிர வைக்கிறான் இந்த வயலூர் முருகன். வைத்த கண் வாங்காமல் பார்க்க வைக்கும் இந்த வடிவேலனை, வயலூர் நாயகனை கண்குளிர பார்த்துவிட்டு வந்தவர்களின் மனங்களையும் இவர் ஆட்சிகொண்டு விடுகிறான்.
தத்து திருப்புதல் என்ற நேர்த்திக்கடன் இந்த கோயிலின் வழக்கமாக இருக்கிறது. தோஷம் உள்ள குழந்தைகளை குறிப்பிட்ட காலம் வரை கோயிலுக்கு தத்து கொடுத்தலும், உரிய காலம் முடிந்ததும் தத்து திருப்புதலும் செய்கிறார்கள்.
திருமண பரிகார தலமாகவும் வயலூர் இருக்கிறது. வரம் தருவான் வயலூரான் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகவும், பெரும்பாலான நேரங்களில் நிஜமாகவும் இருக்கிறது. இந்த கோயிலில் வைகாசி விசாகம், கார்த்திகை திருவிழா, சஷ்டி விழா என வழக்கமான விழாக்களும் வெகு விமரிசையாக நடக்கின்றன.