ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி எந்த நாளில் வருகிறதோ அதை சிவராத்திரி என்கிறோம். இதை மாத சிவராத்திரி என்பர். மாசிமாதம் வரும் சிவராத்திரி மஹாசிவராத்திரி என்று மகிமை மிக்கதாக போற்றப்படுகிறது.
தேய்பிறை சதுர்த்தசி திதியும் சிரவண நட்சத்திரமும் வியாபிக்கும் இரவு சிவராத்திரியாக ஆகமங்கள் தெரிவிக்கின்றன. சிவனை மகாசிவன் என்று அழைப்பது இல்லை. அதே சமயம் சிவராத்திரியை ‘மகா’ எனும் அடைமொழியுடன் அழைக்கிறோம். இதில் இருந்தே இந்த இரவின் மகிமையை அறியலாம். அதே போல், ஈசனை சதாசிவன் என்று சொல்கிறோம். வேறு எந்த தெய்வத்தையும் ‘சதா’ சேர்த்துச் சொல்வதில்லை. ‘சதா’ என்றால் ‘எங்கும் எப்போதும்’ என்று அர்த்தம். எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன் ஈசன்.
அமரகோசம் என்ற சம்ஸ்கிருத நூலில் சிவம் என்றால் மங்கலம், சுபம் என்று அர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு பெற்ற சிவனுக்கு உகந்த ராத்திரியே சிவராத்திரி! மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் சிவராத்திரி அன்று சிவன் கோயில்கள் முழுநேரமும் திறந்திருக்கும். விடிய விடிய சிவனுக்கு அபிஷேகங்கள் நடைபெறும். அன்று மாலையில் துவங்கி, இரவு முழுவதும் விடிய விடிய பாராயணம், பஜனை, பூஜை, அபிஷேகம் என சிவாலயங்களில் அமர்க்களப்படும்.