போடிப்பட்டி :
பொதுவாக சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்பதால் பெரும்பாலும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. தற்போது வைகாசி மாதம் பிறந்துள்ள நிலையில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. கொரோனா பரவல் உச்ச நிலையை அடைந்துள்ள போதிலும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா பரவலுக்கு சுப நிகழ்ச்சிகளில் அலட்சியம் காட்டப்படுவதும் முக்கிய காரணம் என்று சுகாதாரத்துறையினர் சுட்டிக் காட்டியுள்ள நிலையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு புதிய அத்தியாயம் என்பதால் அதனை சிறப்பாகக்கொண்டாடவே பலரும் விரும்புவர். ஆனால் தற்போதுள்ள சிக்கலான சூழலில் எளிமையான முறையில் திருமணங்களை நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் திருமண வீட்டார் அதிக எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம். அரசு அறிவித்துள்ள முககவசம், சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
நுழைவாயிலில் கண்டிப்பாக கிருமி நாசினி, முககவசங்கள் போன்றவற்றை வைத்திருங்கள். கண்டிப்பாக உணவுக்கூடத்தில் சமூக விலகலுடன் அமர்ந்து சாப்பிட வகை செய்யுங்கள். உணவு சாப்பிடும் முன் கை கழுவுவதற்கு சோப் அல்லது திரவ சோப் வையுங்கள். சமையல்காரர்கள் மற்றும் உணவு பரிமாறுபவர்கள் தொடர்ச்சியாக முககவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்துங்கள். ஏனென்றால் பெரும்பாலான விழாக்களில் உணவுக் கூடத்தில்தான் கொரோனா பரவலுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
அதேநேரத்தில் திருமண விழாக்களில் கலந்து கொள்பவர்கள் சில நடைமுறைகளைப் பின்பற்றினால் சிக்கலில் மாட்டுவதை தவிர்க்கலாம்.அதன்படி மிக நெருங்கிய உறவினர் தவிர்த்து பிறருடைய திருமணத்துக்கு செல்வதை தவிர்க்கலாம். திருமணம் நிகழுமிடத்துக்கு மாவட்ட, மாநில எல்லைகளை தாண்டி செல்ல வேண்டியதிருந்தால் கண்டிப்பாக இ-பதிவு செய்து கொள்ளுங்கள். திருமணத்துக்கு செல்லும் போது முடிந்தவரையில் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிருங்கள்.
பயணத்தின் போது இ-பதிவு விவரம் மற்றும் திருமணப் பத்திரிகையை உடன் எடுத்துச் செல்லுங்கள். திருமணம் நடக்குமிடத்துக்கு சென்றதும் ஆர்வம் மிகுதியால் மற்றவரிடம் கைகுலுக்குவதோ, கட்டிப் பிடிப்பதோ செய்ய வேண்டாம். மற்றவர்களிடமிருந்து விலகியே இருங்கள். மண மேடைக்கு சென்று மணமக்களை சந்திக்கும் போது புகைப்படக்காரர் வற்புறுத்தலினால் முக கவசத்தை கழற்ற நேரிடும். அதுபோன்ற சூழலில் உடனடியாக முக கவசத்தை அணிந்திடுங்கள்.
முடிந்தால் போட்டோ எடுப்பதையே தவிர்ப்பது நல்லது. மேலும் புகைப்படக்காரரிடமோ மற்றவர்களிடமோ உங்கள் மொபைல் போனைக் கொடுத்து போட்டோ எடுக்கச் சொல்லாதீர்கள். யாரிடமும் போன் இரவல் வாங்கிப் பேசுவதோ கொடுப்பதோ தவிர்க்கப்பட வேண்டும். திருமணம் நடைபெறும் இடத்திலிருந்து அருகில் வீடுள்ளவர்களாக இருந்தால் முடிந்தவரை விருந்து உண்பதை தவிர்த்து வீட்டுக்கு வந்து சாப்பிடுங்கள்.
தவிர்க்க முடியாத நிலையில் சாப்பிட நேரிட்டால் கண்டிப்பாக சோப் போட்டு கைகளைக் கழுவிய பிறகே சாப்பிடுங்கள். உணவருந்தும் இடத்தில் கண்டிப்பாக சமூக விலகலை வலியுறுத்துங்கள். தண்ணீரை வீட்டிலிருந்தே கொண்டு செல்வது நல்லது. மேலும் முடிந்தவரையில் திருமணம் முடிந்ததும் அதிக நேரம் அங்கே இருக்காமல் வீடு திரும்புவது நல்லது. கொரோனா பரவலால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டும் அலட்சியம் காட்டினால் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருமண நிகழ்வுகளில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டதும் பலரும் முன்பதிவு செய்திருந்த மண்டபங்களை ரத்து செய்து விட்டனர். இவ்வளவு பேர்தானே அதற்கு எதற்கு வீண் செலவு, வீட்டிலேயே சமாளிச்சுக்கலாம் என்பது பலருடைய கருத்தாக உள்ளது. ஆனால் போதிய வசதிகளில்லாத நிலையில் வீடுகளில் நெருக்கடியாக நடத்தப்படும் திருமணங்கள் தொற்று பரவலை அதிகப்படுத்த கூடும். இதனால் அரசு விதித்த கட்டுப்பாடு பயனற்றுப் போகும் அபாயம் உள்ளது. எனவே நெருக்கடியான இடத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதுகுறித்த வழிகாட்டல்களையும் அரசு வழங்க வேண்டும். குறைந்த நபர்களுடன் நடந்தாலும் மண்டபம் போன்ற விசாலமான இடங்களில் நடத்தப்படுவதே பாதுகாப்பானதாகும்.