ஒவ்வொரு மாதத்திலும் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரமன்று முருகப்பெருமானை நினைத்து வழிபடுவார்கள். ஆடிமாதம் வரும் கார்த்திகை ‘ஆடிக் கார்த்திகை’ என்று சிறப்பாக அழைக்கப்படும்.
அன்றைய தினம் முருகப்பெருமான் வழிபாட்டை முறையாகச் செய்தால் வேலை வாய்ப்பு, வீடு வாங்கும் யோகம், நிலையான வருமானம் வரும்வழி போன்றவை அமையும். அன்று விரதம் மேற்கொள்வதால் முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அன்றைய தினத்தில் முருகன் கோவில்களில் விசேஷ ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அன்று வீட்டிலும் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் கூடிய படத்தை வைத்து மாங்கனி நைவேத்தியம் செய்து கவச பாராயணங் களைப் படியுங்கள். மேலும் கந்தனுக்குப் பிடித்த கந்தரப்பம், பருப்பு பாயசம், நைவேத்தியம் செய்து வழிபட்டால் 12 கரங்களைக் கொண்ட வேலன், வரங்களை அள்ளித்தருவான். ஆடி மாதம் வரும் கார்த்திகை மிகவும் விசேஷமானதாகும். இந்த நாளில்அன்னதானம் செய்வது நல்லது.