அரசர் முதல் ஆண்டி வரை சனி என்றாலே ஒருகணம் சிந்தனையில் ஆழ்ந்து விடுவர். காரணம் நன்மை தீமை இரண்டையும் உறுதியாகவும் சரியாகவும் செய்யக் கூடிய கதிர் வீச்சுகளை தமது இயல்பாக அமைந்தது சனிக்கிரகம். அதுமட்டுமின்றி ஒருவரது ஆயுள், ஆரோக்கியதன்மைகளின் அளவீட்டு முறைகளை குறிப்பிடும் அம்சமும் உடைய ஒரு மெதுவான கிரகம் ‘சனீஸ்வரன்’ எனப்படும் ‘காரி’ ஆகும்.
இது வாரநாட்களில் ஏழாவது நாளாக வரும். தனிமனித வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை துல்லியமாகக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய அலை இயக்கத்தை, ஜனன கால நேரத்தில், ஒருவருக்கு அமையக்கூடிய வாழ்வியல் பக்கங்களின் அனுபவப் பதிவுகளை, செயல் களமாக்கிக் காட்டி உலகியல் அனுபவம் பெற வைக்கக் கூடிய மிகப்பெரும் தனித்தன்மை சனிக்கிரகத்துக்கு உண்டு.
ஒவ்வொரு மாதத்திலும் 8, 17, 26 ஆகிய தேதிகளிலும், மகரம், கும்பம் ராசிகளிலும், சனிக்கிழமைகளிலும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களிலும் பிறந்தவர்கள் சனீஸ்வரனின் கிரக அலை இயக்கத்தை நன்மை தரத்தக்க அமைப்பில் கூடுதலாகப் பெற்றவர்களாவார்கள்.
மேற்கூறிய அமைப்பில் பிறந்தவர்கள், கலியுகம் சார்ந்த ஆதிக்க அம்சம் பெற்றிருக்கும் சனீஸ்வரனால் தொழில், தொழில் நுட்பம், அறிவு, உழைப்பு, உலகியல் சார்ந்த இரு கூறு அனுபவங்கள் (இன்பம்-துன்பம்) ஆகியவற்றில் பிறரை விட முன்னணியில் இருப்பார்கள். துன்பத்தால் துவண்டு போனாலும் கூட ஒரு காலகட்டத்தில் நிச்சயம் வாழ்வில் தலையெடுத்து வெற்றிநடை போடுவார்கள்.
உடலின் கால்சியம் சத்து, எலும்புகளின் வலிமை, கைகால் மூட்டுகள், மருத்துவச் சிகிச்சைக்குக் கட்டுப்படாத நோய்கள் ஆகியவற்றை சனி குறிப்பிட்டுக் காட்டும். சனியின் பலம் ஒரு ஜாதகத்தில் இருந்தால் தன் மக்களுடைய ஆதரவால் பதவிகளை அடைய இயலும். அது சிறிதோ பெரிதோ சனி பகவான் ஒருவருடைய பிறந்த காலத்தில் பலமாக அமைந்திருக்க வேண்டியது முக்கியம்.
தொழில் அல்லது வேலை வாய்ப்புகளில் இருக்கும் நிரந்தரமற்ற தன்மைகளையும், நோய் நொடிகளையும் சனி வார விரத பூஜா முறைகளால் நாம் தீர்க்க முடியும். மேலும் சனி திசை, ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டகச் சனி, ஆகிய கோட்சாரக் கோளாறுகளை சனிக்கிழமை விரத முறைகள் நல்ல முறையில் தீர்த்து வைக்கும் சக்தி பெற்றவை ஆகும்.
காரணம் தெரியாத தொழில் வகைச் சிக்கல்கள், ஒருவரது சகிப்புத் தன்மையையும் தாண்டிய தினசரி சோதனைக்களமாக அமைந்த பணியிடச் சங்கடங்கள், மருத்துவ உலகிற்கு சற்றும் பிடிகொடுக்காத நோய் நொடிகள் ஆகிய துன்ப துயரங்கள் அனைத்தும் சனியினால் வரக்கூடியவையாகும்.
இவற்றை நாம் தீர்க்க அல்லது தவிர்க்க வேண்டுமானால், கர்மப் பதிவுகளின் வெளிப்பாட்டை அன்றாட அனுபவமாக வெளிப்படுத்தும் சனீஸ்வரரின் ஆதிக்க நாளான சனிக்கிழமையை நாம் விரத நாளாக கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும், அந்த நாளில் ஆதரவற்ற முதியோர்களுக்கு பொருள் உதவி செய்யும் நாளாகவும், வயதில் மூத்த பெரியோர்களிடம் ஆசிகளைப் பெறும் நாளாகவும், உடல் ஊனமுற்ற ஆதரவற்றவர்களுக்கு வஸ்திர தானம் வழங்கும் நாளாகவும் கடைப் பிடிப்பது மிக முக்கியமானதாகும்.
“சனி கெடுப்பின் யார் கொடுப்பார், சனி கொடுப்பின் யார் கெடுப்பார்”
சனியை போன்று கொடுப்பவரும் இல்லை சனியை போன்று கெடுப்பவரும் இல்லை.