சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குன்றக்குடி திருத்தலம்.குமரனின் அருள் பெற்ற இத்திருத்தலம், பிரார்த்தனை தலங்களில் முதன்மையானது. இக்கோவிலின் சிறப்பே இறைவன் சண்முகநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்த மலையே,மயில் உருவம் போன்று காட்சியளிப்பது தான்.
முருகப்பெருமானின் வாகனமான மயில்,அவரின் சாபத்தால் மலையாகிப்போனதாக சொல்கிறது ஒரு புராண செய்தி. ஒரு முறை அசுரர்கள், முருகப்பெருமானின் மயிலிடம், “நான்முகனின் வாகனமான அன்னமும், திருமாலின் வாகனமான கருடனும் நாங்கள்தான் மயிலை விட சக்தி படைத்தவர்கள்,மேலும் வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றன” என்று பொய் கூறினர். இதைக் கேட்டு உண்மை என்று நம்பிய மயிலும், கண் மூடித்தனமாக கோபம் கொண்டு பிரம்மாண்ட உருவம் எடுத்து, கருடனையும், அன்னத்தையும் விழுங்கிவிட்டது.
பிரம்மனும், திருமாலும், முருகப்பெருமானிடம் இது குறித்து முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற முருகப்பெருமானும், மயிலிடம் இருந்து அன்னத்தையும், கருடனையும் மீட்டுக் கொடுத்தார். மேலும் மயிலின் கர்வத்தினை அடக்க மயிலை, மலையாக மாறிப்போகும்படி சாபமிட்டார்.
தன் தவறுக்கு வருந்திய மயிலும் குன்றக்குடி வந்து மலையாகிப்போனது. ஆறுமுகப் பெருமானைக் குறித்து மலையாக இருந்த படியே தவம் இருந்தது.மயிலின் தூய்மையான தவத்தில் மகிழ்ந்த முருகப்பெருமானும் , மயிலுக்கு சாபவிமோசனம் அளித்தார். மயில் உருவத்தில் இருந்த அந்த மலை மீதே எழுந்தருளி அருள்புரிந்தார் என்கிறது இத்திருக்கோயிலின் தல வரலாறு.
இந்த ஆலயத்தில் விசேஷமாக காவடி வழிபாட்டை சொல்லலாம். இது தவிர பால் குடம் எடுத்தல், அங்கபிரதட்சணம் செய்வது, அடிப் பிரதட்சணம் போன்றவை பக்தர்கள் தங்கள் எண்ணிய பிரார்த்தனை நிறைவேறியப் பின் செய்யும் நேர்த்திக்கடன்களாகும். இக்கோவில் வந்து வேண்டுதல் வைத்தால் தீராத தோல் வியாதிகள் கூட தீரும் என்பது நம்பிக்கை.வேண்டுதல் நிறைவேறியப் பின் உடல் உறுப்புகள் பொறிக்கப்பட்ட வெள்ளி தகட்டை உண்டியலில் சேர்ப்பிக்கின்றனர்.
மலையின் கீழ் பகுதியில் சுயம்புவாக தோன்றிய தேனாற்றுநாதர் கோவில் உள்ளது. இந்த சுயம்பு மூர்த்தியை அகத்திய முனிவர் வணங்கி வழிபாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தல அம்பாள் அருட்சக்தி என்ற திரு நாமத்துடன் அழகே வடிவாக எழுந்தருளியிருக்கிறார்.
வரலாற்று செய்தி
சிவகங்கை மருதுபாண்டியருள் மூத்தவரான பெரிய மருதுவுக்கு ஒரு முறை முதுகில் ஏற்பட்டிருந்த ராஜ பிளவை என்னும் கட்டியை,குன்றக்குடி முருகப்பெருமானின் அருட்பிரசாதமான திருநீறு குணப்படுத்தியது என்கிற வரலாற்று செய்தி இந்த தலத்தில் உள்ள இறைவனின் பெருமையை நமக்கு பறைசாற்றும்.
வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் மயில் வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பதால், இங்கு திருமணம் செய்துக் கொள்ளும் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
அருணகிரிநாதரின் பாடல் பெற்ற இந்த திருதலத்தில்,10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர பெருவிழாவும், 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் தைப்பூசத் திருநாளும் சிறப்பு வாய்ந்தது. இது தவிர முருகப் பெருமானுக்கே உரிய சித்திரை பால் பெருக்கு விழா, வைகாசி விசாகம், ஆனி மகாபிஷேகம், ஆடி திருப்படி பூஜை, ஐப்பசியில் கந்தசஷ்டி போன்றவையும் சிறப்பாக நடைபெறும்.
முருகன், அழகன்,மால் மருகனின் கிருத்திகை நட்சத்திரமான இன்று கந்தனை வாயார போற்றி மனதார துதித்து பலனடைவோம்.
வேலுண்டு வினையில்லை ….
மயிலுண்டு பயமில்லை ….