தந்த்ர சாஸ்திரத்தைக் கற்பிக்கும் குருமார்களின் கருத்துப்படி, இந்த சாதனைகளை ஏழு படித்தரங்களாக வகுக்கப்பட்டுள்ளது.
1) வேதாசாரம்
2) வைஷ்ணவாசாரம்
3) சைவாசாரம்
4) தக்ஷிணாசாரம்
5) வாமாசாரம்
6) சித்தாந்தாசாரம்
7) கௌலாசாரம்
என்பனவையே அவைகளாம். இவற்றில் ஒவ்வொரு படித்தரமாக சாதகன் முன்னேறுகிறான். முதல் மூன்று ஆசாரங்களைப் பயிலும் சாதகனை ‘ பசுஜீவன் ‘ என்பர். அதாவது, அவர்களிடம் விலங்கு குணம் அதிகமாக இருக்கும். அடுத்த இரு ஆசாரங்களும் ‘ வீர ஜீவர்களுக்கு ‘ உள்ளதாகும். அதாவது, அவர்களிடம்
சாதாரண மனிதகுணங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இறுதி இரண்டு ஆசாரங்கள் ‘ தெய்வீக ஜீவர்களுக்கு ‘ உரியதாகும். இவர்களிடம் தெய்வீக குணங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
முதல் மூன்று ஆசாரங்கள் கர்மம் , பக்தி மற்றும் ஞானத்தின் அங்கங்களாகும். வேதத்தின் கர்ம காண்டம் , வைஷ்ணவாசாரம், சைவாசாரம் ஆகியவை முறையே கர்மம், பக்தி , ஞானமெனும் அங்கமாகும். தக்ஷிணாசாரம் மேலே குறிப்பிட்டப்பட்ட மூன்று சாதனைகளின் பலனைப் பாதுகாப்பதற்கு உரியதாகும். இதுவரை எல்லாம் சரியான சாதனைகளாக உள்ளன. ஆனால் அடுத்த படித்தரங்களும் அதாவது, வாமாசாரத்தைப் பற்றிய கருத்து தக்ஷிணாசாரத்திற்கு மாறுபட்டதாக உள்ளது.
உண்மையில் இங்கே ‘ வாம ‘ என்பதன் பொருள் ‘ இடது ‘ என்பதல்ல. இவ்விடத்தில், இதன் சரியான பொருள் ‘ நிவ்ருத்தி ‘ என்பதாகும். எதிலிருந்து நிவ்ருத்தி ……எதனால் நீ கட்டுண்டு இருக்கிறாயோ, அதிலிருந்து நிவ்ருத்தி என்பதாகும். அடுத்து வரும் ஐந்தாவது ஆசாரம் முதல், தந்திர சாதனையில் புதிய திருப்பம் வருகிறது.
இதன் சாதனைகள் சாதாரண மனிதர்களுக்கு விலக்கப்பட்ட ரகசியமாகும். ஏன் ? மிகுந்த கட்டுப்பாடு தன்மேல் உள்ளவரால் மட்டுமே இயலும். கத்தியில் நடப்பதே இது, தவறிவிட்டேன் என்று சொல்லவே இயலாது….சொன்னால் அதோ கதிதான் ……..மீண்டும் எழுவது குருவின் கருணையே ! எனவே, மிகுந்த மனப்பயிற்சி, தன்னுடைய மனதை ஆதிக்கத்துடன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சாதகருக்கே இது மிக எளிதானது. எனவே தந்த்ர சாதனைகள் பயிலும் சாதகர்கள் கூட குருவின் மேற்பார்வையில் சாதனைகளைப் பயிற்சி செய்வது மிக அவசியமாகும்.
தந்திரத்தைப் பொறுத்தவரை, சாதனையின் போது எந்த நிலையையும் தடையாகக் கருதி, அதைத் துறந்து விடாமல், அந்நிலையைக் கடந்து மேலே செல்லவேண்டும் என்கிறது. தந்த்ர சாதனையின் முக்கிய கருத்து, ” வாழ்வில் வந்தமையும் சோதனைகளிலிருந்து தப்பி ஓடி, ஏதோ ஆள் அரவமற்ற ஓரிடத்திற்குச் சென்று ஒளிந்துகொள்ளாமல், சோதனைகளில் தான் ஆன்மீகத்தின் முழுமை இருக்கிறது என்று எண்ணவேண்டும் ” என்பதாகும்.
தந்திர சாதனையின் தச மஹா வித்யாவை உபாசிப்பதன் மூலம், நம்மை இவ்வுலகில் வாழ்ந்தபடி, வாழ்வின் அறைகூவல்களை, ஆக்கபூர்வமாக எதிர்கொள்வதற்குகான சாமர்த்தியத்தைப் பெறுமாறு கூறுகிறது. சாதனையின் மூலம் ஆன்மீக வாழ்வு முழுமை பெறுவது, அதாவது ஸத், சித், ஆனந்த வடிவான சக்தியுடன் இரண்டறக் கலப்பதாகும்.