மூலவர் – பிரகதீஸ்வரர்
அம்மன் – பெரியநாயகி
தல விருட்சம் – பின்னை, வன்னி
தீர்த்தம் – சிம்மக்கிணறு
பழமை – 1000 வருடங்களுக்கு முன்
ஊர் – கங்கை கொண்ட சோழபுரம்
மாவட்டம் – அரியலூர்
தஞ்சாவூரில் உள்ள பெரியகோவிலைப் போன்ற அமைப்போடு, பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டதுதான், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்த பிரகதீஸ்வரர் கோவில். கருவறை லிங்கத்தின் அடியில் சந்திர காந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் வெப்பத்தையும் அதிகரிக்கும் தன்மை கொண்டது.
தஞ்சை பெரியகோவிலை கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது இந்த ஆலயம்.
கி.பி. 1023-ல் கங்கை சம வெளியை வெற்றிகொண்ட பின்னர், அந்த வெற்றி நினைவாக இக்கோவில் அமைக்கப்பட்டது.
இத்தல இறைவியின் பெயர் ‘பெரிய நாயகி.’ பெயருக்கேற்றாற்போல, 9.5 அடி உயரத்தில் அம்மன் பிரமாண்டமாக காட்சியளிக்கிறார். இவரது பாதத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் அமைக்கப்பட்டதும், தஞ்சாவூரில் இருந்த தலைநகரை முதலாம் ராஜேந்திரசோழன், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான். சோழர்களின் இறுதிகாலம் வரை, அதாவது 250 ஆண்டுகள் அதுதான் தலைநகராக விளங்கியது.
ஒரே கல்லால் ஆன மூலவரின் திருநாமம், பிரகதீஸ்வரர். தமிழகத்திலேயே மிகப் பெரிய சிவலிங்கம் இதுதான். 13.5 அடி உயரம், 60 அடி சுற்றளவு கொண்டது. 25 மீட்டர் நீளமுள்ள வேஷ்டியும், 14 அடி உயரம் உள்ள மாலையும் அணிவிக்கப்படுகிறது. மூலவருக்கான வேஷ்டி தனியாக நெய்யப்படுகிறது.
கோவில் கோபுரம் 180 அடி உயரம் கொண்டது. 100 அடி வரை ஒரே சீராக அகலமாகவும், அதன் பின் 80 அடி உயரம் குறுகலாகவும் கட்டப்பட்டுள்ளது.
இத்தல நந்தியும் மிக பிரமாண்ட வடிவம் கொண்டது. சுண்ணாம்பு கல்லினால் செய்யப்பட்டது. இறைவனின் மூலஸ்தானத்தில் இருந்து 200 மீட்டர் இடைவெளியில் இந்த நந்தி அமைந்துள்ளது. தினமும் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அது கருவறையில் உள்ள மூலவரின் மீது பிரதிபலிக்கும்.
இங்குள்ள நவக்கிரக சன்னிதி தாமரைப்பூ வடிவில் அமைந்துள்ளது. சூரியனுக்குரிய எந்திர வடிவில் 8 கிரகங்கள் இருக்க, நடுவில் 7 குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் காட்சி தருகிறார். இந்த நவக்கிரகத்தை பக்தர்கள் வலம் வர முடியாதபடி அமைத்துள்ளனர்.
திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் வேண்டி இத்தல இறைவனை பக்தர்கள் பிரார்த்திக்கிறார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ளது, கங்கைகொண்ட சோழபுரம். அரியலூரில் இருந்து சுமார் 47 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது.