தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில் அருள்மிகு ருக்மணி, சத்ய பாமா சமேத வேணு கோபால சுவாமி அஷ்ட புஜங்களுடன் காட்சி அளிக்கிறார். இந்த திருக்கோலம் தென் தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ரோகிணி நட்சத்திரத்தன்று பசு வெண்ணெய், அவல், சர்க்கரை நிவேதனமாக கொடுத்து வழிபடுவது சிறப்பு! குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த பூஜையில் பங்கேற்க நல்ல பலன் கிடைக்கும்.
மூலவரின் இடது பாதத்தில், வெண்ணெய் வைத்துக் கொண்டு நர்த்தனம் ஆடுவது போன்ற வேணுகோபால சுவாமியின் சிறிய விக்ரகம், ரோகிணி நட்சத்திர பூஜையில் பங்கேற்கும் பெண்களின் மடியில் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. அவ்வாறு வழிபட்ட பெண்களுக்கு குழந்தைபாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.