மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கு இடையேயான குருசேத்திரப் போர் நடந்துகொண்டிருந்தது. அதன் 10-ம் நாளில், உலகில் எவராலும் வெல்ல முடியாத பீஷ்மரை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருந்தான் அர்ச்சுனன். எவ்வளவு சக்தி வாய்ந்த அம்புகளை தொடுத்தாலும், அதை சர்வ சாதாரணமாக தடுத்துக் கொண்டிருந்தார், பீஷ்மர். அப்போது அர்ச்சுனனைப் பார்த்து, “பீஷ்மர் தன்னுடைய வில்லை கீழே வைத்தால் மட்டுமே, நீ அவரை வெற்றிகொள்ள முடியும். அதற்கான வழி ஏதாவது இருக்கிறதா? என்று பார்” என்று கூறினார், கிருஷ்ணன்.
“அப்படி ஒரு வழி இல்லை. எந்த சூழ்நிலையிலும், பீஷ்மர் பின்வாங்க மாட்டார். தன்னுடைய வில்லை, கீழே வைக்கமாட்டார்” என்றான், அர்ச்சுனன்.
அதைக் கேட்டு சிரித்த கிருஷ்ணன், “ஒரு பெண் அவர் எதிரில் நின்றால் கூட, வில்லை கீழே வைக்க மாட்டாரோ?’’ என்றார்.
பெண்கள் போர்க்களத்தில் அனுமதிக்கப்படுவதில்லையே என்று அர்ச்சுனன் எண்ணிக்கொண்டிருக்கும் போதே, ‘`உன்னுடைய மனைவி திரவுபதியின் மூத்த சகோதரன் சிகண்டி, ஆணா? பெண்ணா? ஆண் என்று நீ கருதினால், அவனை முன் நிறுத்தி போர் செய். அவளை பெண் என்று பீஷ்மர் கருதினால், தனது வில்லை கீழே வைக்கட்டும். அப்படி அவர் வில்லை கீழே வைக்கும் தருணம்தான் உனக்குரியது. அவரை வீழ்த்திவிடலாம்’’ என்றார், கிருஷ்ணன். அதனை ஏற்று, தன்னுடைய தேரில் தனக்கு முன்பாக சிகண்டியை நிறுத்துகிறான், அர்ச்சுனன்.
சிகண்டி முன்பிறப்பில் அம்பையாக இருந்தவள். அவளை தன் தம்பிகளுக்கு திருமணம் முடிப்பதற்காக பீஷ்மர் கடத்தி வருவார். ஆனால் அம்பை வேறு ஒருவனை விரும்புவதை அறிந்து, பீஷ்மரின் தம்பிகள் அவளை மணக்க மறுத்துவிடுவர். அவளைக் காதலித்தவனும் கூட, `பீஷ்மரிடம் இருந்து உன்னைக் காப்பாற்ற முடியாதவனாகி விட்டதால், என்னால் உன்னை ஏற்க முடியாது’ என்று கூறிவிடுகிறான். தன்னுடைய இந்த நிலைக்கு பீஷ்மர்தான் காரணம் என்பதை உணர்ந்த அம்பை, அவரைக் கொல்ல பலரிடம் உதவி கேட்டும், பீஷ்மருக்கு எதிராக நிற்க எவரும் முன்வரவில்லை. இதையடுத்து சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தாள் அம்பை. அவள் முன்பாக தோன்றிய சிவபெருமான், ‘`பீஷ்மரின் இறப்புக்கு நீயே காரணமாக இருப்பாய். ஆனால் அது உன் அடுத்தப் பிறவியில்தான் நடைபெறும்’’ என்று கூறி மறைகிறார்.
பீஷ்மர், விரைவில் மரணிக்க வேண்டும் என்பதற்காக அம்பை தீயில் இறங்கி தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். அதன்பிறகு அடுத்த பிறவியில் சிகண்டி என்ற ஆணாக பிறக்கிறாள். இதையெல்லாம் உணர்ந்துகொண்ட பீஷ்மர், போரிடாமல் தன்னுயை வில்லை கீழே வைத்தாா். சிகண்டி இப்போது ஆணாக இருந்தாலும், முன்பிறப்பில் தன்னைக் கொல்வேன் என்று சபதம் செய்த பெண் என்பதால், பெண்ணை எதிர்த்து போரிட தயங்கி அவ்வாறு செய்தார்.
இதை சாதகமாக பயன்படுத்திய அர்ச்சுனன், தன்னுடைய வில்லில் இருந்து அம்புகளைப் பறக்க விட்டான். அவை ஒன்றன்பின் ஒன்றாக பீஷ்மரின் உடலைத் துளைத்தன. அவர் தேரில் இருந்து சரிந்து, தரையில் விழுந்தார். ஆனால் அவரது உடல் மண்ணில் படாதபடி, அவர் உடலைத் துளைத்த அம்புகள் தாங்கி நின்றன. பீஷ்மரின் தந்தை கொடுத்த வரத்தின் காரணமாக, அவர் உயிர் பிரியவில்லை. பீஷ்மர் விரும்பும் போதுதான் அவரது உயிர் உடலை விட்டுப் பிரியும் என்பதால் அவர் போர்க்களத்தில் இருந்தபடியே குருச்சேத்திரப் போரை கண்டுகொண்டிருந்தார்.
சூரியன் மறைந்ததும், போர் நிறுத்தப்பட்டு, பாண்டவர்களும், கவுரவர்களும், ஏன் கிருஷ்ணன், வியாச முனிவர் ஆகியோர் கூட பீஷ்மரின் அருகே வந்து நின்றனர். அப்போது அவர் மகாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை, அனைவருக்கும் சொன்னார். அதுவே ‘விஷ்ணு சகஸ்ரநாமம்’. அவர் அப்படி அந்த ஆயிரம் நாமங்களைச் சொன்னபோது, அங்கிருந்த அனைவருமே அதை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தார்களே தவிர, அதை குறித்து வைத்துக்கொள்ளும் மனநிலையில் எவருமே இல்லை. பீஷ்மர், ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்த பிறகுதான் அனைவருக்கும் தாங்கள் செய்த தவறு புலப்பட்டது. `இறைவனின் அற்புதமான ஆயிரம் நாமங்களை இப்படி தொலைத்து விட்டு நிற்கிறோமே’ என்று வருந்தினர்.
உடனே அனைவரும் கிருஷ்ணரைப் பார்த்து, ‘`வாசுதேவா.. நீ அறியாதது எதுவும் இல்லை. நீதான் இந்த ஆயிரம் நாமங்களையும் மீட்டுத்தர வேண்டும்’’ என்று கேட்டனர். ஆனால் அவரோ, ‘`நானும் உங்களைப் போலவே, பீஷ்மர் கூறிய நாமங்களை மெய்மறந்து கேட்டுக்கொண்டு இருந்தேன். அதனால் நானும் அதை நினைவில் கொள்ளவில்லை. ஆனால் அதை மீட்டுத்தரும் சக்தி உங்களிடையே இருக்கும் ஒருவருக்குத்தான் இருக்கிறது’’ என்றார்.
அனைவரும் அது யார் என்பது போல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கிருஷ்ணர் மேலும் தொடர்ந்தார். ‘`அது வேறுயாரும் அல்ல. சகாதேவன்தான். அவன் மட்டும்தான் சுத்தமான ஸ்படிகத்தை தன் உடலில் அணிந்திருக்கிறான். அமைதியான சூழலில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் ஸ்படிகத்திற்கு உண்டு. சகாதேவன் அந்த வார்த்தைகளை மீட்டு சொல்ல, அதை வியாசர் எழுதுவார்’’ என்றார்.
இதையடுத்து பீஷ்மர், சகஸ்ரநாமத்தை உச்சரித்த இடத்தில் சகாதேவனும், வியாசரும் அமர்ந்தனர். ஸ்படிகமாக விளங்கும் சிவபெருமானை தியானித்து, அது உள்வாங்கியுள்ள வார்த்தைகளை சகாதேவன் மீட்டுக் கூறினான். அதை வியாசர் எழுதிக்கொண்டார். இப்படித்தான் விஷ்ணுவின் சகஸ்ரநாமம் நமக்கு கிடைத்திருக்கிறது. அதற்குரிய பெருமை, ஸ்படிகத்தையே சேரும்.