நாகராஜர் கோவிலில் உள்ள துர்க்கை சிலை, இங்குள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது. எனவே அன்னையை ‘தீர்த்த துர்க்கை’ என்று அழைக்கிறார்கள். துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
‘ஓடவள்ளி’ என்ற கொடியே இத்தல விருட்சமாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது. வேணாட்டு அரசனான வீர உதய மார்த்தாண்டன் இந்த ஆலயத்தை புதுப்பித்துள்ளான். இந்த மன்னன், ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து விசேஷ வழிபாடுகள் நடத்தினான். அரசன் தொடங்கிய இந்தப் பழக்கம் இன்றும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.