மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண பெண்கள் அதிகஅளவில் வருவார்கள். ஏன் என்றால் இறைவனாகிய மீனாட்சி அம்மனுக்கு திருமணம் செய்து, அவருக்கு மங்கல நாண் சூட்டும் வேளையில் பெண்களும் புதிதாக மஞ்சள் கயிறு அணிந்து கொள்வார்கள். தனது கணவர் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள்.
எனவே காலம், காலமாக நடைபெறும் இந்த திருவிழாவை இந்தாண்டு பெண்கள் நேரில் காண முடியாத நிலை உள்ளது. ஆனால் அந்த நிகழ்வை கோவில் நிர்வாகம் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் போது, அவரவர் வீட்டில் இருந்தே பெண்கள் இறைவனை வேண்டி மங்கலநாண் மாற்றிக் கொள்ளலாம் என்று கோவில் சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர்.
“வீட்டிலேயே கல்யாண விருந்து தயார் செய்யுங்கள்”
மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் திருக்கல்யாண விருந்துகள் வழங்கப்படும். இந்தாண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக இணையதளம் மூலம் திருக்கல்யாணத்தை காண வேண்டிய நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே திருக்கல்யாண விருந்தை வீட்டிலேயே பக்தர்கள் தயார் செய்து கொள்ளலாம் என கோவில் பட்டர் ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
திருக்கல்யாண தினத்தன்று பக்தர்கள் தங்கள் வீட்டிலேயே மீனாட்சி-சுந்தரேசுவரர் படத்தின் முன்பு அல்லது டி.வி.யில் மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்த்து காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் புதிய மங்கலநாண் மாற்றி கொள்ளலாம். திருக்கல்யாணம் முடிந்த பின்னர் நாம் எப்படி மக்களுக்கு விருந்து சாப்பாடு போடுகிறோமோ, அதே போன்று விருந்து தயார் செய்யலாம். அதில் சுவாமிக்கு வடை, பாயசத்துடன் விருந்து படைப்பது விஷேசம். எனவே பக்தர்கள் தங்கள் வீட்டிலேயே வடை, பாயசத்துடன் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்த பிறகு திருக்கல்யாண விருந்தை அனைவரும் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம். இப்போது இருக்கக்கூடிய அசாதாரண சூழ்நிலையில் இறைவன் தான் நமக்கு அருள்புரிய வேண்டும்,” என்றார்.