உலகை ஆளும் சக்திகளில் முதன்மை சக்தியாக கருதப்படும் பராசக்திக்கு, பல இடங்களிலும் ஆலயங்கள் காணப்படுகின்றன. பலதலங்களிலும் பல பெயர்களில் அன்னை அருள்பாலித்து வருகிறாள். காஞ்சியிலே காமாட்சி, மதுரையிலே மீனாட்சி, காசியிலே விசாலாட்சி, தில்லையிலே சிவகாமி, திருக்கடையூரில் அபிராமி என்று சக்தியின் பல்வேறு ஆலயங்கள் பல்வேறு சிறப்புகளை உடையதாக உள்ளது.
திருக்கடையூரில் அபிராமி ஆலயம், அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் உள்ளேதான் அமைந்துள்ளது. ஆனால் அபிராமிக்கு தனி ஆலயம் இருப்பது மிக மிக அரிது. அபிராமிக்கு, பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட ஆலயத்தை தரிசிக்க கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் பின்னத்தூர் கிராமத்திற்கு செல்ல வேண்டும்.
சிதம்பரத்திலிருந்து பிச்சாவரம் செல்லும் சாலையில் உள்ள அழகிய கிராமம் தான் பின்னத்தூர். இங்கு அபிராமிக்கு அழகான அற்புதமான பல சிறப்புகள் வாய்ந்த ஆலயம் ஒன்று உள்ளது. அதன் வரலாற்றைப் பார்ப்போம்..
பல நூற்றாண்டுகளுக்கு முன் கிராமம் மட்டுமல்ல, நகரங்களிலும் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. மக்கள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் அல்லாடிக்கொண்டு இருந்தனர். இந்த காலகட்டத்தில் இந்தப் பகுதியில் சக்தியின் பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு வேப்ப மரத்தடியில் தினமும் பராசக்தியின் திருநாமத்தை மனதில் உச்சரித்தபடியே அமர்ந்து இருப்பார். இவர் வீட்டில் சில பசு மாடுகள் இருந்தன. அந்த பசு மாட்டில் இருந்து பெறப்படும் பாலை தானமாக அனைவருக்கும் கொடுப்பார். அதுதான் இக்கிராமத்திற்கு உணவாக இருந்தது.
இவர் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று திருக்கடையூர் அபிராமி கோவிலுக்குச்செல்வது வழக்கம். பல ஆண்டுகள் இப்படித்தான் செய்து வந்துள்ளார். இவர் தீவிரமான அபிராமியின் பக்தர் என்பதால், இவரை இந்தப் பகுதி மக்கள் ‘பட்டர்’ என்றே அழைப்பார்கள். ஒரு சமயம் இவர் திருக்கடையூர் சென்று திரும்பும் வேளையில் ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. இவர் வீட்டில் இருந்த பசுக்கள் அனைத்தும் இறந்து விட்டன. அந்தச் செய்தியை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
பசுக்களின் பாலைக் கொண்டு மக்களின் துன்பங்களை நீக்கி வந்த நிலையில், அந்தப் பசுக்கள் இல்லாதது அவரை வேதனை படுத்தியது. இதனால் அவர் வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார்.
அன்று இரவு அபிராமி அம்மன் அவர் கனவில் வந்து, “நீ இங்கி ருந்து மேல்மலையனூர் செல். அங்கு உனக்கு ஒரு செல்வந்தர் மாடுகள் வாங்கி கொடுப்பார். அதை அழைத்து வா. வரும் வழியில் உனக்கு ஒரு பக்தர் உருவில் நானே வந்து உதவி செய்வேன். அதை வைத்து ஒரு ஆலயம் கட்டு. உன்னையும் இந்த கிராமத்தையும் நான் காப்பேன்” என்றாள்.
பட்டர் வரும் வழியில் இவரின் பக்தியைக் கண்ட மெய்யன்பர்கள் இவரிடம் விசாரித்து கோவில் கட்ட போதுமான உதவிகளை செய்தனர். அந்த உதவிகளை வைத்து அபிராமி அம்மனுக்கு என்று தனி ஆலயம், ஒரு சின்ன கீற்றுக் கொட்டகையில் அமைக்கப்பட்டது. பட்டரால் சிறிய ஆலயமாக கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாடு செய்ய ஆரம்பித்தவுடன் பலவிதமான அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.
பல மாதங்களாக மழை இல்லாததால் கடுமையான பஞ்சத்தில் இருந்த அந்த ஊர், நல்ல மழை பெய்து செல்வ செழிப்போடு காணப்பட்டது. விவசாயமும் நல்லபடியாக நடந்ததாக ஆலயம் உருவான விதம் பற்றி கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தின் முன்னே, அலங்கார வளைவு உள்ளது. அதில் அபிராமி அன்னை காட்சி தருகிறாள். தரிசித்து விட்டு உள்ளே சென்றால் மகா மண்டபம். அந்த மண்டபத்தில் நெடிய கொடிமரம், பலிபீடம், சிம்மவாகனம், இவற்றுக்கு முன்னால் விநாயகர், முருகன் காட்சியளிக்கிறார்கள். அவர்களை வணங்கி விட்டு சென்றால் அடுத்ததாக அர்த்த மண்டபம் உள்ளது. இங்கு உற்சவர் சிலைகள் வரிசையாக வைக்கப் பட்டுள்ளன.
இவைகளைக் கடந்து சென்றால் கருவறையில் அபிராமி அம்மன், நான்கு திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி மிக அற்புதமாய் காட்சி தருகிறாள். கோஷ்டத்தில் வலது பக்கம் தட்சணாமூர்த்தி சன்னிதியும், ஐயப்பன், துர்க்கை சன்னிதிகளும், இடதுபக்கம் இடும்பன் சன்னிதியும் உள்ளன. கோவிலின் உள்ளே முதல் சுற்றில் வள்ளி – தெய்வானை உடனாய முருகன் சன்னிதி, இடும்பன் சன்னிதி, நவக்கிரகங்களும், புற்று சன்னிதியும் காணப்படுகின்றன.
இந்த ஆலயத்தை பொறுத்தவரை நான்கு உற்சவங்கள் இங்கு வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. தை மாதம் அமாவாசை அன்று அபிராமிப் பட்டருக்கு காட்சிதரும் நிகழ்வு நடைபெறும். மாசி மாதம் மகத்தன்று அருகில் உள்ள கிள்ளை கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று ஆலயத்தின் உள்ளே உள்ள முருகன் சன்னிதியிலும், இடும்பன் சன்னிதியிலும் சிறப்பு பூஜைகள் சிறப்பு அலங்காரங்கள் செய்யப் பட்டு பெரிய அளவில் காவடி திருவிழா நடைபெறும். அதேபோல் சித்திரை திருவிழா நடைபெறும். இதில் சித்ரா பவுர்ணமியன்று முருகன், வள்ளி – தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், அன்று இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.
இவ்வாலயத்தின் உள்சுற்றில் இருக்கும் நாக புற்றுக்கு, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சர்வ பிரார்த்தனைக்காக பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்கிறார்கள்.
விவசாயத்தை மட்டும் அல்ல நம் வாழ்க்கையில் எந்த ஒரு பிரார்த்தனையையும் மனமுருகி வைத்தால் நிச்சயமாக அதை ஏற்று கருணைக் கடலாய் இருக்கும் அபிராமி நிச்சயமாக நல்ல பலன்களை தருவாள்.