தமிழர்களின் கட்டட கலைக்கும், சிற்பகலைக்கும் சான்றாக 1000 ஆண்டுகளை கடந்து விண்ணைத் தொடும் கோபுரத்துடன் உயர்ந்து நிற்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு விழா வரும் 5 ந் தேதி நடைபெறுகிறது.
கோயிலின் சிறப்புகள்
அருண்மொழி வர்மன் என்ற இயற்பெயர் கொண்ட முதலாம் ராஜராஜ சோழனால் தஞ்சைப் பெருவுடையார் கோயில் கட்டப்பட்டது. அவரது 19 வது ஆட்சி காலம் தொடங்கி 25 வது ஆண்டு ஆட்சி காலத்தில் 6 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட பெரிய கோயில் கடந்த 2010 ஆண்டு ஆயிரமாவது ஆண்டு விழா கண்டது. சிறந்த சிவ பக்தனான ராஜ சோழன் கருவூர் சித்தரின் வழிகாட்டுதலின் படி கட்டப்பட்ட பெரிய கோயில் தெட்சிண மேரு என்னும் புகழ்பெற்ற சிவாலயமாகும்.
திருமுறை பாடல் பெற்ற இக்கோயில்,சோழர்களின் மாடக்கோயில் முறையில் கட்டப்பட்டுள்ளது. கோயில் கருவைறையில், கோடையில் குளிர்ச்சியும் குளிர்காலத்தில் கதகதப்பையும் தருகின்ற வகையில் சந்திரக்கல் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் அமைக்கப்பட்டுள்ள லிங்கம், தமிழ் உயிர் எழுத்துக்கள் 12 ஐ குறிக்கும் வகையில் 12 அடி உயரம் கொண்டதாகும். லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி, மெய் எழுத்துக்கள் 18ஐ குறிப்பதாகவும், கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி உயிர் மெய் எழுத்துக்கள் 216 என்பதை குறிக்கும் வகையிலும் லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 என்பதை குறிப்பதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
பெரிய கோவில் கருவறை கோபுரத்தில் 80 டன் எடை கொண்ட பிரம்மக்கல் அமைக்கப்பட்டு, அதன் நான்கு திசைகளிலும் எட்டு நந்திகள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்கோயிலில் அம்மனுக்கு தனி கோயில் அமைக்கப்பட்டு அதில் 9 அடி உயரத்தில் பிரமாண்டமாக பெரியநாயகி அம்மன் தெற்குபார்த்த நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும் திருமுறைப்பாடி (திருவிசைப்பா) கோவில் எழும்புவதற்கும் ஆவுடை பொருந்துவதற்கும் காரணமாக இருந்த கருவூர் சித்தருக்கு தனிக்கோயில் உள்ளது. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட ஒரே கல்லின் ஆன பெரிய நந்தியும் நந்தி மண்டபமும் உள்ளது.
கற்களோ,பாறைகளோ இல்லாத காவிரி ஆற்றின் தென்கரையில் வானளாவிய உயரத்துக்கு மலையோ என்று வியக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் பெருவுடையார் கோயில் உலக புராதான சின்னமாக 1989 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
குடமுழுக்கு விழா
சரியாக 1010 ஆண்டுகளை கடந்து கலைநயத்துடன் விளங்கும் பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 5 ந் தேதி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
விழாக்கோலம் பூண்டுள்ள தஞ்சை மாநகரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.