ஆந்திர மாநிலம் விசயநகரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீ ராமநாராயணம் திருக்கோவில். சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஆலயம், ‘வில்-அம்பு’ வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. வில்லில் பொருத்தப்பட்ட அம்பு, விடுவதற்கு தயார் நிலையில் இருக்கும்போது எப்படி இருக்குமோ, அந்த அமைப்பில் கோவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
அம்பின் அடிப்பகுதி இருக்கும் பகுதியில் கோவில் நுழைவு வாசல் இருக்கிறது. அம்பு மற்றும் இரு பக்க நாண் போன்றவை அடியில் தூண்கள் அமைக்கப்பட்டு பாலம் போல் அமைந்துள்ளது. வில்லில் நாண் பூட்டப்படும் இரண்டு பக்கத்திலும் இரண்டு திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அதே போல் அம்பின் நுனிப் பகுதியில் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.
வில்லில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு நாணின் வழியாகச் சென்று, வில்லின் ஒரு முணையில் உள்ள அமர்ந்த கோல திருமால், மற்றும் சயனக் கோல திருமாலை தரிசிக்கலாம். அங்கிருந்து வில்லின் மறு முனைக்குச் சென்று அங்குள்ள சீதா, லட்சுமணர் சமேத ராமபிரானை வழிபாடு செய்யலாம். வில்லின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு செல்லும் வழியில், ராமாயண காவியத்தின் முழுக் கதையும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் விசயநகரம் இருக்கிறது.