விலகிய கோபுரம்:
பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்று கொண்டிருந்தபோது இத்தலத்தின் அருகே அவனது தேர் அச்சு முறிந்தது. பணியாளர்கள் சக்கரத்தை சரிசெய்து கொண்டிருந்த போது தங்க நிறமான உடும்பு ஒன்று சென்றதைக் கண்ட மன்னன், அதனை பிடிக்கச் சென்றான். உடும்போ, ஒரு சரக்கொன்றை மரத்தினுள் புகுந்து கொண்டது. காவலர்கள் மரத்தை வெட்டியபோது, ரத்தம் வெளிப்பட்டது.
உடும்பு வெட்டுப் பட்டதாக நினைத்த மன்னன் மரத்தின் அடியில் தோண்டிப்பார்த்தான். எவ்வளவோ தேடியும் உடும்பு மட்டும் அகப்படவில்லை. அன்றிரவில் மன்னனுக்கு காட்சி தந்த சிவன், உடும்பு மூலமாக தான் திருவிளையாடல் புரிந்ததை வெளிக்காட்டி இவ்விடத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதை உணர்த்தினார். அவருக்கு இங்கேயே கோயில் கட்ட விருப்பம் கொண்டான் மன்னன். அப்போது அங்கு திரிநேத்ரதாரி எனும் மூன்று கண்களை உடைய முனிவர் ஒருவர் வந்தார்.
தீவிர சிவபக்தரான அவரைப் பற்றி அறிந்து கொண்ட மன்னன் இத்தலத்தில் சிவாலயம் கட்டித்தரும்படி கூறிவிட்டு தனது யாத்திரையை தொடர்ந்தான். நெடுநாட்கள் கழித்து மன்னன் திரும்பி வந்தபோது கோயில் மத்தியில் நந்தி, கொடி மரத்துடன் ஆட்சிபுரீஸ்வரருக்கு ஒரு கருவறையும், அவருக்கு வலது பின்புற பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் நேரே உமை ஆட்சீஸ்வரருக்கு ஒரு மூலஸ்தானமுமாக கட்டி வைத்திருந்தார். (இக்கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் பார்வதியுடன், சிவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார்). புரியாத மன்னன் காரணம் கேட்டான். உமை ஆட்சி செய்த உடும்பு வடிவாக்கி என்னையும் ஆட்சி செய்தார். எனவே, உங்களுக்கு காட்சி தந்த உமை ஆட்சீஸ்வரருக்கு பிரதான வாயில் கொண்டு ஒரு கருவறையும், எமை ஆட்சி செய்த நந்தியும் விலகியே இருக்கிறது.
அச்சு முறித்த விநாயகர்:
சிவனின் தேர் அச்சை முறித்த விநாயகர் அச்சுமுறி விநாயகராக கோயிலுக்கு வெளியே தனிச்சன்னதியில் மேற்கு திசையை பார்த்து அமர்ந்திருக்கிறார். அருணகிரிநாதர் இவ்விநாயகரை தரிசித்து விட்டு அச்சிறு பொடி செய்த என்று இவரது சிறப்புக்களை பாடித்தான் திருப்புகழை துவங்கியுள்ளார். புதிய செயல்கள் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக்கொண்டால் அச்செயல் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை.
சிறப்பம்சங்கள் :
★ இத்தல சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் . பிரகாரத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடியீஸ்வரர் சன்னதியில் சிவனை வணங்கிய கோலத்தில் திரிநேத்ரதாரி இருக்கிறார். இம்மரத்தில் சித்திரை மாத திருவிழாவின் போது மட்டும் பூக்கள் மலர்வது சிறப்பு.