சனி எப்போது நல்ல பலன் தருவார்?…
சனியின் செயல்களையும், அவரது காரகத்துவங்களைப் பற்றியும் இப்போது பார்க்கலாம்..
அழுக்கான இடங்களில் பணி, போதைப் பழக்கம், திரவமான நீசப் பொருட்கள், வேஸ்ட் பேப்பர் மற்றும் குப்பைகள், சாராயம், மது, பெட்ரோல், தார், சாலை போடும் பணி, பழைய கிழிந்த துணிகள், எண்ணெய், தோல் பொருட்கள், எருமை மாடு, நயவஞ்சகம், இரும்பு, இடிந்த கட்டிடம், குட்டிச் சுவர்கள்,
கல் மண் சுமப்போர், ஆலைத் தொழிலாளர், பியூன் வேலை, துப்புரவு பணிகள், விறகுக் கடை, கலப்படம் செய்யும் தொழில், நீலம், விமான நிலையம், மூட்டை சுமத்தல், கூலி வேலை, சுரங்கம், கல் குவாரிகள், பிளாஸ்டிக், சிறைச்சாலைப் பணி, தண்டனை அனுபவித்தல், மக்கள் தொடர்பு, குற்றவாளிகளின் சேர்க்கை, செவிலியர், மருத்துவ மனையின் நெடி,
பொதுப் பணத்தை மோசடி செய்தல், ஊராட்சி மன்றம், உடல் ஊனம், நடக்க இயலாத நிலை, அநாதை விடுதிகள், கறுப்பு நிறப் பொருட்கள், மை, வெட்டியான் பணி, புரோகிதம், பிணத்துடன் இருத்தல், மரணத்திற்குப் பின் என்ன என்கிற தேடல், சந்தேகம், தாழ்வு மனப்பான்மை, நடைபாதை வியாபாரம், வளவள வென்ற விஷயமற்ற பேச்சு, குள்ளம், முட்டாள்தனம், கழிப்பிடத்தைப் பராமரித்தல், கடன், பசியுடன் இருத்தல், வறுமை, தீராத நோய், ஏமாற்றுதல்
போன்ற அனைத்துக்கும் சனியே காரகன் ஆவார்.
ஒரு ஜாதகத்தில் தனித்து வலுப் பெறும் நிலையில் சனி மேலே நான் சொன்ன அவரது செயல்களை தனது தசையில் வலுவாகச் செய்வார்.
ரிஷப, துலாம் லக்னங்களுக்கு சனி ராஜ யோகாதிபதியாக அமைவார். அதிலும் துலாத்திற்கு பாதகாதிபத்தியம் பெறாமல் பூரண ராஜ யோகாதிபதியாக வருவார். அந்த நிலையில் கூட லக்னத்தில் தனித்து உச்சம் பெற்றால் சனி தீய பலன்களையே தருவார்.
உச்ச சனி தசையில் இரும்பு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் சாதாரண தொழிலாளியாகவோ அல்லது மெக்கானிக்காகவோ மிகக் குறைந்த வருமானம் பெறுபவராக சாதாரண வாழ்க்கைதான் ஜாதகருக்கு இருக்கும்.
சுபர் பார்வையின்றி அல்லது வேறு எந்த வகையிலும் சுபத்துவம் பெறாத சனி லக்னத்தோடு சம்பந்தப்பட்டால் ஜாதகரை வறட்டுப் பிடிவாதக்காரராக ஆக்குவார். உயரம் குறைந்தவராகவும், அதிர்ஷ்டம் இல்லாதவராகவும், யாருடனும் ஒத்துப் போகாதவராகவும் இருக்க வைப்பார்.
ஒன்றும் தெரியாதவராக இருந்தும் தன்னை மிகப் பெரிய மேதாவியாக நினைக்க வைப்பவரும் சனிதான். சிலர் எப்போதுமே எதிலுமே குதர்க்கவாதம் பேசுபவர்களாகவும், எதற்கும் நேரிடையாக பதில் சொல்லாமல் எதிர்க் கேள்வி கேட்பவராகவும், எதிர்மறை எண்ணங்கள் கொண்டவராகவும் இருப்பார்கள். இதுவும் சனியின் வேலைதான்.
ஒருவர் குள்ளமாக இருக்கிறார் என்று பளிச்சென்று தெரிந்தாலே அவர் சனியின் ஆதிக்கத்தில் இருக்கிறார் என்று கண்டு பிடித்து விடலாம். அதே நேரத்தில் இது போன்றவர்கள் ஏதேனும் ஒரு மெக்கானிச வேலையில் மிகவும் கெட்டிக்காரராகவும் இருப்பார்கள்.
சனி சங்கடங்களை மட்டுமே தருவதற்கு உரியவர் என்பதால்தான் அனைத்து தெய்வ வழிபாடுகளின் போது பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்து வரும் நாம் சனியை வழிபட்டுத் திரும்பும் போது மட்டும் அவரின் பிரசாதத்தையோ அல்லது அவர் சம்பந்தப்பட்ட எதையுமோ வீட்டிற்கு எடுத்து வருவதில்லை. அதாவது சனி சம்பந்தப்பட்ட எதையும் நாம் வீட்டுக்குள் சேர்க்க கூடாது என்பதையே இது காட்டுகிறது.
ஒரு காகம் வீட்டிற்குள் தெரியாத்தனமாக நுழைந்து விட்டால் அதற்கு ஆயிரம் பிரீத்திகளும் பரிகாரங்களும் செய்தவர்கள் நம் முன்னோர்கள்.
சரி…
இந்துக்களாகிய நமக்கு நமது அத்தனை தெய்வ உருவங்களையும் புகைப்படங்களாக வீட்டில் வைத்து வழிபட சொல்லித் தந்த நமது முன்னோர்கள் ஏன் சனியை வீட்டில் வைத்துக் கும்பிட சொல்லித் தரவில்லை?
சனிக்கு ஈஸ்வரப் பட்டம் அளித்து மகிழ்பவர்கள் இந்த ஈஸ்வரனையும் வீட்டில் வைத்து வழிபடலாமே? மெய்ஞான விஷயத்தில் நம் முன்னோர்களை விட அறிவாளிகளா நாம்?
இன்றும் தமிழகத்தின் ஏராளமான பழமையான கோவில்களில் சனியை நாம் நேருக்கு நேர் நின்று தரிசித்து அவரின் பார்வை நம்மீது விழுந்து விடக் கூடாது என்பதனால் சனியின் சன்னதிக்கு முன் குறுக்காக ஒரு அமைப்பு போடப் பட்டிருப்பதை கவனித்திருக்கலாம். இன்றும் கோவில்களில் சனியை ஓரமாக நின்றுதான் வணங்குகிறார்கள்.
அவ்வளவு ஏன்? ஒரு தாய் தன் குழந்தையை அளவு கடந்த வெறுப்பில் திட்டுவது கூட அவரின் பெயரைச் சொல்லித்தான்…!
என்னைக் கேட்டால் சனியை வழிபட்டு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கும்படி எந்த புனித நூல்களும் சொல்லவில்லை.
உதாரணமாக குருவை வழிபடும் போது என்ன கேட்பீர்கள்? “எனக்கு குழந்தை பாக்கியம் தா… நிறைய பணம் தா” என்று கேட்கலாம்… அவரிடம் இவைகள் இருக்கின்றன. அதனால் அவரால் கொடுக்க முடியும்.
சுக்கிரனிடம் “நல்ல மனைவியைத் தா… வீடு கொடு… உல்லாச வாழ்க்கை தா…” என்று கேட்கலாம். அவர் தருவார். புதனிடம் “அறிவைத் தா” என்று கேட்கலாம். சந்திரனிடம் “திடமான மனம் கொடு.. ஆற்றல் தா” என்று கேட்கலாம்.
சனியிடம் என்ன கொடு என்று கேட்பீர்கள்..?
“எனக்கு தரித்திரத்தைக் கொடு.. கடனைக் கொடு.. நோயைக் கொடு.. உடல் ஊனத்தைக் கொடு” என்றா..?
ஆயுளைத்தவிர வேறு என்ன இருக்கிறது அவரிடம் தருவதற்கு..?
மீந்து போன வெறும் பழைய சாதம் மட்டுமே என்னிடம் இருக்கும் நிலையில் எனக்கு தலைவாழை இலை போட்டு அறுசுவை உணவு கொடு என்று கேட்டால் நான் எங்கே போவேன்?
மேற்சொன்ன அசுபங்களை எல்லாம் எனக்குத் தராதே என்று சனியிடம் கேட்கத்தான் அவரை வழிபடுகிறேன் என்றால் அதற்கு ஒன்றும் செய்யாமல் சும்மாவே இருந்து விடலாமே?
ஒருவர் உங்களைப் போட்டு அடித்து, மிதித்து, துவைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரை விட்டு விலகி ஓட முயற்சிப்பீர்களா ? அல்லது அவருடனே ஒட்டி உறவாடுவீர்களா?
சனி முற்றிலும் வலிமை இழந்திருக்கும் நிலையில், அதாவது எந்தக் கெடுதலும் செய்ய விடாமல் அவரின் கைகள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், குருவின் பார்வையைப் பெற்றும், இதர வழிகளில் சுபத்துவமும், எனது தியரிப்படி சூட்சும வலுவும் அடைந்திருக்கும் நிலைகளில் மட்டுமே அவர் தசையில் அவரின் காரகத்துவங்களின் வழிகளில் பெரும் பொருள் அளிப்பார்.
சுப கிரகங்கள் தரும் அதிர்ஷ்டத்தினால் வரும் பணத்தை தைரியமாக வெளியே சொல்ல முடியும். ஆனால் பாபக் கிரகங்கள் மூலம் கிடைக்கும் பணம் வந்த வழியைப் பற்றி வெளியே கௌரவமாக சொல்லிக் கொள்ள முடியாது.
துலாம் லக்னத்திற்கு மேஷத்தில் நீசம் பெற்று திக்பலம் பெறும் சனி, குரு பார்வை பெறும் நிலையில் நீச வழிகளில் பெரும் பொருள் வரவையும் சொகுசு வாழ்க்கையையும் தன் தசையில் தருவார்.
பிறந்த ஜாதகத்தில் சனி வலிமை பெற்றிருக்கும் நிலையில் கோட்சாரத்தில் ஏழரைச் சனி காலம் வரும் போது மிகக் கொடிய பலன்கள் நடக்கும். பிறப்பில் சனி வலிமை இழந்திருந்தால் மட்டுமே ஏழரைச் சனி காலத்தில் அவரால் தீமைகளை செய்ய முடியாது .
ஜாதகத்தில் சனி வலிமை இழக்க இழக்க ஜாதகரின் வாழ்க்கை மேம்பாடான நிலையில் இருக்கும். அவர் முற்றிலும் வலிமை இழந்து சூட்சும வலு பெறும் நிலையில் மிகச் சிறந்த சொகுசு வாழ்க்கை ஜாதகருக்கு கிடைக்கும்.
இதை ஏற்கனவே திரிசக்தி ஜோதிடத்தில் எழுதிய “பாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்” என்ற கட்டுரையில் ஒரு பெரும் கோடீஸ்வரரின் உதாரண ஜாதகத்துடன் விளக்கியிருக்கிறேன்
ஏறத்தாழ பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாதகங்களை முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்த அனுபவத்தில் கூறுகிறேன்….
எந்த ஒரு ராஜயோக ஜாதகத்திலும் சனி தனித்து பலம் பெற்றிருக்கவே மாட்டார். அவர் உச்சம் அடைந்திருந்தால் வக்ரம் பெற்று உச்ச பங்கமாகி நீச நிலையை அடைந்திருப்பார். அல்லது வேறுவகையில் சுபத்துவமோ, சூட்சும வலுவோ பெற்றிருப்பார். இது உறுதி.
இதை இந்த தொடர் கட்டுரைகளின் முடிவில் முழுமையான ராஜயோகம் அமைந்த ஒரு உதாரண ஜாதகத்துடன் காட்டி, அதை விளக்கிச் சொல்லியே இந்த பஞ்ச மஹா புருஷ யோகக் கட்டுரைகளை நிறைவு செய்ய இருக்கிறேன்.
இனி தனித் தனியாக சர, ஸ்திர லக்னங்களுக்கு சனி சசயோக நிலையில் என்ன தருவார் என்பதைப் பார்ப்போம்.