துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகி போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக பைரவர் விரத வழிபாடு கூறப்படுகிறது. விரதம் இருந்து கடவுளை வழிபாடு செய்து விட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள்.
இந்த துன்பங்களிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் விரத பூஜை செய்யுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பைரவர் விரத பூஜை செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் என்று பைரவர் வழிபாட்டில் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.
நமது ஜாதகத்தில் எந்த கிரகத்தால் தோஷம் உள்ளதோ அதற்குரிய பைரவரை விரதம் இருந்து வழிபட்டு நலம் பெறுதல் வேண்டும். நவக்கிரங்களின் தொல்லைகளிலிருந்து மீள ஒன்பது விதமான பைரவ விரத வழிபாடுகள் பரிகாரங்களாக ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன.