திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழாவும் அதனைத் தொடர்ந்து வரும் சித்திரை தேர்த்திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழா நாட்களில் தினமும் பல்லயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாகவும் வந்து வழிபட்டு செல்வார்கள்.
இந்நிலையில் இந்தஆண்டு இந்திய அரசு கொரோனா நோய் தொற்று காரணமாக நோய் பரவுவதை தடுப்பதற்காக மத்திய அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மத வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு தினசரி கால பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 8-ந்தேதி தொடங்கப்பட்ட பூச்சொரிதல் விழா வரும் 4-ந்தேதியுடன் முடிவடைகிறது. அன்றுடன் சமயபுரம் அம்பாளின் பச்சை பட்டினி விரதமும் நிறைவடைகிறது.
பச்சைப்பட்டினி மேற்கொள்ளும் அனைத்து பக்தர்களும் வரும் 5-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள் தங்கள் வீட்டிலேயே அம்மன் படத்தை வைத்து நைவேத்தியமாக தயிர்சாதம், இளநீர், கஞ்சி, நீர்-மோர் பானகம் முதலியனவற்றை வைத்து மாலையை கழற்றி, காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்ளலாம் என்று கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.