சிவபெருமானை வழிபடும் முக்கியமான விரதங்களில் ஒன்று சிவராத்திரி. மாதந் தோறும் சிவராத்திரி வரும் என்றாலும், மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் வரும் சிவராத்திரியே, ‘மகா சிவராத்திரி’ என்று அழைக்கப்படுகிறது. மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி வரும். சதுர்த்தசி திதியானது, சிவபெருமானுக்கு உரியது. சிவராத்திரியில் ஐந்து வகை இருக்கின்றன. அவை. நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி ஆகும். இந்த சிவராத்திரிகளைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்.
நித்திய சிவராத்திரி:- ஒரு வடத்தில் வரும் 24 சிவராத்திரிகளும், அதாவது தேய்பிறை சதுர்த்தியில் 12 சிவராத்திரி, வளர்பிறை சதுர்த்தசியில் 12 சிவராத்திரி ஆகியவை ‘நித்திய சிவராத்திரி’ என்று அழைக்கப்படுகின்றன.
யோக சிவராத்திரி:- திங்கட்கிழமையில் வரும் சிவராத்திரியை ‘யோக சிவராத்திரி’ என்று அழைப்பார்கள். இதிலும் நான்கு வகை உள்ளன. 1) திங்கட்கிழமை முழுமையில் அதாவது பகல் இரவு முழுமைக்கும் அமாவாசையாக இருக்கும். 2) திங்கட்கிழமை சூரிய அஸ்தமனம் முதல், 4 ஜாமமும் (மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை) தேய்பிறை சதுர்த்தசி திதி இருக்கும். 3) திங்கட்கிழமை இரவின் நான்காம் ஜாமத்தில் (நள்ளிரவு 3 மணி முதல் காலை 6 மணி வரை) அரை நாழிகையாவது அமாவாசை இருப்பது. 4) திங்கட்கிழமை அன்று இரவு நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்த்தசி அரை நாழிகையாவது இருப்பது என இவை அனைத்தும் ‘யோக சிவராத்திரி’யில்தான் வரும்.
பட்ச சிவராத்திரி:- தை மாதத்தில் வரும் தேய்பிறை பிரதமை திதியில் தொடங்கி, 14-வது நாளான சதுர்த்தசி வரை கடைப்பிடிப்பது ‘பட்ச சிவராத்திரி’ ஆகும். பிரதமை முதல் 13 நாட்கள் வரை ஒரு வேளை மட்டும் உணவருந்தியும், 14-வது நாளான சதுர்த்தசியில் முழு வேளையும் உணவருந்தாமலும் உபவாசம் இருப்பது ‘பட்ச சிவராத்திரி’ எனப்படும்.
மாத சிவராத்திரி:- மாதம் தோறும் அமாவாசை தினத்திற்கு முன்தினம் வரும், சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.
மகா சிவராத்திரி:- மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி அன்று வருவது ‘மகா சிவராத்திரி’ எனப்படும். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவார்கள் என்பது இதற்கான பலனாகும்.
இந்த ஐந்து வகை சிவராத்திரியில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்தாலே, பக்தர்களுக்கு அற்புதமான பலன் கிடைக்கும். ஐந்தையும் தவறாது கடைப்பிடித்து வருபவர்கள், சிவயோக பதவியை அடைவார்கள்.