*”தில்லை ஸ்ரீமூலநாதம் கும்பாபிசேகம்”*
ஒருமுறை பாற்கடலில் அரிதுயில் கொண்டிருந்த திருமாலின் உடலின் கனம் கூடியதனை, அவரை தாங்கும் ஆதிசேடன் உணர்ந்தார்,
*”ஆதிசேடன் ஆயிரம் தலைகளை உடைய பாம்பு, அந்த பாம்பின் மீது படுத்து கொண்டிருக்கும் ஸ்ரீகோவிந்தனுக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது”*, தன்னுடைய நாதனின் ஆனந்த கண்ணீரின் காரணம் பற்றி வினவியது ஆதிசேடனாம் பாம்பு, அதற்கு கோவிந்தர் கூறினார்
*”திருக்கயிலையில் எம்பெருமான் சிவபரம்பொருள் ஆனந்த கூத்து நிகழ்த்துகிறார், அதனை மனதால் தரிசித்தோம் அந்த ஆனந்தத்தால் கண்ணீர் பெருகியது எம் உடல் எடையும் கூடியது”* என்றார்!! அதனை கேட்ட ஆதிசேடன் தமக்கும் அந்த ஆனந்த கூத்தினை காண ஆவல் என்று விண்ணப்பம் செய்யவே,
*”பூலோகத்தில் தென் திசையில் தில்லை மரங்கள் நிறைந்த பகுதி ஒன்று உண்டு, அங்கு ஒரு சிவலிங்கம் சுயம்புவாக உள்ளது அவ்விடத்திற்கு வியாக்ரபுரம் என்றும் பெயர், அங்கு போய் “பதஞ்சலி” என்ற பெயரில் சிவபூசை செய்து தவம் மேற்கொண்டால் எம்பெருமானின் “ஆனந்த திருக்கூத்தினை” தரிசனம் செய்யலாம்”* என்று மகாவிஷ்ணு கூறி அனுப்புகிறார் ஆதிசேடனை!!
ஆதலால் அத்ரீ என்ற முனிவருக்கும் அனுசுயைக்கும் மகனாக பாதத்தில் அஞ்சலி செய்தபடி மனிதவடிவும் நாகவடிவும் கலந்து பிறந்த பதஞ்சலியார் ஒரு பிலத்தின் வழி புகுந்து *”தில்லை ஸ்ரீமூலநாதர் எழுந்தருளி இருக்கும் வியாக்ரபுரம் என்னும் தில்லை வனத்திற்கு வந்து சேர்ந்தார்”*
இந்நிலையில் அங்கு ஏற்கனவே ஒருவர் எம்பெருமானின் திருநடனம் காண தவம் புரிந்து வந்தார் அவர்தான் *”வியாக்ரபாதர்”*,
வியாக்ரம் என்றால் புலி, இவரது கால்கள் புலியின் கால்கள் போல இருந்தது,
அதிகாலை வேளையில் மரமேறி கொன்றை பூக்களை பறிக்க முடியவில்லை பனியினால் கால்கள் வழுக்ககிறது என்று இறைவனிடம் பலகாலம் தவம் செய்து மரமேற ஏதுவாய் தன் கால்களை புலியின் கால்கள் போல மாற்றி கொண்டமையால் *”வியாக்ரபாதர்”* எனப்பட்டார் அதனாலேயே அத்தலத்திற்கு வியாக்ரபுரம், புலியூர், பெரும்பற்ற புலியூர் என்றெல்லாம் பெயர்,
பிலத்தில் இருந்து வந்த பதஞ்சலியும் வியாக்ரபாதரும் அவர்களோடு கூட ஜைமினி என்ற முனிவரும் *”ஸ்ரீஉமைய பார்வதி அம்பிகையுடன் அமர்ந்த ஸ்ரீமூலநாதராம் லிங்கமூர்த்தியை பலகாலம் பூசித்து வந்தனர்”*
ஒரு தைப்பூச நந்நாளில் மூவருக்கும் இறைவன்
*”பிரம்ம விட்ணுக்கள் தாளமிருதங்கம் போட, நாரத தும்புரு கானங்கள் பாட, திரிசகஸ்ர முனிவர்கள் என்னும் சிவகனங்கள் துதி பாட ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பிகை உடனாகி ஸ்ரீ ஆனந்த தாண்டவ நடராஜ ராஜமூர்த்தியாக காட்சி நல்கினார்”*
அதுவே இன்றைய *”சிற்பர வியோமமாக தகராலய தத்துவ ஸ்வருபமாக தில்லை சிதம்பர ரகஸ்ய ஸ்தான சிற்றம்பலமாக நாம் தரிசிக்கும் சித்சபையாகும்”*
இறைவன் ஆடல் காட்டி ஆனந்த தாண்டவ மூர்த்தியாக ஸ்வருபம் கொண்டபின் உடன் வந்த *”திரிசகஸ்ர முனிவர்கள் என்னும் மூவாயிரம் சிவகனங்களையும் “தில்லைவாழ் மூவாயிரம் அந்தணர்களாக” இங்கேயே தங்கி இருந்து நடராஜ மூர்த்தியையும் ஸ்ரீமூலநாதரையும் பரிவார மூர்த்தங்களையும் பூசித்து வருமாறு கூறிச் சென்றனர் இறைவர்”*
அந்நிலையில் சிம்மவன்மன் என்ற மன்னவன் தன் தோஷம் நீங்கும் பொருட்டு வியாக்ர பாதரை அணுக, அவர் சிவகங்கை குளத்தில் நீராடி வழிபட்டு இறைவனுக்கு திருப்பணி கைங்கர்யம் செய்யப் பணிக்கவே நடராஜர் ஆலயம் முதன்முறையாக எழுந்தது என்பர்
அந்த மன்னவனுக்கு *”வியாக்ரமாகிய தன் அடையாளமான புலிக்கொடியை கொடுத்து உலகத்தை ஆளும் வல்லமையை அருளிச் செய்தார் வியாக்ரபாதர், இம்மன்னவர் வழி வந்தவர்களே புலிக்கொடியை கொண்டவர்களும் வழிவழிச் சைவர்களும் ஆன சோழமன்னவர்கள் ஆவார்கள்”*
இவர்களால் ஸ்ரீ நடராஜர் ஆலயம் எழும்பிய உடன் *”ஸ்ரீ நடராஜ மூர்த்தியை பூஜிக்கும் முறையான ஸ்ரீபதஞ்சலி சூக்த்ரம்”* என்பதனை பதஞ்சலி முனிவரும் தில்லை மூவாயிரவருக்கு அருளிச் சென்றனர்
ஸ்ரீ பதஞ்சலி முனிவர் ஆதிசேடன் ஆதலால் அவரது மூச்சுக்காற்று கொடிய விஷம் பொருந்தியது யாவரையும் நொடியில் தீய்த்து விட வல்லது, ஆதலால் தம் சிஷ்யர்களுக்கு திரையிட்டு கொண்டு உபதேசிப்பார் அவர் என்பார்கள்
அப்படிப்பட்டவர் அருளிய நூலின் வழி அவர் முதலாம் வியாக்ரபாதரும் ஜைமினியும் வழிபட்ட *”ஸ்ரீ உமைய பார்வதி சமேத ஸ்ரீ ஆதிமூல நாதர் சன்னதிக்கு சொர்ணபந்தன மகா கும்பாபிசேகமானது 05/02/20, தைமாதம் 29ஆம் நாள் நடைபெறுகிறது”*
அன்றயை நாளில் அன்பர்கள் இம்மகா வைபவத்தை கண்டின்புற்று ஸ்ரீ சபாநாயகரின் கிருபா கடாக்ஷத்திற்கு ஆளாகுவோம் ஆகுக!!