இந்தியாவிலேயே விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுவது மகாராஷ்டிராவில் தான். அவர்கள் கணேஷ் சதுர்த்தி என்று சிறப்பான அளவில் மிகப் பிரம்மாண்டமாக இவ்விழாவைக் கொண்டாடுவர்.
இங்கு திரும்பிய இடமெல்லாம் இவருக்கான கோயிலும் வழிபாடும் நிகழ்வதைக் காண முடியும். மங்கல்வார் என்னும் செவ்வாய்க்கிழமை உகந்தநாளாக எண்ணி ஆலய தரிசனம் செய்ய திரளாக விநாயகர் கோயிலுக்குச் செல்வார்கள்.
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.
இதனைத் தான் பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று வேடிக்கைப் பழமொழியாக நாட்டுப்புறத்தில் சொல்லுவர். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம்(நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். கும்பத்திலும், கூர்ச்சத்திலும், ஓமாக்கினியிலும் விநாயகப்பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடுவர். விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம்.
விநாயகருக்குரிய 11 விரதங்கள்
1.வெள்ளிக்கிழமை விரதம்
2. செவ்வாய்க்கிழமை விரதம்
3. சதுர்த்தி விரதம்
4. குமார சஷ்டி விரதம்
5. தூர்வா கணபதி விரதம்
6. சித்தி விநாயகர் விரதம்
7.துர்வாஷ்டமி விரதம்
8. நவராத்திரி விரதம்
9.வெள்ளிப்பிள்ளையார் விரதம்
10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
11. சங்கட ஹர சதுர்த்தி விரதம்
இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதம் மிகவும் முக்கியமானதாகும்.