தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மன். அவருக்கு திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் என்ற தலத்தில் தனிச் சன்னிதி அமைந்துள்ளது. திருப்பட்டூரில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு பிரம்ம நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் அருள்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கீழ்திசை நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் வேத மண்டபம், நாத மணடபம் ஆகியவற்றைக் கடந்ததும் அர்த்த மண்டபம் வரும். அதை அடுத்து கருவறை இருக்கிறது.
இங்கு லிங்கத் திருமேனியில், பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு ‘மண்டூகநாதர்’, ‘கயிலாசநாதர்’ போன்ற பெயர்களும் உள்ளன. இங்குள்ள அன்னை பிரம்ம நாயகிக்கு, ‘பராசக்தி’, ‘பிரம்ம சம்பத் கவுரி’ என்ற பெயர்களும் உண்டு. பல்லவர்கள் காலம் தொடங்கி, நாயக்க மன்னர்கள் காலம் வரை பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம் இது.
இந்த ஆலயத்தில் பங்குனி மாதத்தில் 15, 16, 17 ஆகிய தேதிகளில் காலை 6.30 மணியளவில், சூரியனின் பொற்கதிர்கள், பிரம்மபுரீஸ்வரர் மீது விழும். கோவில் உட்பிரகாரத்தில் மூலவருக்கு வடபுறத்தில் தியான நிலையில் ஆறடி உயரத்தில் கமண்டலத்துடன் தாமரை மீது பத்மாசன கோலத்தில் அருள்பாலிக்கிறார் பிரம்மன். இவருக்கு முன்பக்கம் மூன்று முகம் உள்ளது. பின்புறம் ஒரு முகம் ஆக நான்கு முகங் களுடன் காட்சியளிக்கிறார். வலது கையில் ருத்ராட்ச மாலையும், இடது கையில் கமண்டலத்தையும் ஏந்தியிருக்கிறார். இந்த பிரம்மதேவனுக்கு, பக்தர்கள் தாங்களே அரைத்து தரும் மஞ்சள் காப்பில் மங்களகரமாக அலங்காரம் செய்யப்படுகிறது.
திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரம்மன் சன்னிதி பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும். ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பது பழமொழி. குருவின் அதிதேவதையான பிரம்மாவின் பார்வை பட்டால் பக்தர்களுக்கு கோடானு கோடி நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
தல வரலாறு
படைக்கும் கடவுள் பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன. ஈசனை போல தனக்கும் ஐந்து தலை இருப்பதை எண்ணி அகங்காரம் கொண்டார் பிரம்மன். அழிக்கும் ஈசனை விட படைக்கும் தனக்கே சக்தி அதிகம் என்று இறுமாப்பு கொண்டார். ஈசனையும் மதிக்கத் தவறினார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையை கொய்து, படைப்பு தொழிலை தனதாக்கிக் கொண்டார்.
தன் தவறை உணர்ந்த பிரம்மன், பல தலங்களுக்குச் சென்று சிவலிங்கம் அமைத்து பூஜித்தார். பிரம்மன் வழிபட்ட பல தலங்களில், இறைவனின் திருநாமம் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்றே அழைக்கப்படுகிறது. அதன்படி திருப் பட்டூரில், துவாதச லிங்கத்தை (12 லிங்கங்கள்) பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார். பிரம்மனின் வழிபாட்டைக் கண்டு மனம் இளகிய சிவபெருமான், அவருக்கு மீண்டும் படைப்பாற்றலை வழங்கினார். அதோடு, இத்தலம் வந்து பிரம்மனை வழிபடுவோருக்கு, கூடுதல் பலன் கிடைக்கும் என்றும் ஆசி வழங்கினார்.
பிரம்மனுக்கு வரம் வழங்கியதால் இத்தலத்து இறைவன், ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்ற பெயரைப் பெற்றார். பிரம்மனுக்கு தேஜயை வழங்கியதால், இத்தல அன்னைக்கு ‘பிரம்ம சம்பத்கவுரி’ எனப் பெயர். பதஞ்சலி சித்தர் வாழ்ந்த திருத்தலம் திருப்பட்டூர். இவர் இந்த தலத்தில் லிங்க உருவில், பிரம்மாவின் அருகில் உள்ளார்.
வடக்கு பிரகாரத்தில் சண்டீகேஸ்வரர் சன்னிதியும், அதன் அருகே பாதாளகேஸ்வரர் சன்னிதியும் உள்ளது. சித்தர்கள் வாழ்ந்த தலங்களில் மட்டுமே பாதாளகேஸ்வரர் சன்னிதிகள் இருக்கும் என்பது வழக்கத்தில் காணப்படும் ஒன்று.
கோவில் உட்பிரகாரத்தில் கற்பக விநாயகர், பழமலை நாதர், கந்தபுரீஸ்வரர், கஜலட்சுமி, நடராஜர், கால பைரவர், சூரியன் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. இறைவனின் தேவக் கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன. அம்மன் சன்னிதிக்கு அருகே தாயுமானவர் சன்னிதி, பிரம்ம தீர்த்தம், பகுள தீர்த்தம் உள்ளன. அம்மன் சன்னிதியை அடுத்துள்ள வெளிவட்டத்தில் சப்தரிஷீஸ்வரர், காளத்திநாதர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேசுவரர், ஏகாம்பரேஸ்வரர், மண்டூக்யநாதர் ஆகியோரது தனித் தனி சன்னிதிகள் உள்ளன.
ஆலயத்தின் தல விருட்சம், மகிழ மரம். இந்த ஆலயத்தில் உள்ள நாத மண்டபத்தின் கல்தூண்களை தட்டினால் மனதை வருடும் மெல்லிய நாதம் வந்து நம்மை சிலிர்க்க வைக்கும். இங்கு அருள்பாலிக்கும் தன்னை தரிசித்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் தலையெழுத்தை நல்ல விதமாக மாற்றி எழுதி அவர்களது நல்வாழ்க்கைக்கு இங்குள்ள பிரம்மதேவன் வழிகோலுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
திருச்சி – பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது திருப்பட்டூர் என்ற இத்தலம்.