கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படிப்பட்ட பெரியோர்கள் வாக்கை மெய்பிக்கும் வகையில் இறைவனே தேடி வந்து குடியிருந்த ஒரு கிராமம் தான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கன்குறிச்சி எனும் சிறிய கிராமம். குடியமர்ந்த இறைவன் எம்பெருமான் சிவனின் மைந்தன் முருகப்பெருமான். அப்படிப்பட்ட இறைவன் தேடிவர காரணமாயிருந்தவர் “முருக பக்தர் வேலாயுதம்”
அருள்மிகு வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சிவகாசியிலிருந்து கழுகுமலைக்கு செல்வதற்கு முன்னர் 17 கி.மீ தொலைவில் உள்ள வெம்பக் கோட்டை அடுத்த துலுக்கன்குறிச்சி என்னும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது.
சுமார் 150 வருடங்களுக்கு முன், தேரியப்பர் – வீரம்மாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்த முருகபக்தர் வேலாயுதம் துலுக்கன் குறிச்சி கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவர் இளம் வயதிலிருந்தே கடவுள் மீது பக்தி கொண்டவர். அவர் பல வித்தைகளையும் கலைகளையும் கற்றுத்தேர்ந்தவர். முருக பக்தர் வேலாயுதம் தன்னுடைய வயலின் அருகில் வாழை மரங்களை வைத்து பராமரித்து வந்தார். அவரின் கனவில் இறைவன் காட்சி தந்து, “ வேலாயுதம்! நீ பராமரிக்கும் வாழை மரங்களில் இப்பொழுது எந்த வாழை மரத்தில் குலை தள்ளியிருக்கிறதோ அம்மரத்தில்தான் நான் இருக்கிறேன்.“ என்று கூறி மறைந்தார். திடீரென்று விழித்தெழுந்த வேலாயுதம் தன் கனவில் இறைவன் வந்து காட்சி தந்ததை பக்த பெருக்கோடு அகம் மகிழ்ந்தார்.
மறுநாள் வேலாயுதம் தனது வயலுக்கு அருகில் பராமரித்து வந்த வாழை மரங்களைச் சென்று பார்த்தபோது ஒரே ஒரு மரத்தில் மட்டுமே வாழை குலை தள்ளியிருந்தது. இறைவன் அம்மரத்தில் தான் தங்கியிருக்கிறான் என்பதனை உணர்ந்த முருகபக்தர் வேலாயுதம் அம்மரத்தை முருகனாக வணங்கி வந்தார். இதனைக் கேள்விபட்ட அக்கிராம மக்கள் அதனை வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி என்று அழைத்து வந்தனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இக்கிராமத்திற்கு அருகாமையில் உள்ள செவல்பட்டி, ஜமீனில் கணக்குப்பிள்ளை மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. திருமண வாசலில் வைக்க குலை தள்ளிய வாழைமரம் தேவைப்பட்டது. அதற்காக பணியாட்கள் பல ஊர்களில் தேடி அலைந்தனர். ஆனால் எங்குமே கிடைக்கவில்லை. துலுக்கன்குறிச்சி கிராமத்தில் மட்டுமே குலைதள்ளிய வாழைமரம் இருப்பதை ஜமீனிடம் கூறினர்.
ஜமீனும், “அப்படியானால் அதனை கொண்டு வாருங்கள்” என்றார் மாப்பிள்ளையான கணக்குப்பிள்ளையின் மகனும் தானே சென்று அதனைக் கொண்டு வருவதாகக் கூறிக்சென்றான். அவன் நேராக முருகபக்தர் வேலாயுதத்திடம் வந்து குலைதள்ளிய வாழைமரம் எங்கும் கிடைக்கவில்லை என்றும், அதனால் தங்களிடம் உள்ள குலைதள்ளிய வாழைமரத்தை தனக்கு அளிக்க வேண்டும். இது ஜமீனின் கட்டளை என்றும் தெரிவித்தான்.
ஆனால் வேலாயுதமோ, “அது மரமல்ல நான் வணங்கும் தெய்வம் முருகப்பெருமாள் குடியிருக்கும் கோவில் அதனை வெட்டக்கூடாது. அதற்குமேல் உங்கள் விருப்பம்” என்றார் இவரின் பேச்சைக் கேட்காமல் கணக்குப் பிள்ளையின் மகன் அரிவாள் எடுத்து முருகப்பெருமாள் குடிகொண்டிருந்த வாழைமரத்தை வெட்டினான். வாழை மரத்தில் இருந்து இரத்தம் வந்தது. அது மட்டுமல்லாமல் அதிலிருந்து நாகம் ஒன்று வந்து அரிவாளால் வெட்டிய கணக்கு பிள்ளையின் மகனை தீண்டியது. நாகம் தீண்டியதால் நுரைகக்கி கணக்குப் பிள்ளையின் மகன் இறந்தான்.
இச்செய்தி காட்டுத் தீ போல அப்பகுதி முழுவதும் பரவியது. அதேபோல் ஜமீனுக்கும், கணக்குப்பிள்ளைக்கும் இச்செய்தி எட்ட அவர்கள் நேராக வேலாயுதம் உள்ள வாழை மரத்தருகே வந்தனர். அங்கே கணக்குபிள்ளையின் மகன் இறந்து கிடந்தைக் கண்டு துடித்தனர். கணக்கு பிள்ளை தன் மகனைப்பார்த்து, “மணக் கோலத்தில் பார்ப்பேன் என்று நினைத்த என்மகனை பிணக்கோலத்தில் பார்க்கும் நிலை ஏற்பட்டதே” என்று கதறி அழுதார்.
கணக்குபிள்ளை முருகபக்தர் வேலாயுதமிடம் வந்து, “ஐயா! என் மகன் வாழைமர சுப்பிரமணிய சுவாமி குறித்து தெரியாமல் தவறு செய்து விட்டான். அதனால் அவன் உயிரையே இழக்க நேரிட்டது. தயவு கூர்ந்து என் பிள்ளையை காப்பாற்றித் தாருங்கள். அவனின் செயலுக்காக எங்கள் குடும்பமே மன்னிப்பு கேட்டுகிறோம்” என்று வேண்டினார். முருக பக்தர் வேலாயுதம் கணக்குபிள்ளையிடம். என் இறைவன் அறியாமல் செய்த பிழையை பொறுத்து காத்து அருள்வான். உங்கள் மகன் உயிர்தெழச் செய்ய என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்கிறேன். இறைவனும் நிச்சயம் காப்பாற்றுவான் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று கூறி வாழைமர சுப்பிரமணி முன்பு அமர்ந்து மன முருக வேண்டினார்.
சில நிமிடங்கள் கழித்து வேலாயுதம் எழுந்து இறந்த கிடந்த கணக்குபிள்ளை மகனின் அருகில் வந்தார். ஒரு பிரம்புக் குச்சியை எடுத்து இறைவனின் நாமமான “முருகா” “முருகா” “முருகா” என்று மூன்று முறை சொல்லி அவனின் மீது மூன்றுமுறை தடவினார். அப்பொழுது ‘திடீரென்று‘ இறந்து கிடந்த கணக்குப் பிள்ளையின் மகன் மெல்ல விழித்து எழுந்தான். கூடியிருந்த மக்கள் ஜமீன்தார் மற்றும் கணக்கு பிள்ளையின் குடும்பம் மொத்தபேரும் இந்த அதிசயத்தைக் கண்டு மெய்சிலிர்த்து “முருகா“ “முருகா“ என்று முருகனின் நாமத்தைச் சொன்னார்கள்.
இத்திருதலத்தில் தினமும் உலக நன்மைக்காக யாகம் செய்யப்படுகிறது. குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், திருமண பாக்கியம் மற்றும் தங்கள் குறைகள் தீர விரும்பும் பக்தர்கள் தங்கள் கையால் யாகம் செய்யும் அரிய வாய்ப்பும் இக்கோவிலில் வழங்கப்படுகிறது.