வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாகக் கருதப்படுகின்றது. அன்றைய தினம் முருகப்பெருமானை உள்ளத்தில் நினைத்து வழிபட்டால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையும்.
கந்தப்பெருமானின் சேவடியைப் போற்றி வணங்குவோருக்கு செல்வ நலம் அத்தனையும் கிடைக்கும். அள்ளிக் கொடுப்பதற்கு கரங்கள் அதிகமாக இருப்பதால் வரங்கள் அதிகம் கிடைக்கும். கூப்பிட்டதும் மற்றும் கும்பிட்டதும் பறந்து வந்து உதவி செய்ய மயில் வாகனம் அவரிடம் இருக்கின்றது. அவருக்குரிய திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும்.
விசாகத் திருநாளன்று இல்லத்து பூஜையறையில் குத்து விளக்கேற்றி வைத்து அலங்கார மேடையில் விநாயகப் பெருமான் படம் வைத்து அருகில் அவரது தாய், தந்தையரான உமாமகேஸ்வரர் படத்தையும் வைத்து நடுநாயகமாக முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் கூடிய படத்தையும் வைத்துப் பாடல்கள் பாடி வழிபாடு செய்யலாம்.
அப்படிப்பட்ட திருநாள் வைகாசி மாதம் 11-ந் தேதி (25.5.2021) செவ்வாய்க்கிழமை அன்று வருகின்றது. அன்றைய தினம் முழுமையாக முருகப்பெருமான் மீது நம்பிக்கை வைத்து வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
முருகப்பெருமானுக்கு செய்யும் அபிஷேகங்களில் ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் ஒவ்வொருவிதமான பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும்.
பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து பார்த்தால் ஆரோக்கியம் சீராகும்.
பச்சரிசி மாவால் அபிஷேகம் செய்து பார்த்தால் கடன்கள் தீரும். சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால் சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் இனிய சந்ததிகள் பிறக்கும். மாம்பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வநிலை உயரும்.
திருநீறால் அபிஷேகம் செய்து பார்த்தால் திக்கெட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிட்டும். அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால் சரும நோய்கள் அனைத்தும் தீர்ந்து போகும். பன்னீரால் அபிஷேகம் செய்தால் பார்போற்றும் வாழ்வு அமையும். தேன் அபிஷேகம் செய்தால் குரல் வளம் சிறப்பாக அமையும்.
வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க இயலும். பகை விலகும். பாசம் பெருகும். தொகை கிடைக்கும். தொல்லைகள் அகலும். அன்றைய தினம் இயன்றவரை அன்னதான கைங்கர்யம் செய்யலாம். குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவைகளையும் தானம் செய்யலாம். விசாகத்தன்று வேலனை வழிபட்டால் வெற்றி கிடைக்கும். குமரனை வழிபட்டால் குறைகள் தீரும்.