‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பதுபோல, வேல் என்பது முருகப்பெருமானின் வழிபாட்டில் முன்னோடியாக இருந்திருக்கிறது. தொடக்க காலங்களில் அனைத்து பகுதிகளிலும் வேல்தான் வழிபாட்டிற்குரியதாக இருந்தது என்பதை பல ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. ஏனெனில் தமிழன், அந்த வேலை ஞானத்தின் பிறப்பிடமாக கருதினான். வேலினை ஆதித் தமிழன் வடிவமைத்ததே ஞானத்தின் உருவமாகத்தான் என்பதை, அந்த வேலை நாம் கூர்ந்து கவனித்தாலே உணர்ந்துகொள்ள முடியும். ஒரு மனிதனுடைய அறிவு என்பது வேலின் அடிப்பகுதியைப் போல ஆழ்ந்து இருக்க வேண்டும். அப்படி ஆழ்ந்திருக்கும் அறிவானது, மேற்பகுதியைப் போல நன்றாக அகன்றும் இருக்க வேண்டும். அதோடு அந்த அறிவானது, வேலின் முனைப்பகுதி போல கூர்மையாகவும் இருக்க வேண்டும். இப்படி அமைந்த காரணத்தால்தான், வேலை ஞானத்தின் பிறப்பிடமாக முன்னோர்கள் அமைத்தார்கள்.
அந்த வேல்தான், பல ஆலயங்களிலும் முன் காலத்தில் முதன்மை வழிபாட்டுக்குரியதாக இருந்திருக்கிறது. திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரியில் உள்ள ‘முருகன் குன்றம்’ என்ற திருத்தலம், வடகோடியான சென்னை குரோம்பேட்டையில் உள்ள ‘குமரன் குன்றம்’ என்ற திருத்தலம் என பல இடங்களிலும் வேல்தான் பிரதான வழிபாட்டுக்குரியதாக இருந்துள்ளது. காலப்போக்கில்தான் இங்கெல்லாம், முருகனின் திருவுருவங்கள் உருவாக்கப்பட்டும், பிரதிஷ்டை செய்யப்பட்டும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சொர்ணமலை என்ற திருத்தலத்தில் குன்றின் மீது அமைந்த முருகன் ஆலயத்தில் வேல் வழிபாடு இன்றுவரை வழக்கத்தில் இருப்பது சிறப்புக்குரியதாகும்.