மயிலாப்பூரின் காவல் தெய்வமாக கருதப்படுபவள், கோலவிழி அம்மன். இந்த அம்மன் கோவிலின் அருகில்தான், வாலீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது.
இது சப்த சிவாலயங்களில் 5-வது தலம். கவுதம முனிவர் வழிபட்டதாக சொல்லப்படும் இந்த சிவாலயம், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராமாயணத்தில் கிஷ்கிந்தையை ஆட்சி செய்ததாக கூறப்படும் வாலி என்னும் வானர அரசன் வழிபாடு செய்த தலம் இதுவாகும்.
இத்தல இறைவனை வழிபட்டுதான், பல அரிய வரங்களை வாலி பெற்றதாக சொல்லப்படுகிறது. எனவே தான் இத்தல இறைவன் ‘வாலீஸ்வரர்’ ஆனார். நிலத்தின் அடியில் இருந்து வெளிப்பட்ட பஞ்ச லிங்கங்கள் இந்தக் கோவிலின் சிறப்புகளில் ஒன்றாக உள்ளது.