எல்லா சிவாலயங்களிலும் பிரதோஷ தினத்தன்று சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், சிவாலயம் சென்று பிரதோஷ தரிசனம் செய்வார்கள் பக்தர்கள்.
இதேபோல், நரசிம்மருக்கும் பிரதோஷ பூஜை உகந்தது. அந்த நாளில் நரசிம்மப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இரணியன் வித்தியாசமாக வரம் ஒன்றை வாங்கியிருந்தான். அதாவது என்னைக் கொல்லும் சக்தி மனிதருக்கும் இருக்கக் கூடாது; மிருகத்துக்கும் இருக்கக் கூடாது என்று வரம் வாங்கியிருந்தான். அதனால்தான் மனித உடலும் சிங்க முகமும் கொண்டு அவதரித்தார் நரசிம்மர்.
அடுத்து, வீட்டுக்குள்ளேயும் கொல்லக் கூடாது. வெளியேயும் சாகடிக்கக் கூடாது எனும் வரத்தைக் கேட்டிருந்தான். அதனால்தான் இரணியனை வீட்டுக்குள்ளேயும் இல்லாமல், வெளியேயும் இல்லாமல், வாசலுக்குக் கொண்டுவந்து, மடியில் கிடத்தி சம்ஹரித்தார் பெருமாள்.
என்னைக் கொல்லும் நேரம் காலையாகவும் இருக்கக் கூடாது இரவாகவும் இருக்கக் கூடாது என்று வரம் வாங்கி ஆணவத்துடன் திரிந்தான். அதனால்தான் காலையும் இல்லாமல் இருளும் இல்லாத அந்திசாயும் வேளையாகப் பார்த்து, நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது.
அப்படி நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது… மாலை 4.30 முதல் 6 மணிக்குள்ளான நேரம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில்… அவதரித்தது ஓர் பிரதோஷ நாளில் என்றும் சொல்வார்கள்.
ஆகவே, பிரதோஷ நாளின் போது, நரசிம்மர் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
இன்று பிரதோஷம்
<<ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி>>
மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே:
‘நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே, அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’. நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்.
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !