ஓம், ஓம் என்று உளமாரக் கூறி இதை வணங்கினால் நன்மை கிடைப்பதை போல் இந்த ஓங்கார ஒலியின் பிரதி பலிப்பான ஸ்ரீ சக்கரத்தை வரைந்து வணங்கி வந்தாலும் நன்மைகளே கிடைக்கும் என்பதை ஜெர்மன் நாட்டு விஞ்ஞானியான எர்னஸ்ட் சால்திரி தெளிவுப்படுத்தியுள்ளார்.
அனைத்து சக்திகளையும் கொண்ட இந்த சக்கரம் நன்மைகள் அனைத்தையும் தந்து நம்மை நன்கு வாழ வைக்கும் சர்வ வல்லமையுள்ளதாகும். சிவபெருமானின் அருளும் அன்னையாம் பார்வதிதேவியின் அருளும் குறைவறக் கிடைப்பதற்கு இந்த சக்கர விரத வழிபாடு துணை நிற்கும்.
சிவரூபமான சக்கரங்கள் நான்கு. சக்தி ரூபமான சக்கரங்கள் ஐந்து, இவைகளுடன் ஒன்பது மூலைக்காரணமான சக்கரங்களுடன் எட்டுத் தளங்கள் மட்டுமன்றி இன்னும் பதினாறு தளங்களும், மூன்று மேகலைகளும், மூன்று பூபுரரேகைகளும் ஆக மொத்தம் நாற்பத்து நான்கு தத்துவங்களை உள்ளடக்கியது இந்த ஸ்ரீ சக்கரமாகும்.
அதிகாலை வேளையில் கிழக்கு முகமமாக அமர்ந்து எட்டு தினங்கள் தினந்தோறும் ஆயிரம் முறை இந்த மந்திரத்தை உச்சரித்து வர நன்மைகள் யாவும் வந்து சேரும். பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் இந்த சக்கரத்தை வெள்ளித் தகட்டில் அல்லது தங்கத் தகட்டில் பொறித்து வணங்கிவர, நல்ல அறிவும் நீண்ட ஆயுளுடன் கூடிய பிள்ளைகள் பிறப்பார்கள்.
வெல்லம் இட்ட பொங்கல் அல்லது பாயாசம் வைத்து பராசக்தியை விரதம் இருந்து வழிபட நன்மைகள் வந்தடையும்.
பசு வெண்ணையை தட்டில் பரப்பி வைத்து இந்த சக்கரம் பொறித்த தட்டை வெண்ணையில் பதித்து தேவியை வணங்கி துதித்த பின்னர் இந்த வெண்ணெயைபிரசாதமாக உட்கொள்பவர்கள் எல்லா நன்மைகளையும் பெறுவதுடன் நிச்சயம் புத்திர பாக்கியத்தையும் பெறுவார்கள்.
சக்திக்குரிய ஒன்று கோண வடிவமாகவும், வட்ட வடிவமாகவும் உருப்பெறுகிறது. இது தான் யந்த்ரம் என்று கூறப்படுகிறது. மந்திரத்தை பற்றி ஓரளவு அறிந்த நாம் புறவழிப் பாடான விக்கிரக வழிபாட்டைக் காட்டிலும் சிறப்பானதாக அமைவது தான் சக்கரமாகும் என்பதையும் உணர வேண்டும். சக்கரத்தின் மூலம் எல்லைக்குள் அடக்கமாகின்றான் என்பதே தத்துவம்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு சக்கரமுள்ளது. குறிப்பிட்ட ஒவ்வொரு சக்கரத்தின் மூலம் அந்த தெய்வத்தின் அருளைப் பெற முடியும். அதாவது அந்தச் சக்கரத்தை முறைப்படி பூஜிப்பதன் மூலம் இது சாத்தியமாகும்.
சக்கர வழிபாட்டில் மிகுந்த சக்தி வாய்ந்ததாக கருதப்படுவது ஸ்ரீ சக்கர வழிபாடாகும். எனவே தான், ஆதி சங்கரரர் அவர்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த சக்கரத்தை நிறுவி வழிபட்டு வந்தார். பல மடங்களை நிறுவி அங்கெல்லாம் இந்த ஸ்ரீ சக்கரத்தை இடம் பெறச் செய்தார்.
வழிப்பட்டு வருபவர்களுக்கு மாபெரும் சக்தியை தருவதுடன், வாழ்க்கையில் அனைத்துச் செல்வங்களையும் வழங்கி இறுதிவரை நம்மை மேன்மையுற செய்யும் வகையில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீ சக்கரம்.