தேய்பிறை, வளர்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை ஏகாதசி வரும். அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு அடுத்ததாக 11-ம் நாள் வருவது ஏகாதசி திதி. ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். சில வருடங்களில் ஒரு ஏகாதசி அதிகமாகி 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. பெருமாளை வழிபட உகந்த திதியாக ஏகாதசி இருக்கிறது. அதிலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. இதனை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள்.
ஒருமுறை பார்வதிதேவி, “மிகச்சிறந்த விரதம் எது?” என சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு சிவபெருமான், “தேவி! ஏகாதசி விரதமே, விரதங்களில் சிறந்தது. இவ்விரதம் பாவங்களைப் போக்கும் விரதமாகும். இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களும் இவ்விரதத்தை அனுசரித்து, விஷ்ணுவின் அருளைப் பெறுவதால் இவ்விரதத்திற்கு ‘வைகுண்ட முக்கோடி ஏகாதசி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. ஏகாதசி நாளில் உணவு இல்லாமல் உபவாசம் இருப்பவர், எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு மோட்ச கதியை பெறுவார்’’ என்றார்.
ஏகாதசி பிறந்த கதை
முரன் என்ற அசுரன், பல வரங்களைப் பெற்று தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். இதனால் அவதிப்பட்டு வந்த தேவர்களும், முனிவர்களும் தங்களை காத்து அருளும்படி மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். இதையடுத்து முரனுடன் போரிட முன்வந்தார், நாராயணர். அவர்கள் இருவருக்குமான போர், பல காலம் நீடித்தது. போரில் முன்னிலை பெற்ற நாராயணர், முரனுக்கு தன் தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் ஒரு குகையில் சென்று ஓய்வெடுத்தார்.
நாராயணர், ஒரு குகைக்குள் தங்கியிருப்பதை அறிந்த முரன், அங்கு வந்து வாளை எடுத்து கண் மூடி இருந்த நாராயணரை கொல்ல முயன்றான். அப்போது நாராயணரின் மேனியில் இருந்து பெண் வடிவம் கொண்ட சக்தியானவள் வெளிப்பட்டாள். அவள் முரனுடன் போரிட்டு வென்றாள். அசுரனை வென்ற பெண்ணுக்கு ‘ஏகாதசி’ என்று பெயர் சூட்டினார், நாராயணர். அசுரனை வென்ற நாள் ‘ஏகாதசி’ என அழைக்கப்படும் என்றும், அன்று தன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பதவி அளிப்பதாகவும் வரமளித்தார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி தினமாகும்.
ஏகாதசி விரத முறை
ஏகாதசி விரதம் இருப்பவர்கள், முதல்நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும். அன்று துளசி இலை பறிக்கக்கூடாது. பூஜைக்குரிய துளசியை முதல்நாளே பறித்துவிட வேண்டும். மறுநாள் துவாதசியன்று சூரிய உதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். ‘பாரணை’ என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும்.
அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் உணவில் இடம்பெறுதல் அவசியம். அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து, ஒரு ஏழைக்கு தானம் செய்த பிறகு, சாப்பாட்டை முடித்து விட வேண்டும். சூரிய உதயத்திற்குள் சாப்பிடுவது மிகவும் நல்லது. அன்று பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் செல்லும் பாக்கியம் பெறுவர்.
வைகுண்ட ஏகாதசி அன்று, அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடத்தப்படும். இந்த விழா அதிகாலை வேளையில் நடைபெறும். இதில் மக்கள் பலரும் கலந்து கொண்டு, இறைவனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை கண்டுகளித்து, சொர்க்கவாசலின் வழியாக வெளியே வருவார்கள்.
இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும். சகல செல்வங்களும் உண்டாகும். மேலும், பகைவர்களின் பலம் குறையும்.
ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகள்
உற்பத்தி ஏகாதசி, மோட்ச ஏகாதசி, சபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, ஜயா ஏகாதசி, விஜயா ஏகாதசி, ஆமலகி ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி, காமதா ஏகாதசி, வரூதிநி ஏகாதசி, மோகினி ஏகாதசி, அபரா ஏகாதசி, நிர்ஜலா ஏகாதசி, யோகினி ஏகாதசி, சயினி ஏகாதசி, காமிகா ஏகாதசி, புத்ர(ஜா)தா ஏகாதசி, அஜா ஏகாதசி, பத்மநாபா ஏகாதசி, இந்திரா ஏகாதசி, பாபாங்குசா ஏகாதசி, ரமா ஏகாதசி, ப்ரபோதினி ஏகாதசி, கமலா ஏகாதசி.